Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 மார்ச், 2020

பாண்டவர்களை சந்திக்கும் வியாசர்...!


கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். வன வாசத்தில் பாண்டவர்களுக்கு ஓர் நிபந்தனை இருந்தது. அவர்கள் தங்கியிருக்கும் வனத்தில் மக்கள் யாரும் அவர்களை சந்திக்க கூடாது என்பது தான். பாண்டவர்கள் இதை மனதில் கொண்டு த்வைத வனத்தை தேர்ந்தெடுத்து அங்கு சென்றனர். பாண்டவர்கள் த்வைத வனத்திற்கு சென்று அங்கு நாட்களை கழித்தனர். ஒரு முறை மார்க்கண்டேய மகரிஷி பாண்டவர்களை காண அங்கு வந்தார். மார்க்கண்டேய மகரிஷி தலைசிறந்தவர். மரணத்தை வென்று யுகங்கள் கடந்து வாழ்ந்து வருபவர்.

மார்க்கண்டேய மகரிஷி பற்றி

மிருகண்டு முனிவர் மருத்துவவதியை திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. சிவபெருமானை மனமுருகி தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர். மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் ஜோதிடம் பார்க்கப்பட்டபோது பதினாறு வயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. பெற்றோர் அழுதனர். புலம்பினர். விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது. சிவபெருமானிடம் மார்க்கண்டேயர் பூரணமாகச் சரணாகதி அடைந்தார்.

பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூஜையில் தன்னை மறந்து உட்கார்ந்து இருந்தார். தனது தவத்தின் வலிமையால் எமனைப் பார்க்க முடிந்தது. உடனே, அப்படியே சிவலிங்கத்தை கட்டியணைத்துக் கொண்டார். எமனும் தன் பாசக்கயிற்றை வீசினான். அது சிவலிங்கத்தின் மீதும் சேர்ந்து விழுந்தது. கயிற்றை பலமாக இழுத்தான். ஆனால், எமனால் இழுக்க முடியவில்லை. தன்மீது பாசக்கயிற்றை வீசி இழுத்த எமனைக் கண்டு கோபம் கொண்டார் சிவபெருமான். சட்டென்று லிங்கத்திலிருந்து பிளந்து வெளியே வந்தார். கோபத்தில் கர்ஜித்தவர் எமனை எட்டி உதைத்தார். அதன் பின்னரும் கோபம் தணியாமல் தன் கையில் இருந்த சூலாயுதத்தினால் காலனைச் சம்ஹாரம் செய்தார். அதன் பிறகு மார்க்கண்டேயனை அன்புடன் தடவி, என்றும் பதினாறாக இருக்கக் கடவாய் என்று சிரஞ்சீவி பட்டம் அளித்தார்.

எமன் இறந்ததால் உயிர்கள் பல்கிப் பெருகின. பூமாதேவியால் பூமியின் பாரத்தை தாங்க முடியவில்லை. எமனுக்கு உயிர்ப் பிச்சை அளியுங்கள் என்று அவள் இறைவனிடம் வேண்டினாள். சிவபெருமானும் எமனுக்கு உயிரை திருப்பி அளித்தார்.

இத்தகைய மகரிஷி வருகை தந்தது பாண்டவர்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது. மரவுரி அணிந்திருந்த பாண்டவர்களை கண்ட மகரிஷி புன்னகைத்தார். இதைப்பார்த்த பீமன் கோபம் கொண்டான். மகரிஷியிடம், மகரிஷி! எங்களை பார்த்து தங்களால் எவ்வாறு சிரிக்க முடிகின்றது. எங்களின் நிலையை கண்டு தாங்கள் ஏளனம் செய்கின்றீர்களா? எனக் கேட்டான். மகரிஷி, பீமா! என் சிரிப்பின் அர்த்தத்தை நீ புரிந்துக் கொள்ளவில்லை. முன்பு இராமர், சீதை, இலட்சுமணனை மரவுரி அணிந்து வனத்தில் கண்டேன். அதேபோல் இன்று உங்களையும் கண்டேன். தர்மநெறியில் நிற்பவர்களுக்கு ஏற்படும் சோதனையை நினைத்து புன்னகைத்தேன் என்றார்.

பாண்டவர்கள், மகரிஷியே! தாங்கள் எங்களை ஸ்ரீ  இராமருடன் ஒப்பிட்டு பேசியது எங்களுக்கு பெருமை அளிக்கிறது எனக் கூறினர். அதன் பிறகு, மார்க்கண்டேய மகரிஷி பாண்டவர்களுக்கு தர்மநெறிகளை உபதேசித்துவிட்டுச் சென்றார். ஒரு சமயம் பாண்டவர்களுக்கிடையே ஒரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தது. பீமன், நாம் எவ்வளவு நாட்களுக்கு தான் பகைவரின் சொற்களுக்கு அடிமைப்பட்டு இப்படியே இருப்பது. நம் பகைவர்களை எதிர்த்து நாம் போரிட வேண்டாமா? எனக் கூறினான். பீமனின் யோசனை அனைவருக்கும் சரி எனப்பட்டது. ஆனால் யுதிஷ்டிரன், நம் வனவாசத்தின் 13 ஆண்டுகள் முடியாமல் மேற்கொண்டு எந்த செயலையும் செய்ய முடியாது என தீர்க்கமாக கூறினான். அப்பொழுது வியாசர் முனிவர் அவர்கள் முன் தோன்றினார்.

பாண்டவர்களின் நோக்கத்தை அறிந்த வியாச முனிவர், பாண்டவர்களே! உங்களிடம் வீரமும், திறமையும் இருக்கின்றது. கௌரவர்களால் நீங்கள் இந்த நிலைமைக்கு உள்ளாகி இருக்கின்றீர்கள். ஆனால் மக்களின் மனதில் நீங்கள் நற்பெயருடன் விளங்குகிறீர்கள். துரியோதனன், அரியணையில் வீற்றிருந்தாலும் அவனை மக்கள் தூற்ற தான் செய்கிறார்கள். அஸ்தினாபுரத்தில் பீஷ்மர், துரோணர், கிருபர் முதலானோர் இருக்கின்றனர். அவர்களை யுத்தத்தில் வெல்லுதல் எளிதான விஷயமல்ல. அவர்களை வெல்ல நீங்கள் இன்னும் விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்றார். அர்ஜூனன், வியாச முனிவரே! எங்களின் நோக்கம் யுத்தம் அல்ல. துரியோதனனை வெல்வது தான். யுத்தத்தால் மட்டுமே அவர்களை வெல்ல முடியும் என்பது எங்களின் கருத்தாகும் என்றான்.

வியாசர், நான் ஞானத்தால் யுத்தம் நிகழும் என்பதை உணர்ந்தேன். யுத்தத்தில் வீரம் மட்டும் தான் பேச வேண்டும். யுத்த களத்தில் பாசத்திற்கோ, உணர்ச்சிகளுக்கோ இடம் தரக்கூடாது. அதனால் வனவாச காலத்தை உங்களை வலிமைப்படுத்த மாற்றிக் கொள்ளுங்கள். புலன்களை அடக்கி ஆள்பவனாலேயே புவனங்களையும் அடக்கியாள முடியும். நான் இந்த வேளையில் புலன்களை அடக்கப் பயன்படும் மந்திரத்தை தர்மனுக்கு குருவாக இருந்து உபதேசிக்கிறேன். தர்மனுக்கு பிரதிஸ்மிருதி என்னும் மந்திரத்தை உபதேசித்தார். அதன் பிறகு வியாசர் அவர்களிடம் இருந்து விடைப்பெற்று சென்றார். மந்திரத்தை உபதேசித்த பிறகு தர்மன் புத்துணர்ச்சி பெற்றது போல் அர்ஜூனனை பார்த்தான்.

அர்ஜூனன், வில்வித்தையில் கற்று தேர்ந்தவன். அர்ஜூனனுக்கு அஸ்திரங்கள் வசப்படுவது தான் சரியானது. அதனால் வியாசர் உபதேசித்த மந்திரத்தை அர்ஜுனனுக்கு உபதேசிக்க நினைக்கிறேன். பீமன் பலத்தில் சிறந்தவன். அதனால் பீமா உனக்கு அஸ்திரங்கள் தேவைப்படாது. நகுலன், சகாதேவன் இருவருக்கும் அஸ்திரங்கள் தேவைப்படாது. அதனால் இந்த மந்திரத்தை அர்ஜூனனுக்கு உபதேசிப்பது தான் சிறந்தது என கூறிவிட்டு அர்ஜூனனுக்கு அம்மந்திரத்தை உபதேசித்தார். யுதிஷ்டிரன், அர்ஜூனா! நீ இமயம் சென்று தவம் இருந்து இம்மந்திரத்தை உச்சரித்தால் சிவப்பெருமானும், தேவேந்தர்களும் உனக்கு அஸ்திரங்களை வழங்குவார்கள். சிவப்பெருமான் உனக்கு பாசுபதாஸ்திரத்தை அருள்வார் எனக் கூறினான்.

அதன் பிறகு அர்ஜூனன் அவர்களிடம் இருந்து விடைப்பெற்று இமயமலை நோக்கிச் சென்றான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக