திங்கள், 9 மார்ச், 2020

திருமண தடை நீக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர்

திருமண தடை நீக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர்

ஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. யாகங்களில் ஊற்றப்படும் நெய்யைச் சாப்பிட்டதால் வயிற்று வலியும், அதில் போடப்படும் பொருட்களைச் சுட்டெரித்ததால் பாவமும் ஏற்பட... நொந்து போனார் அக்னி பகவான். சிவனிடம் முறையிட்டார். இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தம் ஏற்படுத்தி, அந்த நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டார். வரம் பெற்றார். பிறகு, சிவனாரிடம், இந்த தலத்துக்கு வந்து வணங்கும் பக்தர்களது வலியையும் பாவங்களையும் போக்கியருள வேண்டும் என அக்னிதேவன் வேண்டுகோள் விடுக்க, ‘அப்படியே ஆகட்டும்’ என அருளினார் சிவனார்.

இங்கேயுள்ள ஈசனுக்கு தீயாடிப்பர், அழலாடியப்பர், வன்னிவன நாதர், அக்னீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அழகர்மங்கை, வார் கொண்ட முலையாள், சவுந்தரநாயகி என்றும் பெயர்கள் உண்டு. ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்தத் தலம், இரண்டு கோபுரங்களும் ஐந்து சுற்றுகளும் கொண்டு, அழகுறக் காட்சி தருகிறது. திருநாவுக்கரசரின் பதிகத்தைக் கேட்டு மகிழ, செவி சாய்த்து காட்சி தரும் கோட்டை விநாயகர் இங்கு உள்ளார். ரோமரிஷி வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று, மகா சிவராத்திரி நாளில், பிரம்மா இங்கு வந்து வழிபட்டுப் பலன் பெற்றார் என்கிறது தல புராணம்.

இங்கே, பங்குனி உத்திரத் திருநாள் விசேஷம்! இந்த நாளில், அக்னித் தீர்த்தத்தில் (குளம் தற்போது கிணறாகி விட்டது) நீராடி, ஸ்ரீஅக்னீஸ்வரரை வழிபட்டால், இம்மையில் எல்லாச் செல்வங்களும் மறுமையில் நற்பிறப்பும் பெற்று, அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத்தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.

பங்குனியில் பத்து நாள் பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடைபெறுகிறது. உத்திர நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காவிரியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படும். பத்து நாட்களும், சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த நாளில் தரிசித்து வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்