Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 ஜூன், 2020

ஹூண்டாய் எலான்ட்ரா பிஎஸ்6 டீசல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பிஎஸ்6 டீசல் எஞ்சினுடன் ஹூண்டாய் எலான்ட்ரா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் எக்ஸ்கியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் எலான்ட்ரா கார் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொண்ட மாடல் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வை வழங்கும் விதத்தில், பிஎஸ்6 தரத்திற்கு இணையான டீசல் எஞ்சின் தேர்வில் ஹூண்டாய் எலான்ட்ரா கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எலான்ட்ரா பிஎஸ்6 டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இந்தியாவில் வந்த ஹூண்டாய் எலான்ட்ரா கார் அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்6 பெட்ரோல் மாடலில் வழங்கப்படும் அனைத்து வசதிகளும் டீசல் மாடலிலும் இடம்பெற்றுள்ளது.

எல்இடி க்வாட் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள், டியூவல் டோன் பம்பர் ஆகியவை இந்த காரில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூலிங்க் செயலி மூலமாக ஸ்மார்ட்ஃபோன், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இணைக்கும் வசதி, வயர்லெஸ் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், க்ரோம் கைப்பிடிகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

இந்த காரில் ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன்புற, பின்புற பார்க்கிங் சென்சார்கள், எமெர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் எலான்ட்ரா காரின் பிஎஸ்6 டீசல் மாடலின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்கள் தலா ஒரே ஒரு வேரியண்ட் தேர்வில் கிடைக்கும். எலான்ட்ரா எஸ்எக்ஸ் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட் ரூ.18.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், எஸ்எக்ஸ் ஆப்ஷனல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ.20.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

இதனிடையே, பிஎஸ்6 பெட்ரோல் மாடலின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இனி பிஎஸ்6 பெட்ரோல் எலான்ட்ரா காரின் எஸ்எக்ஸ் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட் ரூ.17.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இதுவரை இந்த வேரியண்ட் ரூ.18.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்பட்டது.

மறுபுறத்தில் எஸ்எக்ஸ் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ.18.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், எஸ்எக்ஸ் ஆப்ஷனல் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.19.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக