தற்போது இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் பொருட்களை அதிகளவு மக்கள் விரும்பவில்லை என சமூக வலைதளத்தில் பலர் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதேபோல டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் செயலிகளை மக்கள் டெலிட் செய்த வண்ணம் உள்ளனர்.
மேலும் சிலர் சீனத் தயாரிப்பு டிவி, ஸ்மார்ட்போன் போன்றவற்றை தரையில் போட்டு அடித்து நொறுக்கிய வீடியோ பதிவுகளை நம்மால் காண முடிந்தது. இதுபோன்று ஏற்கனவே வாங்கிய பொருள்களை உடைப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, ஆனாலும் மக்கள் தங்களது கோபத்தைப் பதிவுசெய்ய அது ஒரு கருவியாகியிருக்கிறது. நமது எல்லையில் நடந்த அத்துமீறல்களைக் கண்டுபிடித்து அதைப் புறக்கணிப்பதற்கான வழிகளை மக்கள் தேடி வருகின்றனர்.
அதன்படி பொருளாதார ரீதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்திய சந்தையில் சின்ன பொம்மைகள் தொடங்கி டிவி,ஸ்மார்ட்போன்கள் வரை சீன பொருள்கள் அதிக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. நாம் வாங்கும் பல பொருள்கள் சீனப் பொருள்கள் எனத் தெரியாமல்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.
மேட் இன் இந்தியா
இதை உணர்ந்து நொய்டாவைச் சேர்ந்த ஆப் வடிவமைப்பாளர் ஒருவர் மேட் இன் இந்தியா (Made In India) ஆப்பை அறிமுகம் செய்துள்ளார் இந்த ஆப் வசதியைக் கொண்டு ஒரு தயாரிப்பு எந்த நாட்டினுடையது என்பதை விரைவாக அறியலாம். இந்த ஆப் இப்போது பிரபலமாகி பலராலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுவருகிறது.
இந்த மேட் இன் இந்தியா ஆப் வசதி ஆனது கூகுள் ப்ளே ஸ்டோரில் (The91Apps) கிடைக்கிறது. இதை உபயோகிக்க உங்கள் மொபைலின் கேமரா அனுமிதி மட்டும் கேட்கும் இந்த ஆப். மேலும் நாம் வாங்கப்போகும் ஒரு பொருளில் உள்ள பார்கோடை இந்த செயலி மூலம் படம் பிடித்தால் உடனே நமக்கு அந்தப் பொருள் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று காட்டிவிடும்.
உதரணமாக சீனாவைப் பூர்வீகமாகக்கொண்ட மொபைல் ஒன்றின் பெட்டியில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்தால் உடனே அது சீனாவைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுவிடும். மேலும் இந்த ஆப் ஒரு பொருள் எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்தது என்பதையும் காட்டும். பின்பு எங்கு தயாரித்தது எனக் காட்டாது. உதரணமாக சாம்சங் போன் ஒன்று டெல்லியில் தயாரிக்கப்பட்டது என வைத்துக்கொள்வோம், ஆனால் இந்த ஆப்பில் ஸ்கேன் செய்தால் தென் கொரியா என்று சாம்சங்கின் பூர்வீக நாட்டையே காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட் இன் இந்தியா ஆப் வசதி ஆனது கூகுள் ப்ளே ஸ்டோரின் எந்த ஒரு ப்ரைவசி கொள்கையும் மீறவில்லை. இதனால் இது நீக்கப்பட வாய்ப்புகள் இல்லை.மேலும் அமேசான் பிளிப்கார்ட் போன்ற தளங்களும் ஒரு தயாரிப்பு எந்த நாட்டை சேர்ந்தது எனத் தங்கள் தளத்திலேயே குறிப்பிட வேண்டியது இருக்கும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக