Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 22 ஜூன், 2020

தொலைந்த மூக்கு

ஒரு ஊரில் கார்த்திக் - புவனா என்ற அண்ணன், தங்கை இருந்தார்கள். இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் கார்த்திக் மகா குறும்பன். அவன் இரண்டாம் வகுப்பு படிக்கின்றான். தங்கை புவனா இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை. சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் தான் இருக்கிறார்கள். மொத்தம் ஐந்து பேர் இருக்கிறார்கள்.

 ஒரு நாள் காலையில் அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றுவிட்டனர். தாத்தா வெளியே கிளம்பினார். கார்த்திக் இங்க வா. இரண்டு பேரும் சண்டை போட்டுக்க கூடாது. தாத்தா சீக்கிரம் வந்தர்ரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

 பின்னர் கார்த்திக்கும், புவனாவும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது திடீர் என்று கார்த்திக் உஷ் உஷ் என்று கத்தியபடி ஓடினான். பயத்து போன புவனா அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். ஒரு பருந்து வந்தது பார்த்தியா? பெரிய பருந்து. அச்சோ அப்புறம்? ஏன் விரட்டிட்டு போனீங்க? அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துகிட்டு போயிடுச்சு. அதுனாலதான் துரத்திகிட்டு ஓடினேன். ஆனா அதுக்குள்ள பறந்தே போயிடுச்சு என்று பயபடுத்தினான்.

 புவனா அழ ஆரம்பித்துவிட்டாள். அம்மா என் மூக்கு என் மூக்கு என்று அழுதபடியே வீட்டிற்கு சென்றாள். அவள் கத்தின சத்தத்திற்கு அக்கம், பக்கம் உள்ளவர்கள் அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நிறுத்தவில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை. அண்ணன் விளையாடுகிறான் என்றாள், கேட்கவே இல்லையே.

 தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். என்னாச்சு பாப்பாக்கு? என்று பதட்டமுடன் கேட்டார். தன் அழுகையை நிறுத்தி தாத்தா, நானும், அண்ணனும் விளையாடிக்கிட்டு இருந்தோமா. ஒரு பெரிய பருந்து கறுப்பு கலர்ல வந்துச்சா. என் மூக்கை கடிச்சி எடுத்துட்டு போயிடுச்சு தாத்தா. நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா.

 நான் தெருவில் வந்தப்ப ஒரு பருந்து வந்து என்கிட்ட பேசுச்சு. ஒரு அழகான குட்டி பொண்ணுடைய மூக்கை எடுத்துகிட்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண்ன்னு சொல்லி மூக்கை என்னிடம் கொடுத்திட்டு பறந்து போயிடுச்சு. இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வெச்சிருக்கேன். எங்கே கண்ணை மூடிக்கோ. 

பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார். ஜெய் ஜம்போலி - ஒரு மந்திரம் சொன்னார். ஆகா. மூக்கு ஒட்டியாச்சே. புவனா கண்ணாடியில் பார்த்தாள். 

குழந்தையை ஏன் இப்படி ஏமாத்துற என்று செல்லமாக கார்த்திக் கன்னத்தை கிள்ளினார் தாத்தா. ஹைய்யா மூக்கு வந்துடுச்சே ஜாலி ஜாலி என்று சொல்லி மீண்டும் ஆனந்தமாக விளையாட துவங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!