Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 12 ஜூன், 2020

வெட்டுக்கிளிகள் பக்கம் வந்துருச்சு; விவசாயிகளே உஷார் - ரெடியான அதிகாரிகள்!

வெட்டுக்கிளிகள்

தங்கள் மாநில எல்லைக்கு அருகே வெட்டுக்கிளிகள் இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வடமேற்கு இந்தியாவில் வெட்டுக்கிளிகள் பிரச்சினை மிக மோசமாக இருக்கிறது. வழக்கமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் உணவு வேட்டையில் ஈடுபடும் வெட்டுக்கிளிகளின் பசி இம்முறை ஆறவில்லை போலும். மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் என துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. இதனால் அருகிலிருக்கும் மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தெலங்கானா மாநிலத்தின் எல்லையில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் வெட்டுக்கிளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் தங்கள் மாநிலத்திற்குள் நுழைந்துவிடலாம் என்று விவசாயிகள் அச்சத்தில் இருக்கின்றனர்.

இதையொட்டி அதிலாபாத் மாவட்ட நிர்வாகம் இரண்டு ட்ரோன்களை தயார் நிலையில் வைத்துள்ளது. ஒருவேளை வெட்டுக்கிளிகள் உள் நுழைந்தால் ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே மவுடா பகுதியில் வெட்டுக்கிளிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிலாபாத்தில் 6 லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 4 லட்சம் ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. 80,000 ஏக்கரில் சோயா பீன்ஸ் பயிர் செய்யப்பட்டுள்ளது. 60,000 ஏக்கரில் தானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இதுபற்றி மாவட்ட விவசாய அதிகாரி வெங்கடி கூறுகையில், பயிரிடல் தற்போது தான் தொடங்கியுள்ளது. எனவே வெட்டுக்கிளிகள் வந்தால் வனப்பகுதிகளில் இருக்கும் சில தாவரங்களை தான் உண்டு செல்ல முடியும் என்றார்.

கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலத்தின் ராம்தெக் பகுதியில் வெட்டுக்கிளிகள் நுழைந்தன. அதன்பிறகு யூ டர்ன் அடித்து மத்தியப் பிரதேசத்திற்கு திரும்பின. இதுதொடர்பாக தெலங்கானா விவசாய பல்கலைக்கழக முதன்மை விஞ்ஞானி ரகுமான் கூறுகையில், தெலங்கானாவிற்கு வெட்டுக்கிளிகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஒருவேளை உள் நுழைந்தாலும் விரட்டியடிக்க தயாராக இருக்கிறோம். இதுவரை தெலுங்கு மாநிலங்கள் அல்லது தென்னிந்தியாவில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்ததில்லை. அதேசமயம் அவற்றை எதிர்கொள்வதற்கு போதிய உபகரணங்கள் உடன் இருக்கின்றோம் என்றார்.

அடுத்த 10 நாட்களுக்குள் தெலங்கானாவிற்குள் வெட்டுக்கிளிகள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர். குறிப்பாக 8 மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக