Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஜூலை, 2020

அமெரிக்க டாலர் “உலக ரிசர்வ் கரன்ஸி” தகுதியை இழக்கிறதா?

இனி என்ன
உலகில் எத்தனையோ நாட்டின் கரன்ஸிகள் இருக்கும் போது அமெரிக்க டாலரை மட்டும் ஏன் இத்தனை ஆர்வமாகப் பார்க்கிறோம்? ஒரே பதில் "தேவை".
உலக அளவில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களில், நாம் வாங்கும் பொருட்களுக்கு டாலரில் தான் பணத்தை செட்டில் செய்வோம். நாம் மட்டும் அல்ல, கிட்டத்தட்ட உலகமே, டாலரில் தான் செட்டில் செய்வார்கள்.
ஆகையால் தான், அமெரிக்க டாலரை போதுமான அளவு கையில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இதை நாம் அந்நிய செலாவணி கையிருப்பு எனச் சொல்கிறோம்.
முக்கியமானவைகள்
இந்த அந்நிய செலாவணி கையிருப்பில் வெறுமனே அமெரிக்க டாலர் நோட்டுக்களாக மட்டும் இல்லாமல், அமெரிக்க அரசு பாண்டு பத்திரங்கள், அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் (US Treasury Bills), தங்கம்.. என மற்ற சிலவற்றையும் வைத்திருப்பார்கள். பொதுவாக ஒரு பொருளாதாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகமாக இருப்பது, வலுவான பொருளாதாரத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது
ஒரு ஒப்பந்தம்
1944 கால கட்டத்தில், 44 உலக நாடுகள், ஒன்று சேர்ந்து Bretton Wood Agreement என்கிற ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். அந்த ஒப்பந்தப் படி, உலக நாட்டு கரன்ஸிகள், அமெரிக்க டாலரோடு இணைத்தார்கள், அமெரிக்க டாலர்ரை தங்கத்தோடு இணைத்தார்கள். உலக நாடுகளின் மத்திய வங்கிகள், அமெரிக்க டாலருக்கு நிகரான, தங்கள் நாட்டு கரன்ஸி மதிப்பை கவனித்துக் கொள்ளலாம் என்றார்கள்.
உலக கரன்ஸி
மேலே சொன்ன Bretton Wood Agreement ஒப்பந்தத்தால் தான், இன்று அமெரிக்க டாலர் உலகின் மிகச் சக்தி வாய்ந்த கரன்ஸியாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. நம் கட்டுரைத் தலைப்புக்கு வருவோம். உலக அளவில் அமெரிக்க டாலர் "உலகின் ரிசர்வ் கரன்ஸி" தகுதியை இழக்கிறதா? என்றால் கொஞ்சம் இழந்து இருக்கிறது என்று சொல்லலாம்.
2000 டூ 2019
Currency Composition of Foreign Exchange Reserves (COFER) என்கிற தரவுகளை சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF) வெளியிடுகிறது. அதில், உலகில் ஒட்டு மொத்தமாக, எந்த கரன்ஸியை, எவ்வளவு ரிசர்வ் வைத்திருக்கிறார்கள் என்கிற விவரங்கள் இருக்கும். அந்த தரவுகள் படி, உலகின் ஒட்டு மொத்த ரிசர்வ்களில், 2000-ம் ஆண்டு 3-ம் காலாண்டில் 72.30 சதவிகிதமாக இருந்தது அமெரிக்க டாலர் ரிசர்வ்.
கொஞ்சம் பெரிய சரிவு தான்
கடந்த 2019-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில், உலக பொருளாதாரம், அதே அமெரிக்க டாலர் ரிசர்வ் 60.90 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது. ஆக உலக நாடுகள் மெல்ல அமெரிக்க டாலரில் இருந்து மற்ற நாட்டு கரன்ஸிகளை ரிசர்வாக வைத்துக் கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.
எந்த கரன்ஸிகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ, சீன ரென்மின்பி (Renminbi), ஜப்பான் நாட்டின் யென், இங்கிலாந்தின் பவுண்ட் ஸ்டெர்லிங் என பல நாட்டு கரன்ஸிகளின் ரிசர்வ்கள் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில், அமெரிக்க டாலர் தன் "உலக ரிசர்வ் கரன்ஸி" ஸ்டேட்டஸை இழந்து விடுமா? என்றால் இல்லை
சார்பு குறையும்
அமெரிக்க டாலரைச் சார்ந்து இருப்பது குறையலாம். உதாரணமாக அமெரிக்காவின் சில கடுமையான கொள்கைகளால் ரஷ்யா, ஈரான் போன்றவர்கள் அமெரிக்க டாலரை அதிகம் பயன்படுத்தமாட்டார்கள். அதோடு அமெரிக்கா - சீனாவுக்கு இடையிலான பஞ்சாயத்தால், சீனாவும் அமெரிக்க டாலரைச் சார்ந்து இருப்பதை குறைத்துக் கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது.
இனி என்ன
உலக வர்த்தகத்தில், அமெரிக்காவின் ஆதிக்கம், அமெரிக்க பொருளாதாரத்தின் அளவு, பல ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கடன் இருக்கும் போதும் அமெரிக்கா செலவழிக்கும் பண பலம் போன்றவைகளால், அமெரிக்க டாலர், இப்போதும் உலகின் ரிசர்வ் கரன்ஸியாக இருக்கிறது. இனி அமெரிக்கா எடுக்க இருக்கும் பொருளாதார ரீதியிலான முடிவுகள் மற்றும் கொள்கைகள் தான், அமெரிக்க டாலர் தொடர்ந்து உலகின் ரிசர்வ் கரன்ஸியாக தொடருமா தொடராதா என்பதைத் தீர்மானிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக