உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் சவுபேபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிக்ரு கிராமத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
விகாஸ் துபே என்ற ரவுடி மீது ராகுல் திவாரி என்ற நபர் காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளார். இதையடுத்து விகாஸ் துபேவை கைது செய்ய போலீசார் குழுவாக புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் போலீசார் வாகனம் செல்லும் வழியை மறிக்கும் வகையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் இறங்கிச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அருகிலிருந்த உயரமான பகுதிகளில் இருந்து ரவுடிகள் பலர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு போலீசார் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இருதரப்பிலும் மாறி, மாறி நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீசார் தரப்பில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அதாவது காவல்துறை எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா, 3 காவல் ஆய்வாளர்கள், 4 கான்ஸ்டபிள்கள் ஆகிய 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து ரவுடிகள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த போலீசார் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தகவலறிந்து சட்டம், ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர், கான்பூர் எஸ்.எஸ்.பி, கான்பூர் ஐஜி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
லக்னோவில் இருந்து தடவியல் துறையினரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க சிறப்பு அதிரடி படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
லக்னோவில் இருந்து தடவியல் துறையினரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க சிறப்பு அதிரடி படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மோதலில் உயிரிழந்த 8 போலீசாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக