வங்கி
பெயரை சொல்லி வங்கி அதிகாரிகள் போல பேசி நடத்தப்படும் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு
நாள் அதிகரித்து வருகிறது. முன்பு உங்களுடைய ATM கார்டுகளில் உள்ள எண்களைக் கேட்டு
பல போலி அழைப்புகள் உங்களுக்கு வந்திருக்கும். இந்த வலையில் மக்கள் இப்பொழுது
பெரிதும் சிக்காமல் உஷாராகியதால், மோசடி கும்பல் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டு
மீண்டும் மோசடி செய்யத் துவங்கியுள்ளது.
டெபிட்
கார்டு பயனர்களுக்கு நிகரான கிரெடிட் கார்டு பயனர்களும் தற்பொழுது இந்தியாவில்
அதிகரித்துவிட்டனர். பரவலாக அனைவரும் தற்பொழுது கிரெடிட் கார்டு பயன்படுத்தத்
துவங்கிவிட்டார்கள். குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு இதில் ஏகப்பட்ட
கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அவர்கள்
செய்யும் பரிவர்த்தனைக்கு ஏற்றார் போல ரிவார்டு பாயிண்ட்ஸ்களும் வழங்கப்படுகிறது.
இந்த
ரிவார்டு பாயிண்ட்ஸ்களை பயனர்கள் சேகரித்து வைத்து சில சலுகைகள்
அனுபவித்துக்கொள்ளலாம். இப்பொழுது மோசடி கும்பல் இந்த ரிவார்டு புள்ளிகளைத் தான்
தங்களின் ஆயுதமாக எடுத்துள்ளது. கிரெடிட் கார்டு பயனர்களுக்கு வங்கி ஊழியர்கள்
போல் தொடர்பு கொண்டு, தங்களின் கிரெடிட் கார்டில் உள்ள ரிவார்டு புள்ளிகளைப்
பணமாக்கித் தருவதாகக் கூறி புதிய முறையில் மோசடி செய்யத் துவங்கியுள்ளனர்.
உங்கள்
கிரெடிட் கார்டு கணக்கில் உள்ள ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்றி அதை உங்களுடைய
வங்கிக் கணக்கிற்கே மாற்றம் செய்து தருவதாகக் கூறி, போனிலேயே தொடர்பு கொண்டு பல
லட்சத்தைச் சமீபத்தில் கொள்ளையடித்து வருகின்றனர். இந்த மோசடியில் சென்னை, போரூரை
சேர்த்த பேராசிரியை ஒருவர் தற்பொழுது ஒன்றரை லட்சம் வரை இழந்துள்ளார் என்பது
கிரெடிட் கார்டு பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பேராசிரியை தொடர்பு கொண்ட நபர்,
ரிவார்ட் பாயிண்ட்ஸ் புள்ளிகளைப் பணமாக்கும் திட்டம் ஒன்று இருப்பதாகக் கூறி,
பேராசிரியையின் வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்களைத் தெளிவாகக்
கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த நபர் வங்கி ஊழியர் தான் என நம்பிய பேராசிரியை
தனது மொபைல் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி எண்ணை அந்த நபரிடம் பகிர்ந்துள்ளார். அவ்வளவு
தான் ஓ.டி.பி எண்ணைக் கூறிய அடுத்த நொடி ஒன்றரை லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
இது
தொடர்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார்
அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடி சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளது என்று
காவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஊரடங்கு நாட்களில் இந்த மோசடி
கும்பல் அதிக மோசடியில் ஈடுபட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும், எப்பொழுதும்
உங்களுடைய வங்கி ஊழியர்கள் உங்களை போனில் தொடர்புகொள்ளமாட்டார்கள் என்பதை மட்டும்
மறக்கவேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக