Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஜூலை, 2020

நீண்ட நேரம் மாஸ்க் அணிந்து சரும பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? இதோ அதற்கான தீர்வுகள்!

தற்போதைய சூழலில் ஒவ்வொருவரும் மாஸ்க் அணிவது எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்குமே தெரியும். வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள பெரிதும் உதவக்கூடியது மாஸ்க் மட்டும் தான். 

அந்த மாஸ்க்கை முறையாக அணிய வேண்டியது மிகவும் அவசியம். அதே போல் தான், நாம் உபயோகிக்கும் மாஸ்க்கை தேர்ந்தெடுப்பதும் அவசியமான ஒன்று. மிகவும் இறுக்கமான மாஸ்க் பயன்படுத்துவது நம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்க நேரும். சரும எரிச்சல், சொரி மற்றும் சிவந்த சருமம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

Face Mask Skin Irritation Is Real, Follow These Basic Tips For Irritation-Free Skin

வெப்பமும் ஈரப்பதமும் தான் விளைவுகளை மோசமாக்குகின்றன. இதுப்போன்ற காரணங்களுக்காக நீங்கள் மாஸ்க் அணிவதை எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாது. ஆனால் மாஸ்க் அணிவதால் ஏற்படக்கூடிய சரும பிரச்சினைகளைத் தடுக்கலாம் அல்லவா? உங்கள் சருமத்திற்கு மாஸ்க்களுடன் கூடுதல் பராமரிப்பு தேவை. எரிச்சல் இல்லாத சருமத்திற்கான சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்தல்

மாஸ்க் உங்கள் சருமத்தை, அழுக்கு மற்றும் மாசுபாட்டிலிருந்து தடுக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது என்னவோ உண்மை தான். இருந்தாலும், மாஸ்க் அணியும் போது முகத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையை மறந்துவிடாதீர்கள். எனவே, எப்போது மாஸ்க் அணிந்து வெளியே சென்றாலும், வீட்டிற்கு வந்தவுடன், முகத்தை சரியாக சுத்தம் செய்ய மறந்து விடாதீர்கள். அதுமட்டுமின்றி, 2-3 நாட்கள் இடைவெளியில் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதும் முக்கியம். வெறும் வெந்நீரில் ஆவி பிடிப்பதன் மூலம் சருமத் துளைகளில் கண்ணிற்கு தெரியாமல் படிந்திருக்கும் அழுக்குகள் வெளியேறும். அப்படி செய்யாவிட்டால், முகப்பரு , கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை தூண்டக்கூடும்..

மாய்ஸ்சுரைசர் முக்கியம்

முகத்தை சுத்தம் செய்த பிறகு, மாய்ஸ்சுரைசர் தேய்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அது தான் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். வறண்ட சருமத்தில் தான் எரிச்சல் உண்டாகக்கூடும். எனவே, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டும். எண்ணெய் பசை அல்லாத மாய்ஸ்சுரைசரைத் தேர்வு செய்திடவும். ஏனெனில் இது துளைகளை அடைக்காமல் சருமத்தை ஈரப்பதமாக்கும். பொதுவாக, இறுக்கமான மாஸ்க் அணிவது சருமத்தை வறட்சி அடைய செய்துவிடும். எனவே, நல்ல மாய்ஸ்சுரைசரைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.

சன்ஸ்கிரீன் என்பது சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்புக்கு மட்டுமல்ல, வெப்பத்தால் ஏற்படக்கூடிய சரும வறட்சியை எதிர்த்து போராடுவதற்கும் தான். முகத்தில் ஏற்படக்கூடிய எரிச்சல் உணர்வுக்கு ஒரு முக்கிய காரணம் புற ஊதா கதிர்கள் தான். இவை சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சி மந்தமாக்கி, சேதப்படுத்தி விடுகின்றன. அந்த நிலை வருவதற்கு முன்பே, அதை சுலபமாக தடுத்திடலாம். உங்கள் சருமத்திற்கு ஏற்ப நல்ல சன்ஸ்கிரீன் அல்லது லோஷனை பயன்படுத்துங்கள். சிறந்த பாதுகாப்பிற்காக 4-5 மணி நேரத்திற்கு ஒருமுறை அதை மீண்டும் பயன்படுத்துங்கள்.

சருமம் கருமையாவதில் இருந்து விடுபட உதவும் சில டிப்ஸ்:

இறுக்கமான மாஸ்க் அணிவதைத் தவிர்க்கவும்

மாஸ்க்குகளில் உள்ள இறுக்கமான எலாஸ்டிக் தான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணம். மாஸ்க் ஆனது உங்கள் மூக்கையும் வாயையும் மறைக்க உதவுவது மட்டுமின்றி, சருமத்தை சுவாசிக்க உதவும் வகையிலும் சற்று தளர்வாக இருக்க வேண்டும். மாஸ்க்கில் உள்ள எலாஸ்டிக் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது, ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை பாதிக்கும். அதன் காரணமாக தான், வீக்கம், சிவத்தல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறன்றன. எனவே, உங்கள் சருமத்தின் மென்மையை பாதிக்காத, தீங்கு விளைவிக்காத, மென்மையான துணி கொண்ட சரியான அளவிலான மாஸ்க்கை தேர்வு செய்து உபயோகியுங்கள்.

மேக்கப்பைத் தவிர்க்கவும்

பெண்களே, நீங்கள் மேக்கப்பை எந்த அளவிற்கு விரும்புபவர்களாக இருந்தாலும் சரி. மாஸ்க் அணியும்போது மேக்கப் போடுவதை தயவு செய்து தவிர்த்திடுங்கள். இங்கு மேக்கப் என்று குறிப்பது, முகத்தை ஃபவுண்டேஷன், கன்சீலர் போன்ற அடுக்குகளை கொண்டு சருமத்தை மறைப்பதை தான். இவை சில மணிநேரங்களுக்கு மட்டுமே உங்கள் தோற்றத்தை மேம்படுத்தக்கூடும். ஆனால் நீண்ட காலத்திற்கு உங்கள் சருமத்திற்கு தீங்கை விளைவிக்கக்கூடும். முகத்தில் பல அடுக்குகள் கொண்டு மேக்கப் செய்வதால், சருமத்திற்கு தேவையான காற்று கிடைக்கப் பெறாது. இது சரும நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துங்கள்

ஃபேஸ் மாஸ்க் அணிந்த பிறகு சருமத்தில் ஏதேனும் தடம் விழுந்திருந்தால், பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தலாம். இறுக்கமான எலாஸ்டிக் முகத்தில் வெட்டுக்கள் மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தக்கூடும். பெட்ரோலியம் ஜெல்லி உபயோகித்தால் அவற்றை சரிசெய்ய முடியும். சருமத்தை மென்மையாக்கவும் எரிச்சலைப் போக்கவும் இது சிறந்த முறையில் செயல்படும். தூங்குவதற்கு முன்பு, சிறிதளவு ஜெல்லியை சருமத்தில் தடவுவது நல்லது. இதனால் உங்கள் சருமத்தில் ஈரப்பதம் நன்கு ஊறி சருமம் பொலிவு பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக