Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு இப்படியொரு சலுகை - தமிழக அரசு அசத்தல்!


தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநில அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் கிடைக்கும் மதிய உணவைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த சூழலில் மாணவ, மாணவியரின் ஊட்டச்சத்து நிலையைக் கருத்தில் கொண்டும், மத்திய அரசின் அறிவுரையின் அடிப்படையிலும் மே மாதத்திற்கு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தலா 3.1 கிலோ அரிசி, 1.2 கிலோ பருப்பும், உயர் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தலா 4.65 கிலோ அரிசியும், 1.25 கிலோ பருப்பு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இதற்கிடையில் கொரோனா தொற்று காலம் முடியும் வரை சத்துணவு பயனாளிகளுக்கு முட்டைகளையும் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு ஜூன் மாதத்தில் தொடக்கப் பள்ளி பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு 100 கிராம் அரிசியும், 40 கிராம் பருப்பும், உயர் தொடக்கப் பள்ளி பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு 150 கிராம் அரிசியும், 56 கிராம் பருப்பும் உலர் உணவுப் பொருளாக வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் தமிழக அரசு புதிதாக அரசாணை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில், எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உலர் உணவுப் பொருட்களுடன் செப்டம்பர் 2020 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதம் ஒன்றுக்கு ஒரு பயனாளிக்கு 10 முட்டைகள் வீதம் வழங்க சமூக நல ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழக அரசு உத்தரவு
மேலும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் அடிக்கடி வருவதை தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்படும் கல்வி உபகரணங்களை வழங்கும் போதே உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகளையும் சேர்த்து வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

அதேசமயம் கொரோனா நோய்த் தடுப்பு தொடர்பாக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 2020-21ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் உரிய கணக்கு தலைப்புகளின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக