'நள்ளிரவு நேரத்தில் உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது., இந்தியா மட்டுமே சுதந்திரத்திற்காக, இமைக்காமல் கண் விழித்துக் காத்துக் கிடந்தது" என்ற வரலாற்றில் இடம் பிடித்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த உரை...செங்கோட்டையிலேயே நிகழ்த்தப்பட்டது.
ஆம்... இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் முதன்முதலில் நமது தேசியக்கொடி ஏற்றப்பட்டது சுவராசியம் நிறைந்த இந்த பிரம்மாண்டமான செங்கோட்டையில் தான்...
1947 ஆகஸ்ட் 17-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இங்கே தான் கொடியேற்றி வைத்துப் பேசினார். ஒவ்வொரு வருடமும் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது டெல்லி செங்கோட்டையில் தான் பிரதமர் கொடி ஏற்றுவது வழக்கம். அந்த பழக்கம் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தன்று கோலாகலமான கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கமான பழக்கமாக இப்போது வரை உள்ளது.
பல யுகங்களாக இந்தியாவில் முகலாய ஆட்சி காலத்தின் முக்கியமான நினைவுச் சின்னமாக செங்கோட்டை இன்றுவரை இருந்து வருகிறது.
வரலாறு
டெல்லி செங்கோட்டைக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. டெல்லி மாநகருக்கு ஷாஜஹான் அளித்த பரிசு என்றழக்கப்படுகிறது. முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தனது சாம்ராஜ்யத்தின் தலைநகரை பல்வேறு காரணங்களுக்காக, 1638-ஆம் ஆண்டு ஆக்ராவில் இருந்து, டெல்லிக்கு மாற்றினார். பின்னர் அதை அவர் ஷாஜஹானாபாத் என பெயரிட்டு அழைத்தார்.
அந்த நகரத்தில் நவீன கட்டுமானப் பணியை தொடங்கி அந்த அரண்மனையான செங்கோட்டைக்கு அஸ்திவாரம் அமைத்தார். அடுத்து அந்த கோட்டையைச் சுற்றி அமைக்கப்பட்ட சுவரை விலை மதிக்க முடியாத அளவுக்கு சிவப்பு கற்கள் கொண்டு கட்டிமுடிக்க பல வருடங்கள் தேவைப்பட்டது. அதனாலேயே அதற்கு செங்கோட்டை என பெயர்பெற்றது.
செங்கோட்டையை முழுதாய் கட்டிமுடிக்க நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு பெரும்தொகை செலவானதாக வரலாற்று நூல்கள் தெரியபடுத்துகின்றன.
ஆக்ரா கோட்டையை விட சிறப்பாக நவீனமாக திட்டமிட்டு செங்கோட்டையை கட்டியதாக வரலாறு கூறுகிறது. ஷாஜஹான் அங்கே வாழ்ந்த நாட்களில்தான் சிறந்த அனுபவங்களைக் கற்றுக்கொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
செங்கோட்டை, பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்தின் கரங்களுக்குள் விழுவதற்கு முன்னர், சுமார் 200 வருடங்கள் வரையிலும் முகலாய சாம்ராஜ்யத்தின் முக்கிய தளமாக இருந்து வந்தது. கடைசி முகலாயப் பேரரசராக பகதூர்ஷா ஜாபர் 1837-இல் முடிசூட்டப்பட்டார். அந்த நேரத்தில், அவரது ஆட்சி அதிகாரம் அரண்மனையின் எல்லைகளுக்கு உட்பட்டே இருந்தது. அதைத் தாண்டவே இல்லை என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
கட்டிடக்கலை
பலராலும் பாராட்டப்படும் செங்கோட்டையின் கட்டிடக்கலை, முகலாயர்கள் இந்தியாவுக்கு கொண்டுவந்த பல்வேறு கலாச்சாரங்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு என்றும் ஒற்றுமையின் சின்னம் என்றும் கூறப்படுகிறது. முகலாய பாணி கட்டிடக்கலையின் உச்சம் செங்கோட்டை.
அந்த அரண்மனை கட்டிடம் பாரசீக, ஐரோப்பிய மற்றும் இந்தியக் கலை வடிவங்களின் தொகுப்பாகக் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, பெரும்பாலான முகலாய கோட்டைகளில் இருப்பதைப் போலவே, அனைவரும் அவசியம் பார்வையிட வேண்டிய முக்கிய மண்டபங்கள், 'திவான்-இ-ஆம்' மற்றும் 'திவான்-இ-காஸ் ஆகியவை.
நவபுத் கானா (இசை மண்டபம்)
செங்கோட்டைக்குள் உள்ளே நுழைந்தவுடன் இந்த மண்டபத்தை நாம் பார்க்க முடியும். இதன் மேல்தளம் இசை மன்றமாக இயங்கி வந்தது. முக்கிய விருந்தினர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரண்மனைக்குள் வருகை புரியும்போது, அவர்களை கவுரவிக்கும் வகையில் மன்னர் தலைமையில் மேல தாளம் முழங்க இசை பிண்ணிப் பெடலெடுக்கும்.
அனால், இந்நாட்களில் அந்த மண்டபம் 'இந்திய போர் குறித்துப் பாடம் சொல்லும் நினைவு அருங்காட்சியமாக" மாற்றப்பட்டுள்ளது.
திவான்-இ-ஆம் (பொது மண்டபம்)
திவான் -இ-அம் என்றழைக்கப்படும் இந்த பொது மண்டபத்தில் உள்ள சிறப்பம்சம்...அதில் அமைக்கப்பட்டுள்ள பளிங்கு அரியணையும், அதன் பின்னணியில் கட்டப்பட்டுள்ள சுவரும் தான்.செங்கோட்டையை திறந்து வைத்தபோது முதல் அரசவைக்கூட்டத்தை ஷாஜஹான் அங்கேதான் நடத்தினார் அந்த பிரம்மாண்டமான பளிங்கு அரியணையில் அமர்ந்தே பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டன. விசாரணைகள் நடைபெற்றன.
திவான்-இ-கஸ் ( சிறப்பு மண்டபம்)
அழகு நிரம்பி வழியும் பிரம்மாண்டமான சுவராசியங்கள் அடங்கியது இந்த கட்டிடம். இந்த கட்டிடத்தில் தான் அரசின் முக்கிய மற்றும் அரசு ரகசிய விவகாரங்கள் நடைபெறும். அதிகாரிகள் மற்றும் அந்நிய நாட்டு தூதர்களுடன் மன்னர் கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்துவார் .
அதில் மன்னரின் விவாதம் சூடு பறக்கும். அதே கட்டிடத்தின் நடுவில்தான் பளிங்கு மேடை இருந்தது. அந்த மேடை மீது "மயில் சிம்மாசனம்" இருந்தது. பின்னர், பெர்சியாவின் மன்னர் நாதிர்ஷாவால் எடுத்துச் செல்லப்பட்டது.
ரங்க் மஹால் (வண்ணமயமான மாளிகை)
அழகு கொஞ்சும் இந்த பெரிய கட்டிடம், முதுபெரும் அரசிகளுக்களுக்காகக் கட்டப்பட்டது. கண்ணைகவரும் வண்ணங்களால், அதன் உள்அறை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மும்தாஜ் மஹால்
'ஜஹனரா பேகம் மேன்ஷன்' என்றழைக்கப்பட்ட இந்த மஹால், அரச அந்தப்புரத்தில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. ஆனால், தற்போது முகலாய சகாப்தத்தின் உடைமைப் பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் அருங்காட்சியகமாக உள்ளது.
கஸ் மஹால் ( சிறப்பு மாளிகை)
அரண்மனையின் இருதயப்பகுதியான இந்த மஹாலில் தான் மன்னர் ஷாஜஹானின் குடியிருப்புப் பகுதி இருந்தது. அதில் 3 அறைகள் இருக்கும். அதில் ஒரு அறை..தனித்திருக்கும்போது மன்னர் ஷாஜஹான் வழிபாடு செய்வதற்கும், நடுவேயுள்ள அறை அவர் உறங்குவதற்கும், அடுத்தது ஆடைகள் மாற்றிக்கொள்ளும் அலங்கார அறையாகவும் பயன்படுத்தப்பட்டது. அங்கே மலர் வடிவில் ஓவியங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
ஹம்மாம் (அரச குளியல் அறை)
திவான்-இ-கஸ் கட்டிடத்தின் வடக்கே இது அமைந்துள்ளது. இதில் 3 அறைகள் இருக்கும். அவை குளிரூட்டப்பட்ட நீரில் குளிக்கும் அறை, வெந்நீரில் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட அறை மற்றும் ஆடை அணிகலன்கள் மாற்ற ஒரு அறை. இந்த குளியல் அறை மாளிகை பளிங்கு கற்களால் பதிக்கப்பட்டு மலர் வடிவ ஓவியங்கள் மீது விலை மதிக்க முடியாத ஆபரண கற்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.
யுனெஸ்கோ அறிவித்தது...
ஷாஜஹானின் செங்கோட்டை அரண்மனையையும், அதனருகில் இருந்த கி.பி. 1546-ஆண்டில் கட்டப்பட்ட சலிம்கர் கோட்டை அடங்கிய செங்கோட்டை வளாகம் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. பின்னர், 2007-இல் 'உலக பாரம்பரியாமான தளம்" என்ற பட்டத்தை யுனெஸ்கோ வழங்கி உலகிற்கு அறிவித்தது.
பெரும் இரைச்சல்களுக்கு நடுவே தூசி படர்ந்து மாசுபட்டுப்போன டெல்லியின் நினைவுச் சின்னமாக நிற்கிறது செங்கோட்தை., பெரும் சகாப்தத்தின் வரலாற்றை ஏந்தி நிற்கும் பிரம்மாண்டமான செங்கோட்டையின் சுவராசிய வரலாற்றை இந்த ஒரு கட்டுரைக்குள் சுருக்கி கூறி விட முடியாது.
நிதானமாக நின்று அந்த கோட்டையை அண்ணாந்து பார்த்தால், இந்திய மன்னர்கள் வாழ்ந்து மடிந்த வரலாற்றையும், அவர்கள் அனுபவித்த சுக துக்கங்களையும் நம் கண்முன் காணலாம்.
செங்கோட்டைக்கு செல்ல...
பார்வையிட வசதியான சீதோஷ்ண காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை. இந்த நாட்களில் தான் தட்பவெப்பம் மிதமானதாகக் காணப்படுகிறது. செங்கோட்டைக்கு வார விடுமுறையாக திங்கள் கிழமை. அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணம்: இந்தியர்களுக்கு ரூ:10/- மட்டும். வெளிநாட்டினருக்கு ரூ: 250/- மட்டுமே வசூலிக்கின்றனர்.
செங்கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சிகள்..
ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது ...இதற்காக பெரியவர்களுக்கு ரூ:80/- மற்றும் குழந்தைகளுக்கு ரூ: 30/- பணமும் பார்வையாளர்களுக்கான கட்டணமாக செலுத்த வேண்டும். நிகழ்ச்சியில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி புழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக