ஒரு நாள் ராமன் மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருக்கையில்,
அந்த வழி வந்த ஒரு இளைஞன் அதே மரத்தின் அடியில் களைப்பாருவதற்காக வந்தான்.
மரத்தின் வேர்களின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான். அவன்
பார்வை ராமனின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து பார்த்தவன் மரத்தில் இருந்த
சின்னஞ்சிறு பழங்களைப் பார்த்தவுடன் சத்தமாகச் சிரித்தான். ராமன் அவனிடம் ஏன்
சிரிக்கிறீர்? என்று கேட்டார்.
கடவுளின் முட்டாள் தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான். கடவுள் அப்படி என்ன
முட்டாள் தனம் செய்தார் என்றார். இந்த மரம் எவ்வளவு பெரிதாக படைத்தவன் இந்த
மரத்தின் பழங்களை மட்டும் மிகச் சிறியதாக படைத்த கடவுளின் முட்டாள் தனத்தை
நினைத்தேன் சிரித்தேன் என்றான். ராமன் பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக்
கொண்டார்.
சிறிது நேரம் கழித்து காற்று பலமாக அடிக்க மரக்கிளைகளில் இருந்த சின்னஞ்சிறு
பழங்கள் உதிர்ந்து கொட்டத் தொடங்கின. சில பழங்கள் அந்த இளைஞனின் தலையின் மேலும்
விழுந்தது. ராமன் அவனைப் பார்த்து நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள்
விழுந்திருக்கும் போலிருக்கிறதே? என்று கேட்டார். ஆமாம் காற்றில் அவை உதிர்ந்து
விட்டன என்றான் வழிப்போக்கன். கடவுள் புத்திசாலித்தனமாக இந்த மரத்தில் பெரிய
பழங்களை உற்பத்தி செய்திருந்தாரானால், உமது தலை என்ன ஆகியிருக்கும் என்று
நினைத்துப்பாருங்கள் என்றார் ராமன். வழிப்போக்கனான அந்த இளைஞன் யோசித்தான்.
நண்பரே, எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் உருவாக்கியிருப்பார். இவ்வளவு
பெரிய மரத்தினுடைய கிளைகளின் நிழலில் மனிதர்களும் விலங்குகளும் களைப்பாருவதற்கு
வந்து தங்குவார்கள் என்பதை முன் கூட்டியே அறிந்த கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின்
பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் என்றார் ராமன். இந்த மரத்தின்
பழங்களை மட்டும் பெரிதாக படைத்திருந்தால் தன் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதை
எண்ணி, மறுகணம் மனதிற்குள் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டான். தனக்கு புரிய வைத்த
ராமனைப் பார்த்து, தங்களை பார்க்க ஒரு மகான் போல் காட்சியளிக்கிறீரே? தாங்கள் யார்
என்று கேட்டான். நானும் உம்மைப்போல ஒரு மனிதன் தான் என்றார் ராமன்.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக