Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

நாங்களும் மனுஷங்கதானே... சுகாதாரப் பணியாளர்களின் கேள்விக்கு பதில் என்ன?

நாங்களும் மனுஷங்கதானே! இந்த வார்த்தைகள் உங்கள் மனதுக்குள் என்ன அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறோம்.

ஆனால், அனுதினமும் சகதிக்குள் எப்படி வாழ்வது?நாங்களும் மனுஷங்கதானே என்ற வேதனையின் வெளிப்பாடான கேள்விக்குள் சிக்கித் தவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்வது? எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ வந்த பிரச்சினை அல்ல இது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் பாதுகாக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் மருத்துவர்கள்,காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என பல தரப்பினர் கொரோனா நோய்த் தொற்றை எதிர்த்து போராடி வருகின்றனர்.

குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் நோய் வராமல் இருப்பதற்கான தடுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இவரை நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தூய்மைப்படுத்துதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி அனைவரின் தூய்மைக்காக பணி புரியும் இவர்களின் குடியிருப்புகள் சாக்கடையும், சேறும்,சகதியுமாக இருப்பது வாடிக்கையாகவே உள்ளது.

இந்த நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புகள் சகதிகளாக மாறியிருப்பது அவர்களை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.

கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள சிஎம்சி காலனியில் தூய்மை பணி மேற்கொள்ளும் தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருந்த சி எம் சி காலனி அடுக்குமாடி குடியிருப்பு பழுதடைந்து இருப்பதால் முழுமையாக இடித்து விட்டு புதிதாக கட்டிக்கொடுக்க குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது.

அருகில் உள்ள மைதானத்தில் தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கி கொள்ள மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.இங்கு 300 குடும்பத்தினர் கூடாரம் அமைத்து வசிக்கின்றனர்.

மற்றவர்கள் வாடகை வீடுகளுக்கு சென்று உள்ளனர்.கடந்த இரு நாட்களாக பெய்த மழைக்கு மைதானத்தில் தண்ணீர் தேங்கியது.இதனால் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. கூடாரத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் தங்க இடமின்றி தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் அவதிப்படுகின்றனர்.

அதேபோல உடைமைகள் அனைத்தும் மழை நீரால் நனைந்துள்ளதால் குழந்தைகளும் பெரியவர்களும் அவதிப்படுகின்றனர். குடிநீர் குழாய்களும் மழை நீர் தேங்கிய குழிக்குள் இருக்கிறது. குழிக்குள் இறங்கி தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலையும் உள்ளது.


அதேபோல குடிநீரோடு கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மழை நீர் வழிந்தோடிச் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .

அப்பகுதி மக்கள் கூறுகையில்;-

மாநகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்களே இங்கு வசிக்கிறோம்.எங்களுக்கு போதிய வசதி செய்து கொடுப்பது இல்லை. பாழடைந்த குடியிருப்பு இடித்து விட்டு புதிதாக கட்டி கொடுக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை கூடாரத்தில் தான் வசிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். எங்கள் நிலைமை நன்கு தெரிந்து மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஊரையே சுத்தம் செய்யும் நாங்களும் மனுஷங்கதானே என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக