Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

ஆம்னி பேருந்துகள் இயங்குவதில் சிக்கல்: அரசுப் பேருந்து முன்பதிவு தொடக்கம்!

மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அற்விப்பை வெளியிட்டார்.

அதன்படி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில் சேவை செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவித்தார். பணி நிமித்தம், வியாபார நிமித்தம் வெளியூர் செல்பவர்களும், மருத்துவமனைகளுக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்த நிலையில் முதல்வரின் அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சென்னை போன்ற பெரு நகரங்களிலிருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தயாராகியுள்ள நிலையில் ஆம்னி பேருந்துகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை தொடங்கப்படலாம் என அறிவிப்பு வெளியானதும் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. ஆனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மாவட்டத்துக்குள் மட்டும் இயக்கினால் பல பேருந்துகளை இயக்க முடியாது, மிகக் குறைவான பயணிகளை மட்டும் ஏற்றி செல்வதால் நஷ்டம் ஏற்படும், ஐந்து மாதங்களுக்கும் மேலாக பேருந்துகள் இயங்காமல் இருந்த நிலையில் அரசு தங்களுக்கு வரி விலக்கு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கலாம் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நடத்திய ஆலோசனையில் ஐந்து மாதங்களுக்கு மேலாக பேருந்துகளை இயக்காததால் வருமானம் இல்லை எனவே சாலை வரியை அரசு நீக்கினால் மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அரசு விரைவுப் பேருந்துகள் திட்டமிட்டபடி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், சேலம், ஈரோடு, நாகப்பட்டினம், நாகர்கோவில் உள்பட முக்கிய ஊர்களுக்கு இடையே எசி வசதி இல்லாத 400 விரைவு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.


செப்டம்பர் 6 ஆம் தேதி நள்ளிரவு முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். இந்த அரசு விரைவுப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கும். www.tnstc.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

இந்த விரைவுப் பேருந்துகளில் 60% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும், தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்பட்டே பயணிகள் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக