தமிழ்நாடு நியாய விலைக்கடையில் அநியாயமாய் நடந்த முறைகேடு தற்பொழுது ஸ்மார்ட்போன் பயன்பாடு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த முறைகேட்டை நியாய விலைக்கடையில் ரேஷன் பொருட்களை வாங்கிய பயனர் அரசாங்கத்தின் மொபைல் பயன்பாட்டை வைத்துக் கண்டுபிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடு சிக்கலில் சிக்கிக்கொண்ட கடைக்காரர் கெஞ்சும் ஆடியோவும் வெளியாகியுள்ளது.
ரேஷன் பொருள் அளவில் முறைகேடு
ஈரோடு அருகே உள்ள நல்லான் தொழுவை சேர்ந்த முருகானந்தம் என்பவர், அந்தப்பகுதியில் உள்ள நியாய விலை கடையில் அவருக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்துள்ளார். இதன்படி அவர் வாங்கி வந்த ரேஷன் பொருட்களின் அளவும், மொபைல் பயன்பாட்டில் வாங்கியதாகக் காண்பிக்கப்படும் பொருட்களின் அளவும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதை அவர் கவனித்துள்ளார்.
தமிழக அரசின் TNEPDS மொபைல் ஆப்ஸ்
தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள டிஎன்இபிடிஎஸ் (TNEPDS) என்ற அரசின் மொபைல் ஆப்ஸ் மூலம் தான் முருகானந்தம் முறைகேடு நடப்பதைக் கண்டுபிடித்துள்ளார். இந்த TNEPDS ஆப்ஸ் மூலம் நியாய விலைக்கடையில் உள்ள பொருட்களின் இருப்பு விபரம், வேலை நேரம், குடும்ப அட்டைதாரர்கள் விபரம், பொருட்கள் வாங்கிய விவரங்களைப் பயனர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
வாங்கியது 30 கிலோ.. ஆனால் காட்டியது 60 கிலோ..
அரசன் TNEPDS செல்போன் செயலியில், முருகானந்தம் 60 கிலோ அரிசியை வாங்கியதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவர் வெறும் 30 கிலோ அரிசியை மட்டுமே வீடு எடுத்து வந்துள்ளார். இதனால் அவருக்கு சந்தேகம் எழுந்தது, இதற்கு முன்பு வாங்கிய பொருட்களின் அளவையும் மொபைல் ஆப் இல் செக் செய்திருக்கிறார்.
வாங்கிய அனைத்து பொருட்களிலும் முறைகேடு
அவர் வாங்கிய அரிசி மட்டுமின்றி எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பல பொருட்களின் அளவுகளில் வேறுபாடு இருந்துள்ளதைச் செயலியில் பார்த்திருக்கிறார் முருகானந்தம். சந்தேகமடைந்த முருகானந்தத்தின் மனைவி கடைக்காரரிடம் நேரடியாகச் சென்று விசாரித்துள்ளார். இவரின் விசாரணை வாய் சண்டையில் முடிவடைந்துள்ளது. சண்டை போட்ட பின்னரே, முருகானந்தமும் அவரின் மனைவியும் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.
இப்படி மாட்டி விட்டுட்டியேபா
நியாய விலைக்கடையில் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக முருகானந்தம் மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததைத் தொடர்ந்து நியாய விலைகடை கண்காணிப்பாளர் சேகர், முருகானந்தத்தை போனில் தொடர்பு கொண்டு ''இப்படி மாட்டி விட்டுட்டியேபா'' என்ற தோரணையில் புலம்பியிருக்கிறார். அந்த ஆடியோ பதிவும் தற்பொழுது வெளியாகி உள்ளது.
தொடரும் மக்களின் புகார்
பெரும்பாலான நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்னும் சில இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது என்பதே மக்களின் இன்னொரு புகாராக இருக்கிறது. மாவட்ட வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் விரிவான ஆய்வுகள் நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக