பள்ளி திறப்பு எப்போது என்ற கேள்விகள் பரவலாக எழுந்து வரும் நிலையில், அதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மார்ச்
மாதம் முதல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இருப்பினும், பொது முடக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து
வருகின்றன. ஆனாலும், பள்ளி, கல்லூரிகள் திறப்பிற்கான தடை வருகிற 30ஆம் தேதி வரை தொடரும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது தொடர்ந்து எழுப்பப்படும் கேள்வியாக
உள்ளது. இதனிடையே, செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள்
மட்டும் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களின் ஆலோசனைகளைப்
பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான நிலையான செயல்பாட்டு
வழிமுறைகளையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுய விருப்பத்தின்
பேரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது அரசு, அரசு நிதியுதவி
பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். அதன்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான
நிலையான செயல்பாட்டு வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதேசமயம், மாணவர்கள் பள்ளி வரலாம்என தெரிவித்துள்ள அரசு, ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போல்
நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், சந்தேகங்களை வீட்டில் இருந்தே கேட்டறிய
கட்டணமில்லாத தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மத்தியில்
குழப்பம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பள்ளி திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும்
எடுக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பின்னர்
செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “பாடத்தில் உள்ள
சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, அவர்கள் சந்தேகங்களை
தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக பெற்றோர்களின் சம்மத
கடிதத்துடன்தான் பள்ளிக்கு வர வேண்டும் என வருவாய்த்துறை மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது”
என்று விளக்கம் அளித்தார்.
பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கருத்து
கேட்கப்பட்டு வருகிறது என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக