இறைவர் திருப்பெயர் : ஞானபுரீஸ்வரர்,
இடைச்சுரநாதர்.
இறைவியார் திருப்பெயர் : கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை .
தேவாரப் பாடல்கள் : திருஞானசம்பந்தர் - 1்.
தல
வரலாறு:
திருஇடைச்சுரம்
(தற்போது திருவடிசூலம் என்று வழங்குகிறது).திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின்
போது இவ்வழியே வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில்
ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட ஒரு
மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள
சம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி
களைப்பு நீங்கிய சம்பந்தரை பார்த்து இடையன் அவர் யார் என்று வினவினான். தனது
சிவஸ்தல யாத்திரைப் பற்றிக் கூறிய சம்பந்தரிடம், இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு
சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தர் அவனது
அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு
குளக்கரையில் நின்ற இடையன் சம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்து
விட்டான். திகைப்படைந்த சம்பந்தர் சிவபெருமானை வேண்ட, சிவன் அவருக்கு
காட்சியளித்து தானே இடையன் வடிவில் வந்து அருள் புரிந்ததைக் கூறினார். இடையனாக
வந்து, இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால் இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து
பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மறைந்த குளக்கரை "காட்சிகுளம்" என்ற
பெயரில் தற்போதும் இருக்கிறது.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம்
பெற்றுள்ளது. இத்தல இறைவனின் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்து தனது பதிகத்தின்
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே என்று பாடியுள்ளார்.
தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 27-வது தலமான திருஇடைச்சுரம் (திருவடிசூலம்) பல
குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில்
அமைந்துள்ளது. கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய ஒரு நுழைவாயில்
மட்டுமே உள்ளது. கோவிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில்
வழியாக உள்ளே சென்றால் விசாலமான தெற்கு வெளிப் பிரகாரத்தில் நேரே வலம்புரி
விநாயகர் சந்நிதியைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது கிழக்குப்
பிரகாரத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இப்பிரகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர்
சந்நிதியும் உள்ளது. அருகில் வேப்பம், அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும்
இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். மேலும் இந்த கிழக்குப் பிரகாரத்தில் தெற்கு
நோக்கிய சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதியும் உள்ளது. பிரகார வலம்
முடிந்து மீண்டும் தெற்குப் பிரகாரம் வந்தால் தல விருட்சம் வில்வமரம் உள்ளது. இந்த
வில்வ மரத்திற்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது. இது விநாயகர் வடிவில்
காட்சி தருகிறது.
தெற்குப் பிரகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால் அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து நேரே தெற்கு நோக்கிய இறைவி கோவர்த்தனாம்பிகை சந்நிதியைக் காணலாம். சந்நிதிக்குள் நுழைந்தால் இடதுபுறம் கிழக்கு நோக்கிய இறைவன் ஞானபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. ஒரே இடத்தில் நின்றபடி இறைவன், இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சியளிக்கின்றனர்.
கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. வலமாகச் சுற்றி வந்தால் நால்வர் பிரதிஷ்டை உள்ளது. விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் அடுத்து உள்ளன. அடுத்த தரிசனம் பைரவர். இத்தலத்தின் சிறப்பு மூலவர் லிங்கத் திருமேனி. இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகதலிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது அவ்வொளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
அம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம். ஆதலால் இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.
சிறப்புக்கள்
:
அம்பாள்,
பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம். ஆதலால் இறைவி
கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.
இடையனாக வந்து, இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால் இறைவனை இடைச்சுரநாதர் என்று
அழைத்து பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மறைந்த குளக்கரை
"காட்சிகுளம்" என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.
போன்: +91- 44 - 2742 0485, 94445 - 23890, 94449 48937
அமைவிடம்
மாநிலம் :
தமிழ் நாடு
செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில்
இருந்து கிழக்கே சுமார் 9 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவடிசூலம்
பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலையில் 4 மணி
முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக