Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 26 செப்டம்பர், 2020

முடவனைச் சுமந்தவள்

தாரா எனும் நகரத்தில் சத்தியவிரதன் என்ற ஒரு வேதியன் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவன் மனைவி அருகில் இருப்போரிடம் சண்டையும் கலகமும் செய்து கொண்டிருந்ததால், அந்த வேதியன் வேறு நகரத்திற்குச் சென்றான்.

செல்லும் வழியில் அவளுக்குத் தண்ணீர் தாகம் எடுக்க அவனிடம் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டாள். அவன் தண்ணீர் கொண்டு வர வேகமாகச் சென்றான். ஆனால் அவனால் வெகு நேரம் கழித்தே தண்ணீர் கொண்டு வர முடிந்தது. அதற்குள் அவள் இறந்து விட்டாள்.

வேதியன் அழுது புலம்பினான். அப்போது வானில், உன் வயதில் இவளுக்குப் பாதியைக் கொடுத்தால் இவள் மீண்டும் உயிர் பெறுவாள் என்று ஓர் அசரீரி ஒலித்தது. உடனே அவன் அவ்வாறே தருவதாகத் தன் மனதில் நினைத்துக் கொண்டான். அவள் உயிர் பெற்றாள். பின்னர் அவள் அவன் கொண்டு வந்த தண்ணிரைப் பருகிவிட்டு பயணத்தைத் தொடரலானார்கள்.

ஓரிடத்தில் அவளைத் தங்க வைத்து விட்டுக் கடைக்குச் சென்றான் வேதியன். தனியாக இருந்த அவளிடம் ஒரு முடவன் தவழ்ந்து வந்தான். அவன் இனிமையாகப் பாடினான். அவன் பாட்டில் மயங்கிய இவள் அவனுடன் இணைந்தாள்.

திரும்பி வந்த வேதியன் தனது மனைவியின் அருகில் ஒரு முடவன் இருப்பதைப் பார்த்து, வேதியனுக்கு முடவன் மீதும் தன் மனைவி மீதும் எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை. இவனையும் நம்முடன் அழைத்துச் செல்லலாமா? என்று கேட்டாள். வேதியனும் சம்மதித்து மூவரும் புறப்பட்டனர்.

செல்லும் வழியில் வேதியன் ஒரு கிணற்றின் அருகில் சென்று கொண்டிருக்கும் போது அவள் வேதியனை அந்தக் கிணற்றில் தள்ளிவிட்டு விட்டு அந்த முடவனை ஒரு பெட்டிக்குள் அமரச்செய்து தன் தலையில் அவனைச் சுமந்துகொண்டு சென்றாள். வழியில் சென்ற காவலாளிகள், தலையில் பெட்டியுடன் செல்லும் அவளைச் சந்தேகப்பட்டு, ராஜாவிடம் அழைத்துச் சென்றனர்.

ராஜாவிடம், இவர் என் கணவர். இவரால் நடக்க முடியாது. மனைவி என்ற முறையில் இவரை நான் தானே பாதுகாக்க வேண்டும்! என்றாள். இவளின் கற்புத் தன்மையைக் கண்டு கண் கலங்கிய ராஜா, அவளைத் தன் உடன் பிறந்தவளாகக் கருதி அவளையும் முடவனையும் அரண்மனையில் தங்க வைத்து உபசரித்தார்.

கிணற்றில் தள்ளி விடப்பட்ட வேதியன் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த வழிப்போக்கன் தண்ணீர் தாகம் ஏற்பட அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் பருக நினைத்துக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். கிணற்றுக்குள் இருந்த வேதியனைக் கண்டு, அருகிலிருந்த ஆட்களை அழைத்து கிணற்றில் குதிக்கச் சொல்லிக் காப்பாற்றினான். பின்னர் வேதியன் தன் மனைவியையும் அந்த முடவனையும் தேடிச் சென்றான்.

அரண்மனை மாடத்திலிருந்த வீதியில் செல்லும் வேதியனைப் பார்த்த அவனது மனைவி, அரண்மனைக் காவலர்களிடம் சென்று, அதோ அந்த வேதியன், என்னையும் முடமாகவுள்ள என் கணவரையும் கொல்ல வருகிறான் என்று கூறினாள்.

அவர்கள் வேதியனைப் பிடித்து ராஜாவின் முன் நிறுத்தினர். ராஜா நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார். வேதியனைத் தீர விசாரித்த நீதிபதி உண்மையை அறிந்து கொண்டு, ராஜாவிடம் கூறினார். ராஜா வேதியனை விடுவித்து, வேதியனின் மனைவியையும், முடவனையும் தண்டித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக