ஆன்லைன் உணவு டெலிவரியின்போது வீடு தனியாக இருந்ததை நோட்டமிட்டு திருட வந்த பொறியியல் பட்டதாரி மொட்டை மாடியிலேயே தூங்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னையில் அரங்கேறும் திருட்டுச் சம்பவம்
சென்னையில் திருட்டுச் சம்பவம் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. இதைத் தடுப்பதற்கு போலீஸார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலத்தில் திருட்டு சம்பவம் தொடர்ந்து வருகிறது.
பழுதுநீக்க மொட்டை மாடிக்கு சென்ற வீட்டு உரிமையாளர்
இந்த நிலையில் சென்னை அடையாளம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தனது வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என பிளம்பர் ஒருவரை வரவழைத்து பழுதுநீக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒருவர் பதுங்கியிருந்துள்ளார்.
மொட்டை மாடியில் காத்திருந்த அதிர்ச்சி
நீங்கள் யார் என்று பிரபாகரன் விசாரிக்க முயலும்போது, அந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார். வீட்டின் முன்புறக் கதவு பூட்டப்பட்டிருந்ததன் காரணமாக தப்பிக்க முடியாத அந்த நபர் ஸ்க்ரூ டிரைவரை வைத்து மிரட்டத் தொடங்கியுள்ளார். இதையடுத்து பிரபாகரன் பிளம்பர் உதவியுடன் அந்த நபரை வலைத்து பிடித்து விசாரித்துள்ளார்.
சிக்கிய பொறியியல் பட்டதாரி
அப்போது தான் ஒரு பொறியியல் பட்டதாரி என்றும் வீட்டுச் சூழ்நிலை, வங்கிக் கடன் காரணமாக திருட வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரபாகரன் அந்த பொறியியல் பட்டதாரியை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆன்லைனில் உணவு டெலிவரி
காவல்நிலையத்தில் திருட வந்த நபரை போலீஸார் விசாரித்த போது, அவர் கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் முத்தழகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் அவர் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்து வந்தவர் என்றும் உணவு டெலிவரியின்போது இந்த வீடு தனியாக இருப்பதை தெரிந்துக் கொண்டு திருடமுயன்றதும் தெரியவந்துள்ளது.
மதுபோதையில் வந்த திருடன்
அதோடு இவர் வீட்டுச் சூழ்நிலை மற்றும் கடன் பிரச்சனை காரணமாக திருட முயன்றதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் முந்தையநாள் இரவு மதுபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்த இந்த நபர், வாகனத்தை வேறு பகுதியில் நிறுத்திவிட்டு திருடுவதற்கு வீடு ஏறி குதித்துள்ளார்.
மதுபோதையில் அங்கேயே உறக்கம்
பின் மொட்டை மாடிக்கு சென்று அந்த வழியாக வீட்டுக்குள் நுழையும் கதவை உடைக்க முயன்றுள்ளார். கதவு உடைக்க முடியாக காரணத்தால் வீட்டு உரிமையாளர்களே கதவை திறந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம் என மதுபோதையில் அங்கேயே உறங்கியுள்ளார்.
பொறியியல் பட்டதாரி மீது வழக்கு பதிவு
காலை பொழுது விடிந்து எழுந்ததால் வெளியே வரவழியில்லாமல் அங்கேயே சிக்கியுள்ளார். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து இன்ஜினியர் பட்டதாரியை கைது செய்த போலீஸார் அவர்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக