ஆண்மான் நான் இறந்தப்பின் என்னுடைய உடலானது உன்னுடைய குடும்பத்திற்கு உணவாக பயன்படுவதை எண்ணி நான் மிகுந்த ஆனந்தம் அடைகின்றேன். இருப்பினும் என் வருகையை எண்ணி என் மனைவியும், என் மனைவியின் உடன்பிறந்தவளும் மற்றும் எனது குட்டிகளும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். நான் அவர்களை பாதுகாப்பானவர்களிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் இவ்விடத்தை வந்து அடைகின்றேன். எனவே, அதற்கு சிறிது கால அவகாசம் எனக்கு அளிப்பாயாக... என்று வேண்டி நின்றது.
இதைக் கேட்ட வேடன், முன்பு இதைப் போன்றே எடுத்துரைத்து இரண்டு மான்கள் சென்றுவிட்டன. அவை இரண்டும் இன்னும் வரவே இல்லை, என்னிடம் கிடைத்த உன்னையும் நான் விட்டுவிட்டால் என் குடும்பம் பசியினால் வாடி விடும். ஆகையால் உன்னை அனுப்ப எனக்கு விருப்பமில்லை, நான் இப்போது உன்னை கொல்கின்றேன் என்று கூறினான். ஆனால் ஆண்மான், நான் உன்னிடம் உரைத்த மாதிரியே என் குட்டிகளையும், என் மனைவியையும், அவளின் உடன்பிறந்தவளையும் தகுந்த இடத்தில் ஒப்படைத்து விட்டு மீண்டும் இந்த இடத்திற்கு வருவேன். இது சத்தியமாகும்.
எவராயினும் சத்தியம் உரைத்து அதை நிறைவேற்றாமல் இருப்பாராயின் பல வகையில் அவர் செய்த பாவங்கள் யாவும் அவருக்கே வந்தடையும். அதுமட்டுமின்றி இன்று சிவராத்திரி. நான் பொய் உரைக்குமாயின் பல வகையில் செய்த பாவங்கள் என்னை வந்தடையும். ஆகவே, இதுவே நான் உமக்கு அளிக்கும் வாக்குறுதியாகும் என்று கூறி வேடனிடம் தனது நிலையை எடுத்துரைத்தது. பின்பு வேடனும் ஆண்மானின் நிலையை உணர்ந்து சீக்கிரம் சென்று உன் குடும்பத்தை தகுந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இங்கு விரைந்து வருவாயாக என்று கூறினான். வேடன் கூறியதைக் கேட்ட ஆண்மானானது தனது இருப்பிடத்தை நோக்கி மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
கருத்து பரிமாறுதல் :
ஆண்மானின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்த அந்த இரண்டு பெண்மான்கள், ஆண்மான் வருவதை அறிந்ததும் நிகழ்ந்தவற்றை ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். அதில் மூத்த பெண்மானானது தனது சகோதரியிடம் தனது குட்டிகளையும், தனது கணவரையும் நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்து விட்டு வருவதாக முதலில் யாமே வேடனிடம் வாக்குறுதி கொடுத்துள்ளோம். ஆகவே, நானே வேடனின் குடும்பத்திற்கு இரையாக செல்கின்றேன் என்றது.
மூத்த பெண்மான் கூறியதைக்கேட்ட இளைய மானோ... அது எப்படி அக்கா? உங்களுக்கென்று கணவர் மற்றும் குட்டிகள் இருக்கின்றன. நான் உங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவே இங்கு வந்துள்ளேன். ஆகவே, நான் வேடனிடம் சென்று அவனுக்கு இரையாக செல்கின்றேன் என்றும், நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்வாக இருங்கள் என்றும் எடுத்துரைத்தது. ஆனால், ஆண்மானோ நீங்கள் இருவரும் குட்டிகளுடன் இங்கேயே இருங்கள். நான் வேடனிடம் சென்று அவனுக்கு இரையாக செல்கின்றேன் என்று கூறியது. இருப்பினும் மூன்று மான்களுக்கும் கருத்து ஒற்றுமை ஏற்படாமையால் குட்டிகளை வேறொரு மானிடம் ஒப்படைத்துவிட்டு வேடனிருக்கும் இடத்தை நோக்கி மூன்று மான்களும் சென்று கொண்டிருந்தன.
வேடனின் மகிழ்ச்சி :
மூன்று மான்களும் வேடனிருக்கும் இடத்தை அடைவதற்குள் மூன்றாம் ஜாமம் நிறைவுற்று நான்காம் ஜாமம் தொடங்கியது. மூன்று மான்கள் சென்றும் இன்னும் ஒரு மான் கூட வரவில்லையே என்று மனவருத்தத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த வேடன், தூரத்தில் மூன்று மான்கள் ஒற்றுமையுடன் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். அதை கண்டதும் அவன் மனம் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத வகையில் இருந்தது. ஒரு மானின் இறைச்சி கூட கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்ட எனக்கு இன்று மூன்று மான்களின் இறைச்சி கிடைக்கிறதா... என்று ஆனந்தம் கொண்டான்.
அந்த ஆனந்தத்தின் போது அவன் பருகுவதற்காக வைத்திருந்த நீரும், சில வில்வ இலைகளும் மரத்தினடியில் வீற்றிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து நான்காம் ஜாம பூஜையை முழுமையாக பூர்த்தி செய்தன. மானின் வருகைக்காக அவன் உறங்காது கண்விழித்து காத்துக் கொண்டிருந்து, அவனறியாமல் பூஜை செய்த முழுப்பலனையும் அவனுடைய மனமானது அடைய தொடங்கியது. அவ்வேளையில் அவன் மனதில் ஒருவிதமான மகிழ்ச்சியும், தெளிவும் கிடைத்தது.
வேடனின் மனமாற்றம் :
மனம் அடைந்த தெளிவினால் வேடனின் அறிவும் தெளிவடையத் துவங்கியது. மிருகங்களின் வருகையானது வேடனுக்கு ஒருவிதமான மகிழ்ச்சியை அளித்தாலும் அவனது மனமானது அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அதாவது, நம்மை போன்று சிந்தித்து செயல்படும் அறிவு இல்லாத விலங்குகள் கூட தான் உரைத்த வாக்குறுதிக்காக இன்று தனது உயிரை போக்கிக்கொள்ள வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த நானோ அந்த விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாக உட்கொண்டு வருகிறேன்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக