சனி, 14 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி 145


வ்வளவு பெரிய பாவச்செயலை நான் புரிந்து வந்துள்ளேன். இந்த விலங்குகளிடம் இருக்கின்ற ஞானம் கூட என்னிடம் இல்லையே? இந்நாள் வரை நான் செய்து வந்த என் பாவத்தை எவ்விதம் நான் குறைக்க இயலும்? என்று அவனது மனம் அவனை பலவிதமான கேள்விகளை கேட்கத் தொடங்கியது. அக்கேள்விகளுக்கு என்ன பதிலுரைப்பது என்று அறியாது திகைத்து நின்று கொண்டிருந்தான் வேடன்.

மாற்றம் பிறத்தல் :

மூன்று மான்களும் வேடனிருக்கும் இடத்திற்கு வந்தன. பின்பு, வேடனிடம் இதில் யாருடைய மாமிசம் வேண்டுமோ அவர்களை கொன்று எடுத்துச்சென்று உனது குடும்பத்தாருடன் உண்டு பசியைப் போக்கிக் கொள்ளலாம் என்று ஆண்மான் கூறியது. ஆண்மானுடைய வாக்குறுதியைக் கேட்ட வேடனும் மரத்திலிருந்து கீழிறங்கி மான்களை நோக்கி இதுநாள் வரை நான் செய்து வந்துள்ள என் தவறை சுட்டிக்காட்டியவர்கள் நீங்களே. இனி ஒருபோதும் வனத்தில் இருக்கும் மிருகங்களை கொன்று உணவாக உட்கொள்ள மாட்டேன் என்று கூறி தனது கரங்களில் இருந்த அம்பு மற்றும் வில்களை உடைத்தெறிந்தான்.

அனைவருக்கும் காட்சியளித்த சிவபெருமான் :

பின்பு, வேடன் மான்களை நோக்கி இனி நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தாருடன் மகிழ்வாக இருங்கள் என்று கூறி மான்கள் அனைத்தையும் கொல்லாமல், அவ்விடத்தை விட்டுச் செல்ல அனுமதித்தான். வேடனின் இந்த மனமாற்றத்தை எதிர்பார்க்காத மான்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தன.

இங்கு நிகழ்ந்தவற்றை அனைத்தையும் லிங்க வடிவத்தில் இருந்து கண்டு வந்த எம்பெருமான், வேடன் அறியாது செய்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்து வேடனின் மனமாற்றத்தையும் கண்டு அவ்விடத்தில் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் காட்சியளித்தார்.

எம்பெருமானின் காட்சிக்காக பல வருடங்கள் மற்றும் யுகங்கள் தவமிருந்து, பெறுவதற்கு அரிய காட்சியை தான் செய்த செயல்கள் மூலம் அங்கிருந்த வேடனும், மான்களும் அனுபவிக்கத் தொடங்கினர். காண்பதற்கு அரியவரான எம்பெருமானை கண்டதும் அங்கு கூடியிருந்த வேடனும், மான்களும் அங்கிருந்த வனத்தில் இந்த நொடிப்பொழுதில் எவருக்கும் கிடைக்காத அரிய காட்சி மற்றும் மகிழ்ச்சியை அடைந்தனர்.

வரம் பெறுதல் :

எம்பெருமான் அங்கிருந்த வேடனை நோக்கி வேடனே! நீ அறியாது உண்ணாமல் இருந்து பூஜை செய்ததால் யாம் மகிழ்ந்தோம் என்று கூறினார். வேடனை நோக்கி உனக்கு வேண்டும் வரத்தைக் கேட்பாயாக என்று கூறி அருளினார். எம்பெருமானை வணங்கிய வேடனோ பிரபுவே... தங்களை நான் கண்டது என் வாழ்நாளில் நான் அடைந்த மாபெரும் புண்ணியம் ஆகும். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? என்று கூறினான்.

வேடன், சிவபெருமானிடம் எம்பெருமானே! நான் என் வாழ்நாளில் என்னை அறியாது பல உயிர்களை கொன்று (ஜீவா வதை) அதன் இறந்த உடல்களை இறைச்சியாக உண்டு சொல்வதற்கு அரிய பல பாவங்களை புரிந்துள்ளேன். அந்த பாவங்களிலிருந்து என்னை அகல தாங்கள் எனக்கு அருள்புரிய வேண்டும் என்று வேண்டினான்.

எம்பெருமானும் வேடன் வேண்டிய வரத்தினை அவ்விதமே அருளி அவன் செய்த பாவங்கள் யாவற்றையும் அவன் அறியாது செய்த சிவராத்திரி பூஜையினால் மனமகிழ்ந்து, அவன் கர்மபலன் அனைத்தையும் எம்பெருமான் அனுக்கிரகம் செய்தார். பின்பு, வேடனை நோக்கி வேடனே! இன்று முதல் நீ குகன் என்ற பெயரோடு அனைவராலும் அழைக்கப்பெறுவாய் என்றும், உனது கீர்த்தியானது நான்கு திசைகளிலும் பரவும் என்றும், உன்னை அனைவரும் பாராட்டி கொண்டாடுவார்கள் என்றும் கூறினார்.

மேலும், நீ செய்த இந்த பூஜையினால் நீ எடுக்கும் அடுத்தப் பிறவியில் அயோத்தியில் தசரதன் மைந்தனாக பிறந்து தந்தையின் வாக்கை எந்நிலையிலும் தவறாது காப்பாற்றும் நிமிர்த்தம் உடையவனாக வாழ்ந்து புகழ் அடைவாய் என்று கூறினார்.

மோட்சம் அடைதல் :

அவ்வேளையில் மற்ற மானிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த குட்டிகள் அனைத்தும் தனது பெற்றோரை தேடி நீர் நிரம்பிய தடாகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன. தங்களது பெற்றோர்கள் தங்களை விட்டுவிட்டு தாங்கள் மட்டும் சுபகாரியம் செய்யப்போவதாக எண்ணி வேடனுக்கு இரையாக செல்வதை அறிந்ததும் தங்களுக்கும் அந்த புண்ணியம் வேண்டுமென்று எண்ணி அவ்விடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன.

குட்டி மான்களுக்கும் எம்பெருமானின் காட்சியானது கிடைக்கப்பெற்றது. குட்டி மான்களுடன் இரண்டு பெண்மான்களும், ஒரு ஆண்மானும் அங்கிருக்க எம்பெருமானும் அவர்களை நோக்கி கொடுத்த வாக்குறுதியை எந்நிலையிலும் காப்பாற்ற வேண்டும் என்று உயர்ந்த லட்சியம் கொண்ட மான்களே உங்களது இச்செயலானது எந்த காலத்திலும் நீங்காமல் இருக்கும் என்றும், இப்பிறவியை முடித்து நீங்கள் அனைவரும் சிவலோக பதவியை அடைவீர்கள் என்றும் கூறி அங்கிருந்த மான்களுக்கும், குட்டிகளுக்கும் மோட்சத்தை அளித்து அவ்விடத்தை விட்டு மறைந்தார்.

எம்பெருமான் மறைந்த பின்பு வேடனும் மான்களிடம் விடைப்பெற்று தனது இருப்பிடத்தை நோக்கி சென்றான். தனது வாழ்நாளில் நிகழ்ந்த இச்சம்பவத்தை நினைத்து பெருமிதம் அடைந்து தனது குடும்பத்தாரிடம் எடுத்துரைத்து இனிவரும் காலங்களில் நாம் ஜீவா வதை செய்தல் கூடாது என்று கூறி சைவ உணவுகளை உட்கொண்டு தனது வாழ்நாளை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து தனது பிறவிப்பயனை அடைந்தான். எம்பெருமான் அருளிய அருளினால் சுபிட்சமான வாழ்க்கையை வனத்தில் மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து தனது வாழ்வின் பயனாக சிவலோகப் பதவியை அடைந்தன மான்கள்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்