Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 14 மார்ச், 2020

சிவபுராணம்..!பகுதி143


மானின் கேள்வி வினோதமாக இருப்பினும் வேடன், மானை நோக்கி உன்னை கொன்று உனது மாமிசத்தை எடுத்துச்சென்று உணவிற்காக காத்துக்கொண்டு இருக்கும் என் குடும்பத்தினரிடம் கொடுக்க உள்ளேன் என்று கூறினான். வேடன் கூறியதைக் கேட்ட மானோ, என் இறப்பிற்கு பின் எனது உடல் உனக்கு உணவாக பயன்படுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருப்பினும், நீ விரும்பியதை செய்வதற்கு முன் நான் ஈன்றெடுத்த இளம்குட்டிகள் பசியால், நான் எடுத்து வரும் உணவிற்காக என்னை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்.

எனக்கு சிறிது காலம் கொடுத்தால் எனது குட்டிகளை என் உடன்பிறந்தவளிடம் ஒப்படைத்து விட்டு, என் கணவனுக்கு அவளையே மனைவியாக இருக்கும்படி செய்துவிட்டு மீண்டும் இங்கே வருகிறேன். பின், என் இறைச்சியை கொண்டு சென்று மகிழ்ச்சி அடைவீர்களாக... என்று கூறியது. அதைக்கேட்ட வேடன் அதைச்சிறிதும் நம்பாமல் ஆபத்துக் காலத்தில் யாவரும் இவ்விதம் பொய் உரைப்பது வழக்கம் தான் என்றான்.

ஆனால், பெண்மானோ நான் உரைப்பது சத்தியம் ஆகும். நான் எனது கடமைகளை முடித்தப் பின்பு இவ்விடம் நோக்கி வருவேன் என்று கூறியது. பின்பு, மானின் வேண்டுகோளுக்கு வேடனும் இசைந்தான். பின்னர் மான் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து ஓடியது.

இரண்டாம் ஜாமம் ஆரம்பித்தல் :

நீர் நிரம்பிய அந்த தடாகத்தில் இன்னொரு பெண்மான் ஒன்று நீர் அருந்த அவ்விடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. மானின் வருகையை அறிந்த வேடனும் அந்த மானை கொல்ல தனது வில்லில் அம்பை தயார் நிலையில் வைத்து மானை குறிப்பார்த்துக் கொண்டிருந்தான். அவனது உடல் அசைவினால் மீண்டும் அவன் அருந்துவதற்காக வைத்திருந்த நீரானது கீழே உள்ள சிவலிங்கத்தின் மீது ஊற்றியது மற்றும் சில வில்வ இலைகளும் சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அவனறியாமலேயே இரண்டாம் ஜாம பூஜையும் இனிதே நிறைவுற்றது.

வேடனின் செய்கையால் உண்டான சத்தத்தைக் கேட்ட பெண்மானானது திரும்பி தன்னை கொல்ல தயாரான நிலையில் உள்ள வேடனைப் பார்த்து, வேடனே... என்ன செய்ய காத்திருக்கின்றாய் என்று கேட்டது. வேடனும் முன்பு போல அந்த மானிடம் உரைத்த அதே தகவலை மீண்டும் இம்மானிடம் எடுத்துரைத்தான். இந்த பெண்மானோ முன்பு வந்த பெண்மானின் உடன்பிறந்த மான் ஆகும். தனது உடன்பிறந்தவள் இன்னும் தனது இருப்பிடம் நோக்கி வரவில்லையே என்று அந்த மானை தேடி வந்துள்ளது.

வேடன் கூறியதைக் கேட்ட மானோ, என் இறப்பிற்கு பின் எனது உடல் உனக்கு உணவாக பயன்படுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருப்பினும், நீ விரும்பியதை செய்வதற்கு முன், எனக்கு சிறிது காலம் கொடு. ஏனெனில் என்னுடைய சகோதரி இரை தேட செல்லும்போது என்னிடம் அவளின் குட்டிகளையும், கணவனையும் ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறாள். எனவே நீ எனக்கு சிறிது காலம் கொடுத்தால், நான் அங்கு சென்று என் நிலையை கூறி விரைவில் திரும்பி இவ்விடம் வந்து சேர்கிறேன் என்றது. பின் என் இறைச்சியை கொண்டு சென்று மகிழ்ச்சி அடைவீர்களாக... என்று கூறியது.

பெண்மான் கூறியதைக் கேட்ட வேடன் உன்னை எவ்விதம் நம்புவது, ஆபத்துக் காலத்தில் யாவரும் இவ்விதம் பொய் உரைப்பது வழக்கம் தான் என்றான். ஆனால், பெண் மானோ நான் உரைப்பது சத்தியம் ஆகும். நான் எனது கடமைகளை முடித்தப் பின்பு இவ்விடம் நோக்கி வருவேன் என்று கூறியது. பின்பு மானின் வேண்டுகோளுக்கு வேடனும் இசைந்தான். மான் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து ஓடியது.

மூன்றாம் ஜாமம் ஆரம்பித்தல் :

இரண்டாம் ஜாமம் நிறைவுற்று மூன்றாம் ஜாமமும் துவங்கத் தொடங்கியது. அவ்வேளையில் முதலில் வந்து சென்ற பெண்மானின் கணவனான ஆண்மான் தனது பெண்மானை தேடி காட்டில் அலைந்து கொண்டிருந்தது. அப்பொழுது அங்கிருந்த நீர் நிறைந்த தடாகத்திற்கு வந்திருக்குமோ என்று எண்ணி அவ்விடத்திற்கு வந்து கொண்டிருந்தது. ஆண்மான் நன்றாக கொழுத்து சதைப்பிடிப்புடன் காணப்பட்டது.

இதை பார்த்த வேடன், முன்பு சென்ற இரண்டு மான்களைக் காட்டிலும் இந்த மானின் மாமிசம் சற்று அதிகமாக இருக்கும். இன்று நமக்கு சரியான வேட்டை தான் என்று முடிவு செய்து மானை கொல்ல தனது வில்லில் அம்பை பொருத்தி மானை நோக்கி குறிப்பார்த்து கொண்டிருந்தான். அவனது உடல் அசைவினால் மீண்டும் அவன் அருந்துவதற்காக வைத்திருந்த நீரானது கீழே உள்ள சிவலிங்கத்தின் மீது ஊற்றியது மற்றும் சில வில்வ இலைகளும் சிவலிங்கத்தின மீது விழுந்தன. அவனறியாமலேயே மூன்றாம் ஜாம பூஜையும் இனிதே நிறைவுற்றது.

வேடனின் உடல் அசைவினால் எழுந்த சத்தத்தை கேட்ட ஆண்மானானது அவனை நோக்கி என்னை கொல்ல போகிறாயா? என்று கேட்டது. வேடனும் ஆம் என்று கூறி முன்பு இரண்டு பெண்மான்களிடம் உரைத்த அதே விபரத்தை ஆண்மானிடம் எடுத்துரைத்து நான் உன்னைக் கொல்லப் போகிறேன் என்று கூறி ஆண்மானை நோக்கி அம்பு எய்த தயாரான நிலையில் இருந்தான்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக