Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

வலிதாய நாதர் திருவலிதாயம் - சென்னை

 அருள்மிகு ஶ்ரீ திருவல்லீஸ்வரர் கோவில் -பாடி குருத்தலம் கோவில் - Unmai  seithigal

இறைவர் திருப்பெயர் : வலிதாய நாதர், வல்லீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : ஜகதாம்பாள், தாயம்மை.
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
தல மரம் : பாதிரி.
தீர்த்தம் : பரத்வாஜ தீர்த்தம்.
வழிபட்டோர் : பரத்வாஜர், இராமர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், வலியன் (கருங்குருவி) முதலானோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - பத்தரோடுபல ரும்பொலியம்மலர்.

தல வரலாறு:

தற்போது சென்னைக்கு அருகில் உள்ள 'பாடி' என்னும் இடமே 'திருவலிதாயம்' என்னும் தலம் ஆகும். பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது. சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது.

சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம். பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது.

அதில் கொடிமரம், நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு. வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது.

உள் பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது. ஈசன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் உள்ளது. அம்பாள் திருவுருவம் ஒரு காலத்தில் பின்னப்பட, புதிய மூர்த்தம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து, பின்னமான மூர்த்தத்தை ஈசன் கருவறைக்கு உள்ளே வைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

பரத்வாஜ முனிவர், வலியனாக (கருங்குருவியாக) சாபம் பெற்றார்; அச்சாபம் நீங்க இத்தலத்து வந்து தீர்த்தம் உண்டாக்கி, இறைவனைப் பூசித்துச் சாபம் நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறு. பிரம்மாவுக்கு கமலை, வல்லி என இரு பெண்கள் தோன்றினர் என்றும் அவர்களை விநாயகர் மணந்து கொண்டார் என்றும் வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது.

உள் பிரகாரத்தில் சூரியன், 4 கரங்களுடன் உள்ள பாலசுப்ரமனியர், விநாயகர், தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, பிரம்மா, துர்க்கை ஆகியோரின் உருவச்சிலைகள் இருக்கின்றன. ஈசன் கருவறை பின்புற கோஷ்டத்தில் அநேக தலங்களில் லிங்கோத்பவர் தான் இருப்பார். ஆனால் இங்கு மகாவிஷ்ணு காணப்படுகிறார். மகாவிஷ்ணு, அவரின் அம்சமான பரசுராமர், ராமர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு இருப்பார். அவ்வகையில் இத்தல இறைவனை இராமர் வழிபட்டுள்ளார். மேலும் சோமஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமன் பூஜித்த அனுமலிங்கம், இந்திரன் சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.


சிறப்புக்கள் :

இத்தலத்தில் பௌர்ணமி விசேஷமாக சொல்லப்படுகிறது .

திருமுறை தலமட்டுமின்றி, அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும் உள்ளது.

பரத்வாஜர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.


போன்:

 +91 - 44 - 2654 0706

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவில் , சென்னை ஆவடிச்சாலையில் 'பாடி' உள்ளது. 'டி.வி.எஸ், லூகாஸ்' நிறுத்தத்தில் இறங்கி எதிரில் போகும் சாலையில் சென்றால், ஊர் நடுவே கோயில் உள்ளது.

பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது.

பரத்வாஜ முனிவர், வலியனாக (கருங்குருவியாக) சாபம் பெற்றார்; அச்சாபம் நீங்க இத்தலத்து வந்து தீர்த்தம் உண்டாக்கி, இறைவனைப் பூசித்துச் சாபம் நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக