புதுக்கோட்டை மத்திய சிறையில் கைதிகளின் அறையில் 5 செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நடிகர் விஜய் சேதுபதியின் நற்பணி மன்ற தலைவர் மணிகண்டன் என்பவர் புதுச்சேரியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதை அடுத்து இவர் ஏற்கனவே ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்து சில பிரச்சனைகளால் பதவி விலகியதாகவும், அதனை தொடர்ந்து சில பிரச்சனைகள் தொடர்ந்து இருந்துகொண்டே வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கதர் வாரிய அதிகாரி கணேசன் ஆகியோரின் கொலை முதல் மணிகண்டனின் கொலை வரை அனைத்தும் ஜெயிலில் உள்ள ரவுடிகள் மூலம் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது என்னும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் சிறை அதிகாரிகள் நேற்று கைதிகளின் அறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொலைவழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த கைதி அறையில் நடந்த சோதனையில் 5 மொபைல் போன், பீடி கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிறை அதிகாரி அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கைதிகள் செல்போனில் பேசும் பொழுது போலீசாரால் சிக்னல் மூலம் டிராக் செய்ய முடியும் என்பதால் வாட்ஸ்அப் கால் மூலமாக வெளியில் உள்ளவர்களுடன் பேசியுள்ளனர் என்பது போலீசாரின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது, மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக