இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான கெளதம் அதானி தலைமை வகிக்கும் அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ (சிறப்புப் பொருளாதாரப் பகுதி) நிறுவனம் கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தில் வெற்றிகரமாக 75% பங்குகளைச் சுமார் 12,000 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.
13,500 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்ட இந்த டீல் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 13 சதவீதம் குறைவான விலைக்கு அதானி வாங்கியுள்ளார். தற்போது அதானி போர்ட்ஸ் கைப்பற்றியுள்ள பங்குகள் கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தின் முதலீட்டாளர்களான CVR குரூப் மற்றும் இதர முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்டவை.
கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தில் 75 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் துறைமுக வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்க உள்ளது.
அதானி போட்ர்ஸ்
அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி போர்ட்ஸ் ஜனவரி மாதம் கிருஷ்ணாபட்டணம் துறைமுக நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கான பங்குகளைக் குழுமத்தின் உள் நிதி திரட்டல் மற்றும் பண இருப்பு மூலம் கைப்பற்ற திட்டமிட்டு வருவதாக அறிவித்து இருந்தது.
இந்தப் பங்குகளைச் சுமார் 13,500 கோடி ரூபாய் தொகைக்குக் கைப்பற்ற உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்தது.
குறைவான விலை
அதானி குழுமம் திட்டமிட்டபடி, கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தின் முதலீட்டாளர்களான சிவிஆர் குரூப் மற்றும் இதற சிறு குறு முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. முன்பு அறிவிக்கப்பட்ட விலையை விடவும் சுமார் 13 சதவீதம் குறைவான விலைக்குப் பங்குகளைக் கைப்பற்றியுள்ளது அதானி குழுமம்
கிருஷ்ணாபட்டணம் துறைமுகம்
இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய துறைமுக வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் மாநிலமாக விளங்கும் ஆந்திர பிரதேசத்தில் தான் கிருஷ்ணாபட்டணம் துறைமுகம் உள்ளது. இந்தத் துறைமுகத்தில் multi-cargo வசதிகள் இருப்பதால் எதிர்கால வர்த்தக விரிவாக்கத்திற்கும் அதிகளவிலான சரக்குகளைக் கையாளுவதற்கும் இந்தத் துறைமுகம் சிறப்பானதாக இருக்கும். 2019ஆம் நிதியாண்டில் கிருஷ்ணாபட்டணம் துறைமுகம் சுமார் 54 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.
மிகப்பெரிய வளர்ச்சி
கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தைக் கைப்பற்றியதன் மூலம் அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ (சிறப்புப் பொருளாதாரப் பகுதி) நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 500 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் அளவிற்கு உயரும். இதுமட்டும் அல்லாமல் கிழக்கு முதல் மேற்கு வரையிலான கப்பல் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் அதானி போட்ர்ஸ் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு மதிப்பு
இந்த அறிவிப்பின் மூலம் அதானி போர்ட்ஸ் நிறுவன பங்குகள் இன்று ஓரே நாளில் 3.45 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இன்று காலையில் ஒரு பங்கின் விலை 356 ரூபாய்க்குத் துவங்கிய நிலையில், வர்த்தக முடிவில் 3.45 சதவீத வளர்ச்சியுடன் 362.45 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக