Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 நவம்பர், 2020

குளு குளு ஏசி வசதியுடன் 1,250 சிஎன்ஜி பஸ்கள்... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த அதிரடி...

குளு குளு ஏசி வசதியுடன் 1,250 சிஎன்ஜி பஸ்கள்... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த அதிரடி...

சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய 1,250 ஏசி பேருந்துகளை டெல்லி போக்குவரத்து கழகம் வாங்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து வருகிறது. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் சிஎன்ஜி உள்ளிட்ட எரிபொருட்கள் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாடும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய 1,250 பேருந்துகளை டெல்லி போக்குவரத்து கழகம் வாங்கவுள்ளது. இந்த பேருந்துகள் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும்.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான 1,250 தாழ் தள ஏசி சிஎன்ஜி பேருந்துகளை வாங்குவதற்கு, டெல்லி போக்குவரத்து கழகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் நவம்பர் 27ம் தேதி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலை தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் செயல்படும் டெல்லி மாநில அரசு, பொது போக்குவரத்தை பெரிதாக்கும் பணிகளிலும், காற்று மாசுபாட்டை குறைக்கும் பணிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில் மற்றொரு மைல்கல்லாக, பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான 1,250 தாழ் தள ஏசி சிஎன்ஜி பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு டெல்லி போக்குவரத்து கழக வாரியம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கூறியபடி, டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லி மாநில அரசின் மின்சார வாகன கொள்கை, கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதன்கீழ், எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு அதிகபட்சமாக 1.50 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லி உள்ளது. அங்கு காற்றின் தரம் அவ்வப்போது மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடுகிறது.

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாகவும் இதுபோன்ற நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசு எடுத்து வருகிறது. டெல்லி மாநில அரசு மட்டுமல்லாது, மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

மத்திய அரசு தன் பங்கிற்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. மாநில அரசுகள் தரப்பில், மானியம் வழங்கும் திட்டம் மட்டுமல்லாது, சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விலக்கு வழங்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக