Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 நவம்பர், 2020

நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

Important Signs That We Don’t Drink Enough Water

இந்த உலகில் தண்ணீரை விட உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சிறந்த பானம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது. என்ன தான் ஒரு கப் காபி அல்லது ஒரு கேன் சோடா குடித்தாலும், தாகத்தின் போது ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் தான் திருப்திகரமாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எப்படி ஒரு மனிதன் உயிர் வாழ உணவு முக்கியமோ, அதேப் போல் தண்ணீரும் அவசியமான ஒன்று.


பொதுவாக மனித உடல் 60% நீரால் ஆனது. உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால், அது நம் உடலியக்கத்தைப் பாதித்துவிடும். ஆனால் தற்போதைய அவசர உலகில் சாப்பிட கூட பலருக்கு நேரம் இருப்பதில்லை. சிலர் தண்ணீர் குடிப்பதையே மறந்து வேலை செய்கின்றனர். இப்படி போதுமான அளவு நீரைக் குடிக்காமல் இருந்தால், அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும். கீழே நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்.

வாய் வறட்சி

உங்களுக்கு வாய் வறட்சி அதிகமாக இருக்கிறதா? அப்படியானால் உங்கள் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லை என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. வாய் வறட்சியின் போது சர்க்கரை கலந்த பானங்கள் தற்காலிக தீர்வு மட்டுமே கொடுக்கும். ஆனால் வாய் வறட்சியின் போது தண்ணீர் குடிக்கும் போது, அது வாய் மற்றும் தொண்டையில் உள்ள சளி சவ்வுகளை உயவூட்டுகிறது. மேலும் தண்ணீரை சிறிது குடித்தாலும், அது நீண்ட நேரம் வாயை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

சரும வறட்சி

உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு தோல். இது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதுவே ஒருவர் சரும வறட்சியை அதிகம் சந்தித்தால், அது உடலில் போதுமான நீர் இல்லாததை உணர்த்தும் ஆரம்ப அறிகுறியாகும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், வியர்வையும் குறைவாக இருக்கும். வியர்வை என்பது நாள் முழுவதும் திரட்டப்பட்ட அழுக்குகள் மற்றும் எண்ணெயை வெளியேற்று வழி. இச்செயல் நடைபெறாமல் போனால், சருமத்தில் அழுக்குகள் மற்றும் எண்ணெய் தேங்க வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க விரும்பினால், உடனே தண்ணீர் குடிக்க ஆரம்பியுங்கள்.

அதிகப்படியான தாகம்

உங்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கிறதா? அப்படியானால் உங்கள் உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்று அர்த்தம். எனவே இதை தவிர்க்க உடனே அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

கண் வறட்சி

உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால், வாய் வறட்சி, சரும வறட்சி மட்டுமின்றி, கண்களும் வறட்சியடையும். நீங்கள் தினமும் போதுமான அளல் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், கண்கள் வறட்சி அடைய ஆரம்பிக்கும். இது அப்படியே நீடித்தால், காலப்போக்கில், அது கண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

மூட்டு வலி

நமது குருத்தெலும்பு மற்றும் முதுகெலும்பு டிஸ்க்குகள் சுமார் 80% நீரால் ஆனவை. நாம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், எலும்புகள் ஒன்றையொன்று உரசாமல் இருக்க, உடலில் போதுமான நீர் இருக்க வேண்டியது அவசியம். எப்போது நீரின் அளவு உடலில் மிகவும் குறைவாக இருக்கிறதோ, அப்போது சிறு நகர்வை மேற்கொண்டாலும், மூட்டுக்களில் வலியை சந்திக்க நேரிடும்.

தசை அடர்த்தி குறையும்

நமது தசைகள் பெரும்பாலும் நீரைக் கொண்டவை. எனவே உடலில் குறைவான நீர் என்றால் தசையின் அடர்த்தியும் குறைவாக இருக்கும். உடற்பயிற்சிக்கு முன்பும், பின்னும் தண்ணீரைக் குடிப்பது, உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், உடற்பயிற்சி மற்றும் பளு தூக்குதல் தொடர்பான வீக்கம் மற்றும் காயங்களின் வாய்ப்பைக் குறைக்கிறது.

அடிக்கடி உடல்நிலை சரியில்லாமை

தண்ணீரைக் குடிப்பதால், உடல் தொடர்ந்து நச்சுக்களை வெளியேற்ற அனுமதிக்கிறது. உடல் உறுப்புக்கள் இயந்திரத்தைப் போன்று உடலில் உள்ள சில கழிவுப் பொருட்களை வடிகட்டும் பணியை செய்கின்றன. ஆனால் இயந்திரத்தில் எரிபொருள் இல்லாவிட்டால், எப்படி அந்த இயந்திரம் சரியாக வேலை செய்யாதோ, அதேப் போல் உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால், உறுப்புக்களும் சரியாக வேலை செய்யாது. அதோடு போதுமான நீர் இல்லாமல் இருந்தால், புதுப்புது ஆரோக்கிய பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க வழிவகுக்கிறது.

சோர்வு

உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால், உடலானது இரத்தத்தில் இருந்து நீரைப் பெற்றுக் கொள்ளும். இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்கப்பெறாமல், எப்போதும் உடல் மிகுந்த சோர்வுடனும், ஒருவித தூக்க நிலையிலும் இருக்க வழிவகுக்கும்.

அதிகப்படியான பசி

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போது, உங்கள் உடல் அதற்கு உணவுத் தேவை என்று நினைக்கத் தொடங்கும். இப்படி நாள் முழுவதும் போதுமான நீர் குடிக்காமல் இருக்கும் போது, அந்நாள் முழுவதும் பசி அதிகமாக எடுக்கும்.

செரிமான பிரச்சனைகள்

உடலுறுப்புக்கள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் செயல்பட வேண்டுமானால், போதுமான நீர்ச்சத்துடன் உடல் இருக்க வேண்டும். இது செரிமான மண்டலத்திற்கும் பொருந்தும். போதுமான நீர்ச்சத்து இல்லாத போது, வயிற்றில் உள்ள சளியின் அளவு மற்றும் வலிமை குறைகிறது. மேலும் இது வயிற்றில் சுரக்கும் அமிலம், செரிமான மண்டலத்தின் உட்புறங்களுக்கு பெரிய சேதங்களை ஏற்படுத்த அனுமதிக்கிறது. இதன் விளைவாக நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரண கோளாறுகளை சந்திக்க நேரிடுகிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக