ஒரு வினோதமான சம்பவத்தில், ஒரு வயதான கொரோனா வைரஸ் நோயாளி மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அவரது வீட்டிற்கு திரும்பினார். இதில் என்ன வினோதம்? ஒரு வாரம் முன்பு அவரது குடும்பத்தினர் அவரது உயிரற்ற உடலைப் பெற்றார்கள் என்பதும் அதை அவர்கள் தகனமும் செய்தார்கள் என்பதுதான் வினோதம்.
பிராட்டியில் வசிக்கும் ஷிப்தாஸ் பாண்டியோபாத்யாய், குடும்ப உறுப்பினர்கள் அவரது இறுதிச் சடங்குகளை பத்து நாட்கள் செய்து முடிப்பதற்கு ஒரு நாள் முன்னர் வீடு திரும்பினார்.
COVID-19 உறுதி செய்யப்பட்ட பின்னர், 75 வயதான அவர், நவம்பர் 11 ஆம் தேதி பாராசத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் இறந்து விட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
அவரது உடல் ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு, COVID நெறிமுறைகளைப் (COVID Guidelines) பின்பற்றி, தூரத்திலிருந்து குடும்ப உறுப்பினர்களுக்குக் காட்டப்பட்டது. அவரது முகத்தை தங்களால் தெளிவாகக் காண முடியவில்லை என குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.
"நாங்கள் உடலை தகனம் செய்தோம், இன்று அவரது ஸ்ரார்த்தம் செய்ய தயாராக இருந்தோம். இருப்பினும், நேற்று எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது.
என் தந்தை குணமடைந்துவிட்டதாக ஒருவர் எங்களிடம் கூறினார். அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல நாங்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்" என்று பாண்டியோபாத்யாயின் மகன் கூறினார்.
"நாங்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தோம். தாங்க முடியாத ஆச்சரியத்தில் நாங்கள் அங்கு சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். நாங்கள் யாரை தகனம் செய்தோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.
பாண்டியோபாத்யாயின் உடல் என்று நினைத்து யாருடைய உடல் தகனம் செய்யப்பட்டது என்று விசாரித்தபோது, சுகாதாரத் துறை அதிகாரி மற்றொரு வயதான கோவிட் நோயாளி, கர்தாவைச் சேர்ந்த மோகினிமோகன் முகோபாத்யாயும் நவம்பர் 13 ஆம் தேதி இறந்துவிட்டார் என்றும், அவருடைய இறுதிச் சடங்குகள்தான் செய்யப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.
முகோபாத்யா கோவிட் -19 தொற்றிலிருந்து குணமாகிவிட்டதாக முகோபாத்யாயின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவர்கள் மருத்துவமனையை அடைந்தனர். அப்போதுதான் இந்த ஆள்மாறாட்டம் பற்றி தெரிய வந்தது என அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையில், பாஜகவின் (BJP) மேற்கு வங்கத் தலைவர் திலீப் கோஷ் இதுபோன்ற சம்பவங்கள் மேற்கு வங்கத்தில் மட்டுமே நடக்க முடியும் என்று கூறினார்.
கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைவாகக் காட்ட, மாநில அரசு குறைந்த எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
"நமது அண்டை மாநிலங்களான பீகார், ஒடிசா மற்றும் உ.பி. போன்றவை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளைச் செய்கின்றன. அதேசமயம் அவர்கள் (மேற்கு வங்க அரசு) 45,000 சோதனைகளைத்தான் செய்கிறார்கள். ஏனெனில் அவர்கள் உண்மையை மறைக்க விரும்புகிறார்கள்.
அவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதித்தால், 20,000 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்படுவார்கள். மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை" என்று கோஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக