சீனாவின் முன்னணி டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான அலிபாபா-வின் ஆன்ட் குரூப்-ன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐபிஓ-விற்குத் தடை செய்தது முதல் அலிபாபா குழுமம் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைச் சீன அரசு தரப்பில் இருந்து எதிர்கொண்டு வருகிறது.
இதன் வாயிலாக அலிபாபா-வின் நிறுவனரான ஜாக் மா கடந்த 2 மாதத்தில் சுமார் 11 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார்.
சீன பொருளாதாரம்
சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்து இந்நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை சிறப்பாக இருக்கும் காரணத்தால் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் நிலையில், ஜாக் மா சுமார் 11 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார்.
ஜாக் மா வீழ்ச்சி
ஒரு ஆசிரியராக இருந்து கடும் உழைப்பின் மூலம் அலிபாபா போன்ற மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஜாக் மா, 2020ல் ஆன்ட் குரூப் ஐபிஓ வெளியீட்டின் வாயிலாக இவரது சொத்து மதிப்பு சுமார் 61.7 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பிடித்தார். ஆனால் இது நீண்ட காலம் நீட்டிக்கவில்லை.
2020ல் பெரும் சரிவு
ஐபிஓ தடை, ஆன்ட் குரூப் மீது நிர்வாகச் சீர்திருத்தம், சீன அரசின் மோனோபோலி வழக்கு, சீன அரசின் விசாரணை என அடுத்தடுத்து அலிபாபா நிறுவனத்தின் மீதும், ஜாக் மா மீதும் கடுமையான கட்டுப்பாடுகளைச் சீன அரசு விதித்து வருகிறது. இதன் வாயிலாகவே அக்டோபர் மாதத்தில் இருந்து அலிபாபா பங்கு விலை குறைந்து, இதன் சந்தை மதிப்பீடு குறைந்தது. இதன் எதிரொலியாகவே ஜாக் மாவின் சொத்து மதிப்பு சுமார் 11 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது.
ஜாக் மா கருத்து
ஜாக் மாவின் சீன வங்கி அமைப்பு குறித்த கருத்து சீன அரசுக்குச் சீனா வங்கிகளின் பலவீனத்தையும், ஆன்லைன் நிதி சேவை நிறுவனங்களின் ஆதிக்கம் அதன் எதிர்கால வளர்ச்சி குறித்த பயத்தை ஏற்படுத்தியது. எனவே சீன அரசு திட்டமிட்டு சீனாவின் நிதியியல் சேவை நிறுவனங்கள் மீது கடுமையாகக் கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.
சீன டெக் நிறுவனங்கள்
இதில் அலிபாபா-வின் ஆன்ட் குரூப்-ஐ தொடர்ந்து சீனாவின் 2வது பெரிய டெக் நிறுவனமான டென்சென்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நவம்பர் மாதத்தில் இருந்து சுமார் 15 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Meituan நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5ல் ஒரு பங்கு சரிவடைந்துள்ளது.
இதேபோல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அலிபாபா நிறுவனப் பங்குகள் அக்டோபர் மாதத்தில் இருந்து சுமார் 25 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக