பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
வேலை வாங்கி தருவதாக மோசடி
குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.
பரிசு கிடைத்துள்ளதாக மோசடி
அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோல் மோசடி செய்பவர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம்.
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
பெங்களூருவின் எலாசெனஹள்ளி பகுதியை சேர்ந்த சவிதா சர்மா, முகநூல் பக்கத்தில் தாலி உணவு வகை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என உணவகம் ஒன்றின் பேரில் விளம்பரம் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட சவிதா விளம்பர லிங்கை கிளிக் செய்து அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.
டெலிவரி செய்பவரிடம் மீதத் தொகை கொடுத்தால் போதும்
சவிதா தொடர்பு கொண்ட எண்ணில் இருந்து மறுமுனையில் பேசிய நபர், இந்த சலுகையை நீங்கள் பெற வேண்டும் என்றால் முதலில் ரூ.10-ஐ ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மீதமுள்ள தொகை சாப்பாடு டெலிவரி செய்யவரும் நபரிடம் கொடுத்தால் போதும் என கூறியுள்ளார்.
ரூ.50,000 டெபிட் செய்ததாக மெசேஜ்
அதோடு மட்டுமின்றி தங்களது எண்ணிற்கு ஒரு லிங்க் அனுப்பப்படும் அதில் இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்யும்படி கூறியுள்ளார். அதில் கேட்கப்பட்ட டெபிட் கார்டு எண் அதன் பின் உட்பட அனைத்து கேள்விகளையும் சவிதா பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார். அவ்வளவுதான் அடுத்த சில நிமிடங்களில் சவிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50000 டெபிட் செய்யப்பட்டதாக அவரது எண்ணிற்கு மெசேஜ் வந்துள்ளது.
சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார்
டெபிட் மெசேஜ் பார்த்து அதிர்ச்சியடைந்த சவிதா அந்த எண்ணுக்கு உடனடியாக கால் செய்து பார்த்துள்ளார். ஆனால் அந்த எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சவிதா இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இந்த விளம்பரம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக