உட்கார்ந்துதான் காரை இயக்க வேண்டும் என்ற விதியை நிஸான் நிறுவனம் மாற்றியமைக்கும் விதமாக ஓர் காரை வடிவமைத்திருக்கின்றது. இக்கார் பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.
தலைப்பைப் பார்த்த உடனேயே பலருக்கு கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்திருக்கும். உலக புகழ்பெற்ற நிஸான் கார் தயாரிப்பு நிறுவனமே நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனமே சந்தேகத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேர வழங்குவதைப் போல் அதன் எதிர்கால கார் ஒன்றை தயாரித்திருக்கின்றது.
ஜிடி-ஆர் (எக்ஸ்) 2050 எனும் முன்மாதிரி மாடலையே இதுவரை எந்தவொரு நிறுவனமும் தயாரித்திராத தோற்றத்திலும், ஸ்டைலிலும் அந்நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இந்த கார் வழக்கமான கார்களின் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட உருவத்திலும், ஸ்டைலிலும் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.
குறிப்பிட்டு கூற வேண்டுமானால் கால்களை இருக்க மடித்து சம்மணம் போட்டு அமர்ந்தால்கூட நமது தலையின் உயரத்தை எட்ட முடியாத அளவில் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால் இந்த காரை எப்படி ஓட்டுவது?, படுத்துக் கொண்டுதான் ஓட்ட வேண்டுமோ?, என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
இப்படி நாம் நினைத்தாலும் சரி, நினைக்கவில்லை என்றாலும் சரி, நிஸான் நிறுவனத்தின் இக்காரை
படுத்துக் கொண்டுதான் நாம் இயக்க வேண்டும். இதுபோன்ற தனித்துவமான ஓர் இருக்கை அமைப்பையே
ஜிடி-ஆர் (எக்ஸ்) 2050 கான்செப்ட் மாடல் பெற்றிருக்கின்றது.
அதாவது, ஓர் மனிதன் வானத்தில் பறந்தால் எப்படி தனது கை, கால்களை விரித்தபடி தரையைப் பார்த்தவாறு பறப்பானோ அந்த ஸ்டைலில் படுத்தவாறே இக்காரை இயக்க வேண்டும். இந்த தனித்துவமான தோற்றத்தை அமெரிக்காவில் உள்ள நிஸான் டிசைன் அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் இன்டர்ன்ஷிப் ஊழியர் ஒருவரே வடிவமைத்ததாதகக் கூறப்படுகின்றது.
முன்பக்க ஆக்ஸில் பகுதியில் தலையையும், ஒவ்வொரு வீல்களுக்கும் அருகில் கை, கால்களை நிலை நிறுத்தும்படியும் அது வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், இக்காரை ஒருவர் இயக்க வேண்டும் என்றால் அவர் அந்த வாகனத்திற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையை கட்டாயம் அணிந்தே ஆக வேண்டும்.
இந்த காரே ஒரு சூட் மாதிரிதான் இருக்கு, இதை ஓட்ட ஓர் டிரஸ்ஸா என உங்களுக்கு நினைக்கு தோன்றலாம். உடை மட்டுமில்லைங்க தலைக்கவசம் ஒன்றும் வழங்கப்படும். குப்புறப்படுத்தால் எப்படி முன்னாடி வரும் வாகனங்களைப் பார்க்க முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். இதனை இந்த ஹெல்மெட் நிவர்த்தி செய்யும்.
அதாவது அனைத்து தகவலையும் இந்த ஹெல்மெட் வழங்கும் என தெரிகின்றது. இதற்கேற்ப பன்முக கேமிரா மற்றும் சென்சார்களை இக்கார் பெற்றிருக்கின்றது. இது ரைடருக்கு தேவையான அனைத்து தகவலையும் வழங்க உதவும். ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கண்டு வந்த விநோத அம்சங்களை இக்கார் பெற்றிருப்பது வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த வாகனம் ஒட்டுமொத்தமாக 10 நீளம் கொண்டதாக காணப்படுகின்றது. இதன் அகலம் 2 அடிகள் ஆகும். இந்த கான்செப்ட் காரைப் பார்க்கையில் நான்கு வீல்களைக் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்கைப் போல் காட்சியளிக்கின்றது. அதேசமயம், கார் பந்தயங்களில் காணப்படக்கூடிய ஸ்போர்ட்ஸ் காரைப் போன்றும் அது காட்சியளிக்கின்றது.
நிஸானின் இந்த கான்செப்ட் காரை பார்க்கையில் தயாரிப்பிற்கு சாத்தியமே இல்லாத ஓர் வாகனத்தைப் போன்றிருக்கின்றது. ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் இக்காரை நிஸான் தயாரிக்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. மேலும், இக்காரை வடிவமைத்தை இளைஞரை நிஸான் நிறுவனம் நிரந்தர பணியாளராக பணியமர்த்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக