பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் மின்சார ஆட்டோ எப்படி இருக்கும் என்கிற புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.
பிரபல கால் டாக்சி சேவை நிறுவனமான ஓலா விரைவில் மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் ஓலா நிறுவனம் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில் தனது புதிய மின்சார தயாரிப்பு நிறுவனத்திற்கான தலைமை அதிகாரியை இந்நிறுவனம் நியமித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, விரைவில் மின்சார ஸ்கூட்டர்களை அடுத்து எலெக்ட்ரிக் கார்களையும் ஓலா தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையே தற்போது ஓலாவின் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம் பற்றிய தகவலும் வெளியாகியிருக்கின்றது. ஆமாங்க, ஓலா ரொம்ப சீக்கிரமாவே இ-ஆட்டோ தயாரிப்பில் ஈடுபட இருக்கின்றதாம். இதுகுறித்த தகவலையும், புதிய மின்சார ஆட்டோ எப்படி இருக்கும் என்கிற தகவலையும் காடிவாடி ஆங்கில தளம் வெளியிட்டிருக்கின்றது.
ஓலா நிறுவனம் வாடகை வாகன சேவையில் ஈடுபட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எனவே இந்த துறையைத் தூக்கி பிடிக்கும் நோக்கில் அது புதிய மின்சார ஆட்டோக்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கின்றது. இதற்காக உருவாக்கப்பட்ட மாதிரி படங்களே இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்.

இந்த புதுமுக மின்சார ஆட்டோ மஹிந்திரா நிறுவனத்தின் ட்ரியோ ரக இ-ஆட்டோக்களுக்கு போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் மாதிரி படம் இருக்கின்றது. விரைவில் உருவத்தை பெறவிருக்கும் மின்சார ஆட்டோவானது தற்போது பயன்பாட்டில் இருக்கும் வழக்கமான ஆட்டோக்களைக் காட்டிலும் லேசான மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்க உள்ளது.
இது ஓர் மின்சார ஆட்டோ என்பதால் இதன் மேற்கூரையில் சோலார் பேனல் வழங்கப்பட இருக்கின்றது. இது ஆட்டோவின் பேட்டரிகளை சார்ஜிங் நிலையத்தின் உதவியின்றியே சார்ஜ் செய்ய உதவும். இத்துடன், மேலும் சில சுவாரஷ்ய வசதிகள் இந்த ஆட்டோவில் இடம்பெற இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் மாதிரி படமும், தகவல்களும் தெரிவிக்கின்றன. ஆனால், இதன் விலை, பேட்டரி, ரேஞ்ஜ் பற்றிய முக்கிய தகவல் வெளியாகவில்லை.
ஓலா எலெக்ட்ரிக் ஆட்டோ அடுத்த ஆண்டு அல்லது அடுத்து வரும் ஆண்டுகளுக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிக விரைவில் களமிறங்க இருப்பதாக உறுதி வாய்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இந்தியாவின் கால் டாக்சி சேவையில் தனது ராஜ்யத்தை ஓலா நிலை நிறுத்தியிருப்பதைப் போலவே விரைவில் வாகன விற்பனையிலும் மேற்கொள்ளும் என தெரிகின்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக