Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 மே, 2020

பதினேழாம் நாள் போர்..! கர்ணனின் கொடைத்திறன்..!

அர்ஜூனன், கர்ணனிடம் இருந்த நாகாஸ்திரத்திலிருந்து உயிர் தப்பினான் என்ற செய்தியைக் கேட்ட, தருமர், பீமன் முதலிய சகோதரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நாகாஸ்திரத்தை தவற விட்ட கர்ணனின் மேல் கோபம் கொண்ட சல்லியன், கர்ணனின் தேரில் இருந்து இறங்கி தனது தேரில் ஏறிக் கொண்டான். 

அப்போதுதான் கர்ணனுக்கு, பரசுராமர் கொடுத்த சாபம் நினைவிற்கு வந்தது. நீ படித்த யுத்த தந்திரங்களும், பிற கலைகளும் பயன்பட வேண்டிய சமயத்தில் பயன்படாமல் உனக்கு மறந்து போகட்டும் என்று அவர் அளித்த சாபம் பலித்து விட்டது. 

அவர் இட்ட சாபத்தினால்தான் எனக்கு தொடர்ந்து துன்பங்களும், தோல்விகளும் ஏற்படுகிறது என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். சல்லியன் கோபம் கொண்டு பிரிந்து சென்ற பிறகு கர்ணனுக்கு தேரோட்டியாக யாருமில்லை.

தேர்ப்பாகன் இல்லாத சாதாரண தேர் ஒன்றில் ஏறிக்கொண்டு கர்ணன், அர்ஜூனனோடு போர் செய்தான். கர்ணனை கொன்றாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அர்ஜூனன் போரில் இறங்கினான். கர்ணனுடைய தைரியமும், வீரமும் விநாடிக்கு விநாடி நலிந்து கொண்டேயிருந்தது. 

அர்ஜூனன் எய்த அம்புகள் கர்ணன் மேல் பாய்ந்தது. கர்ணனின் உடலில் அம்புகள் பல இடங்களில் பாய்ந்து இரத்தம் வழிந்தது. ஆனாலும் அந்த மனவேதனையை பொறுத்துக் கொண்டே அர்ஜூனன் மேல் அம்புகளை எய்து கொண்டிருந்தான். சூரியன் மறையும் நேரம் வந்துவிட்டது. அந்த சமயத்தில் கிருஷ்ணர், அர்ஜூனனிடம் சிறிது நேரம் போரை நிறுத்து.

ஒரு முக்கியமான காரியமாக நான் கௌரவர் பக்கத்தில் சென்று ஒருவரை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று கூறினார். அர்ஜூனன் அதற்கிணங்கிப் போரை நிறுத்தினான். 

கிருஷ்ணர், தேரிலிருந்து இறங்கி ஒரு வயதானவரை போல் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டு கர்ணன் இருந்த இடத்திற்குச் சென்றார். அவர் வருவதைக் கண்ட கர்ணன், தேரிலிருந்து கீழே இறங்கி மரியாதையுடன் நின்று கொண்டு, ஐயா, வாருங்கள். 

நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று அவரை கர்ணன் வரவேற்றான். வயதானவராக வந்திருக்கும் கிருஷ்ணர், கர்ணனிடம் கொடை வள்ளலே! நான் மேருமலையில் இறைவனை எண்ணித் தவம் செய்து கொண்டிருந்தவன், வருவோர்க்கெல்லாம் வரையாது வழங்கும் வள்ளல் என்று உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.

நான் ஏழ்மையினால் பெருந்துன்பமடைந்தவன். உங்களைத் தேடி இப்போது வந்திருக்கிறேன். நீங்கள் எனக்குச் செய்ய முடிந்த உதவியை இப்போதே செய்தால் நல்லது என்று கிருஷ்ணர், கர்ணனை வேண்டிக் கேட்டார். 

கர்ணன் அந்த அந்தணனுக்காக மனம் இரங்கினான், ஐயா! வயது முதிர்ந்த அந்தணரே, உமக்கு என்னிடமிருந்து எது வேண்டுமோ அதைக் கேளுங்கள். கட்டாயம் கொடுக்கிறேன் என்று கர்ணன் உறுதி அளித்தான். வள்ளல் பெருந்தகையே! இதுவரை நீங்கள் செய்திருக்கும் புண்ணியம் எல்லாவற்றையும் எனக்கு அப்படியே கொடுக்க வேண்டும். 

நீங்கள் சொன்ன சொல் தவறாதவர். அதனால் நான் கேட்டதை தயங்காமல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

ஒரு கணம் கர்ணன், அந்த அந்தணரைக் கண் இமைக்காமல் உற்றுப் பார்த்தான். அடுத்த கணம் அவனுக்கு உரிய பெருந்தன்மை காரணமாக முகம் மலர்ந்து, அந்தணரிடம்! என் உயிர் உடலின் உள்ளே இருக்கிறதா! இல்லையா! என்று உணர முடியாத நிலையில் நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள். 

யார் எதைக் கேட்டாலும் நான் தயங்காமல் வாரி வழங்கிக் கொண்டிருந்த காலத்தில் வராமல் போர்க்களத்தில், உயிரும், உடலும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் வந்திருக்கிறீர்கள். ஆனால் என்னால் கொடுக்க முடிந்த ஒன்று என்னிடம் இருக்கிறது. 

அதை உமக்கு கொடுப்பதில் பெருமைப்படுகிறேன். இதோ! என்னுடைய புண்ணியம் முழுவதையும் பெற்றுக் கொள்ளும் என்று கூறிக் கொண்டே, கர்ணன்! தன் புண்ணியம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, அந்த அந்தணரின் காலில் விழுந்து வணங்கினான்.

அந்தணர்! கர்ணனிடம் மிகவும் நன்றி. கையில் தண்ணீரை தாரை வார்த்து முறைப்படி உன் புண்ணியத்தை எனக்கு தானம் செய்து கொடுங்கள் என்று கூறினார். 

ஆனால் அந்த நேரத்தில் போர்க்களத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மார்பில் வழிந்து கொண்டிருக்கும் இரத்தத்தை ஏந்தி அந்தணரின் கையில் தண்ணீராக வார்த்து, தான் செய்த புண்ணியத்தை அவருக்கு கொடுத்தான். 

அந்தணராக வந்த கிருஷ்ணரும், அவற்றை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியடைந்தார். பிறகு, கர்ணனிடம் நான் கேட்டதை நீங்கள் மறுக்காமல் கொடுத்து விட்டீர்கள். இனி நீங்கள் உங்களுக்கு வேண்டிய வரத்தை கேளுங்கள், மறுக்காமல் நான் கொடுக்கிறேன் என்று கூறினார். கர்ணனும், இன்னும் எத்தனை ஜென்மங்களில் நான் பிறந்தாலும் இல்லையென்று வருந்தி, என்னிடம் வருபவர்களுக்கு நான் இல்லையென்று சொல்லாமல் கொடுத்து உதவும் நல்ல மனதை எனக்கு அளித்தருளுங்கள் என்று வேண்டிக் கொண்டான்.

அப்படியே ஆகட்டும்! நீ எவ்வளவு பிறவி பெற்றாலும் ஒவ்வொரு பிறவியிலும் மாபெரும் செல்வத்தையும், கொடைக் குணத்தையும் பெற்று வாழ்வாயாக! பின்பு கிடைப்பதற்கரிய மோட்ச பதவியும் உனக்கு கிடைக்கும் என்று வரம் அளித்தார். 

இறுதியில் விடைபெற்று கொண்டு செல்வதற்கு முன்பு, அந்த அந்தணர் கர்ணா! ஒரே ஒரு விநாடி உண்மையில் நான் யார் என்பதை உற்றுப் பார்! என்று கூறிக்கொண்டே சங்குசக்ரதாரியாக கிருஷ்ணர் காட்சி கொடுத்தார். கர்ணனின் விழிகள் வியப்பால் மலர்ந்து, மண்டியிட்டு கைகளைக் கூப்பி வணங்கினான். 

தன் முன் நாராயணனாகிய மகாவிஷ்ணு நின்றுகொண்டிருப்பதைக் கண்டதும் கர்ணனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. சிறிது நேரத்தில் கிருஷ்ணர், மீண்டும் தன்னுடைய பழைய அந்தணர் உருவத்தை மேற்கொண்டு வந்த வழியாகத் திரும்பி அர்ஜூனன் இருந்த இடத்திற்குச் சென்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக