வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் மிகவும் தனித்துவமான அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட லம்போர்கினி எஸ்சி20 சூப்பர் காரின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சூப்பர் கார் தயாரிப்பில் உலக பிரபலமான லம்போர்கினி நிறுவனம் அவ்வப்போது ஸ்பெஷலான மாடல்களையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர் ஒருவரின் விருப்பத்தின் பேரில் மிகவும் தனித்துவமான அம்சங்கள் கொண்ட புதிய சூப்பர் கார் மாடலை உருவாக்கி இருக்கிறது.
லம்போர்கினி நிறுவனத்தின் ஸ்குவாட்ரா கோர்ஸே என்ற பெயரில் அழைக்கப்படும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவு இந்த புதிய கார் மாடலை உருவாக்கி இருக்கிறது. ஒரே ஒரு யூனிட் மட்டும்தான் விற்பனை செய்யப்படும்.
மேலும், இந்த காரின் டிசைன் செய்ய துவங்கியது முதல் முழுமையாக உருவாக்கம் பெறும் வரையில் அனைத்து நிலைகளிலும் இந்த காருக்கான வாடிக்கையாளரும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் விருப்பங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
லம்போர்கினி ஸ்குவாட்ரா கோர்ஸே (SC20) என்ற பெயரில் இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது. இது கார் பந்தய களங்களில் இயக்குவதற்கான சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருந்தாலும், சாதாரண சாலைகளிலும் பயன்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர் ஒருவருக்காக ஒரே ஒரு கார் மட்டும்தான் உருவாக்கப்பட்டு இருப்பதால், இது மிகவும் அரிய வகை லம்போர்கினி மாடலாக குறிப்பிடலாம்.
லம்போர்கினி நிறுவனத்தின் பிரபலமான டயாப்லோ விடி ரோட்ஸ்டெர், வெனினோ ரோட்ஸ்டெர், கான்செப்ட் எஸ் மற்றும் அவென்டேடார் ஜே ஆகிய கார்களின் டிசைன் அம்சங்களுடன் கூரை இல்லாத திறந்த அமைப்புடைய கார் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு லம்போர்கினி நிறுவனம் உருவாக்கிய எஸ்சி18 சூப்பர் கார் மாடலை தொடர்ந்து இந்த புதிய எஸ்சி20 கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சென்ட்ரோ ஸ்டைல் டிசைன் மையத்தின் தலைவர் மிட்ஜா பார்கெர்ட் கூறுகையில்,"கடந்த 2018ம் ஆண்டு எஸ்சி18 அல்ஸ்டன் காருக்கு அடுத்து இந்த எஸ்சி20 கார் உருவாக்கப் பணிகள் அதிக சவால்களை கடந்து நிறைவு பெற்றுள்ளது. பழைய லம்போர்கினி கார் மாடல்களின் சிறப்பான டிசைன் அம்சங்களுடன் பந்தய கார்களுக்கு உரிய மிரட்டலான மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.
முழுவதும் கார்பன் ஃபைபர் பேனல்களுடன் இதன் பாடி கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் மிக முக்கிய சிறப்பம்சமாக, முன்புறத்தில் விண்ட்ஷீல்டு கண்ணாடி இல்லாமல், மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவம் கொண்டதாக இருக்கும். இது ஓட்டுனர் மற்றும் உடன் பயணிப்பவருக்கு புதுவிதமான அனுபவத்தை தரும்.
லம்போர்கினி எஸ்சி20 காரில் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 759 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு இன்டிபென்டென்ட் ஷிஃப்ட்டிங் ராடு(ஐஎஸ்ஆர்) கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக