தமிழ்நாட்டில் பாஜக தனது அரசியல் திருவிளையாடலை ஆரம்பித்துவிட்டது. நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் கட்டிலை தாங்கிப் பிடித்திருந்த பாஜக அதன் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்து வருகிறதுஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டணி உறுதி என்றாலும் மௌனம் காத்து வந்த பாஜக மெகா திட்டத்தை நடத்தி முடிக்க முயற்சித்து வருகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியைத் தரும் செய்தியாக வந்திறங்கியுள்ளது.
பாஜக போடும் கணக்கு!
“திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி; தமிழ்நாட்டில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் 60 இடங்களில் வெற்றி பெறும்; இந்த முறை சட்டமன்றத்தில் பாஜகவினர் இரட்டை இலக்கத்தில் இருப்பார்கள்; எச்.ராஜா தமிழக அமைச்சராவார்.” தமிழக பாஜகவினர் கடந்த சில மாதங்களாக உதிர்த்து வரும் வார்த்தைகள் இவை. தமிழகத்தில் அடித்தளம் இல்லாத பாஜக இது போன்று பேசுவது வேடிக்கையானது என்று பலரும் பேசினர். ஆனால் பாஜக இதை நடைமுறைப்படுத்துவதில் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
பிரித்தாளும் கொள்கை!
ஜெயலலிதா மறைந்த பின்னரான நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் மறைமுகமாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது என்ற விமர்சனம் உள்ளது. இது எப்படி சாத்தியமானது? பிரித்தாளும் கொள்கை தான். சசிகலா பதவியேற்க போகும் போது ஓபிஎஸ் தனியாக வந்து போர் கொடி தூக்கினார். ஆனால் அவருக்கு பெரியளவில் ஆதரவு கிடைக்கவில்லை. எடப்பாடி முதல்வராக பதவியேற்ற பின் தினகரனை வெளியேற்றி ஓபிஎஸ் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் டெல்லிக்கு ‘விசுவாசமாக’ இருப்பதால் ஆட்சி நீடிக்கிறது.
திமுக Vs பாஜக
ஆட்சி நிறைவடையப் போகிறது, அடுத்த தேர்தலுக்கு இன்னும் மிகச் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் பாஜக தனது அரசியல் நலனுக்காக மீண்டும் அதிமுகவை துண்டாக்கி காரியம் சாதித்துக் கொள்ளப்பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு அதிமுகவுக்குள்ளேயே கேட்கத் தொடங்கியிருக்கிறது. திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியதை நடைமுறைப்படுத்தும் வேலைகள் நடந்துவருகின்றன. திமுக கூட்டணி ஒரு பக்கம் என்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு பக்கம் என தமிழக தேர்தல் களம் இருக்க வேண்டும் என அக்கட்சி நினைக்கிறது. அதுவே பாஜகவைச் சேர்ந்தவர்கள் முதல் அதிமுக அமைச்சர்கள் வரை அவர்களது பேச்சில் வெளிப்படுகிறது.
பலவீனமான அதிமுக?
தமிழ்நாட்டில் வலுவான வாக்கு வங்கி வைத்துள்ள கட்சி அதிமுக. அந்த கட்சி தலைமையில் தான் கூட்டணி அமைவது என்பதே வழக்கம். ஆனால் பாஜக தலைமை இதை ஏற்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக சீட்டுகளை எதிர்பார்த்த நிலையில் 5 சீட்டுகளை மட்டுமே வழங்கியது அதிமுக. இது அக்கட்சி தலைமையை உரசிப்பார்த்தது. அதிமுக அதிக தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற்றது. இதைச் சொல்லி தான் பாஜக அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி ஆட்சியில் அதிமுக பலவீனமாகிவிட்டது என்பது பாஜகவின் வாதமாக இருக்கிறது என்கிறார்கள்.3
நிர்மலா சீதாராமன் முதல்வர் வேட்பாளரா?
அதனால் தேசிய அளவில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜகவே தமிழகத்திலும் தலைமை வகிக்கும்; முதல்வர் வேட்பாளரை கூட்டணியின் தலைமையே அறிவிக்கும் என்கிறார்கள். அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் அதிமுகவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் தான் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் கொதித்தெழுந்து பேசியுள்ளனர் என்கிறார்கள்.
அமைச்சர்களுக்கு போன எச்சரிக்கை!
எடப்பாடி பழனிசாமி தரப்பு இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் பாஜகவின் வழக்கமான ஆயுதமான ஓபிஎஸ்ஸை கொண்டு கட்சியை உடைக்கும் பணிகள் நடக்கும் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் பெருமளவில் ஆதரவு கொடுத்தனர். காரணம் ஆட்சி நிறைவடைய தோராயமாக ஒரு ஆண்டு இருந்தது. முதவராக உள்ளவரை எதிர்க்க துணியவில்லை. தற்போது தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. மேலும் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் பாஜக கைவசம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். சம்மதிக்கவில்லை என்றால் மத்திய அரசின் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கள் கடமையை செய்வார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை இலை முடக்கம்!
அதிமுகவின் உயிர் நாடியான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் ஜெயலலிதா வந்தாலும் வெற்றி பெற வைக்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜகவின் நிபந்தனைக்கு ஒத்துவராவிட்டால் சின்னத்தை முடக்கி ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியை கட்டுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணி, பாஜக, அமமுக, பாமக, தேமுதிக, சமக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், மு.க.அழகிரி ஆகியோரை இணைத்து பாஜக தலைமையில் ஒரு மெகா அணி உருவாக்கப்படும். அந்த அணிக்கு ரஜினியை வரவழைத்து வாய்ஸ் கொடுக்க வைக்கலாம் என்ற அளவுக்கு பாஜக திட்டம் வகுத்துள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
திசையை தீர்மானித்த தேர்தல் புயல்!
அப்போது திமுகவுக்கு வலுவான எதிர்ப்பை பாஜக தலைமையிலான கூட்டணி கொடுக்கும் என கூறுகிறார்கள். எனவே திமுக Vs பாஜக என்ற பதம் அரசியல் அரங்கில் பயன்படுத்தப்படும். மக்கள் மத்தியிலும் அது தாக்கத்தை பெறும் என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு இதை எப்படி கையாளப் போகிறது என்பதை ஒட்டியே தற்போது தமிழக தேர்தல் களம் சுற்றி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக