Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 ஜனவரி, 2021

கோயம்புத்தூரில் தயாராகும் எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக்!! ரூ.1.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்

 கோயம்புத்தூரில் தயாராகும் எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக்!! ரூ.1.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்

எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரூ.1.99 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கோயம்புத்தூரை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (எஸ்விஎம்) அதன் அதிவேக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகள் வருகிற மார்ச் மாதத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று வேரியண்ட்களில் க்ராண்ட் மற்றும் எலைட் வேரியண்ட்கள் மட்டும்தான் தற்போதைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை ரூ.2.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய மோகன்ராஜ் ராமசாமி என்பவரால் எஸ்விஎம் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் புதிய அதிவேக பிராணா எலக்ட்ரிக் பைக் விற்பனையில் உள்ள க்ரிடன் எலக்ட்ரிக் பைக் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள அல்ட்ராவொய்லட் எஃப்77 பைக்கிற்கு நேரடி போட்டியாக விளங்கவுள்ளது.

பிராணா பைக்கிற்கு எஸ்விஎம் நிறுவனம் ரூ.25,000 வரையில் தள்ளுபடி சலுகைகளையும் தற்சமயம் வழங்கி வருகிறது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர் 10 மரக்கன்றுகளை வெவ்வேறான பகுதிகளில் நட்டு அதனை தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் பிராணா எலக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.5,200 என்ற குறைந்த மாதத்தவணை திட்டத்தையும் எஸ்விஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. இது 3 வருட காலத்தை கொண்டுள்ளது. பிராணா பைக்கில் அதிநுட்பமான ஏர்-கூல்டு பிஎல்டிசி எலக்ட்ரிக் மோட்டாரை 4.32 கிலோவாட்ஸ் மற்றும் 7.2 கிலோவாட்ஸ் லித்தியம்-இரும்பு பேட்டரி தேர்வுடன் எஸ்விஎம் நிறுவனம் வழங்கியுள்ளது.

அதாவது வேரியண்ட்களை பொறுத்து பேட்டரி வழங்கப்படவுள்ளது. க்ராண்ட் வேரியண்ட் சிறிய பேட்டரி தொகுப்புடன் சிங்கிள்-சார்ஜில் 126கிமீ தூரம் வரையிலும், எலைட் வேரியண்ட்டின் பேட்டரி 225கிமீ தூரம் வரையிலும் பைக்கை இயக்கி செல்லும்.

இந்த பைக்கை அதிகப்பட்சமாக மணிக்கு 123கிமீ வேகத்தில் இயக்க முடியும். 0-வில் இருந்து 60kmph வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடக்கூடக்கூடிய இந்த எலக்ட்ரிக் பைக்கில் ப்ராக்டிஸ், ட்ரைவ், ஸ்போர்ட்ஸ் மற்றும் ரிவர்ஸ் என்ற நான்கு விதமான ட்ரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ப்ராக்டிஸ் மோட் பிரத்யேகமாக புதியதாக பைக் ஓட்டுபவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதில் 45kmph வேகத்திற்கு மேல் பைக்கை இயக்க முடியாது. ரிவர்ஸ் மோடில் அதிகப்பட்சமாக 5kmph வேகத்தில் பைக்கை பின்னோக்கி ஓட்ட முடியும்.

இரும்பு இரட்டை தொட்டில் ஃப்ரேமின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பிராணா எலக்ட்ரிக் பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ தாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் மொத்த எடை 165kmph ஆகும்.

எஸ்விஎம், தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் சங்கத்தின் தனிப்பட்ட நிதியால் செயல்பட்டு வருகிறது. தற்சமயம் கோயம்புத்தூரில் மட்டுமே டீலர்ஷிப் ஷோரூமை கொண்டுள்ள இந்த நிறுவனம் விரைவில் சென்னை, மதுரை, திருப்பூர், திருச்சி, பாண்டிச்சேரி, திண்டுக்கல், பெங்களூர், கோழிக்கோடு என தென்னிந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் சந்தையை விரிவுப்படுத்த தயாராகி வருகிறது.

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக