Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 28 ஜனவரி, 2021

பொங்கல் பரிசு ரூ.5,000 வாங்க ரெடியா? இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ!

 


பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக மக்களுக்கு ரூ.5,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று அதிமுக எம்.எல்.ஏ உறுதியளித்துள்ளார்.வரும் மார்ச் முதல் வாரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கக்கூடும். இதையடுத்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் தேர்தல் களத்தை காணவுள்ளனர்.

அதிமுக ஆட்சி மீதான அதிருப்தி

 

மேலும் தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே பிரச்சாரம் தொடங்கப்பட்டது தமிழக அரசியல் இதுதான் முதல்முறை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் வெற்றிக் கனியை பறிக்க அரசியல் கட்சிகள் எவ்வளவு தீவிரம் காட்டுகின்றன என்பது தெரியவருகிறது. 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுக மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது. இது இயல்பான ஒன்று தான்.

எடப்பாடி பழனிசாமி விஸ்வரூபம்

 

இதனைப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலில் எப்படியாவது அமர வேண்டும் என்று திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக வாக்குகளைச் சிதறவிடக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி என்ற ஒற்றை எதிர்ப்பை ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சரியான தலைமையின்றி தவித்து வந்த அதிமுகவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை ஆளுமைமிக்க தலைவராக மாற்றி கொண்டிருக்கிறார்.

இரட்டை தலைமையால் சர்ச்சை

 

கட்சிக்கு இரட்டை அதிகார மையம் சரியாக இருக்காது என்று பலரும் கூறுகின்றனர். இது முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மோதல் போக்கில் தெளிவாக காண முடிகிறது. இருப்பினும் கட்சிக்குள் எந்தவித பிரச்சினையும் இல்லை. இரண்டு தலைமைகளும் போதிய ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என அதிமுகவினர் சமாளித்து வருகின்றனர்.

பொங்கல் பரிசு ஆச்சரியம்

 

இத்தகைய சூழலில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இல்லையெனில் கட்சி பிளவுபட்டு விடும் என்றும், சசிகலாவின் கைக்கு சென்றுவிடும் என்றும் பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. இதற்கிடையில் தமிழக மக்களை கவரும் வகையில் நடப்பாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஆச்சரியப்படும் அறிவிப்பை வெளியிட்டார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

 

வழக்கமாக 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்படும் சூழலில் ஒன்றரை மடங்கு உயர்த்தி அறிவித்தது தேர்தலை மனதில் வைத்து செயல்படுத்தப்பட்ட வியூகம் என்று கூறப்பட்டது. இதனை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள், நீதிமன்றம் வரை சென்று தோற்றுபோயின. அதன்பிறகு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி, உரிய முன்னேற்பாடுகளுடன் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

வாக்குகளாக மாறுமா?

 

இதனை வாங்கத் தவறியவர்களுக்கு மாற்று தேதிகளும் ஒதுக்கப்பட்டன. இது கொரோனாவால் நெருக்கடியில் இருந்து வரும் தமிழக மக்களுக்கு சிறிய ஆறுதலாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் வாக்குகளாக அறுவடை செய்யப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் செய்யாறு அதிமுக எம்.எல்.ஏ மோகன் அதிரடியான விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

 

பொங்கல் பரிசாக ரூ.5,000

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ மோகன், வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெற்றி பெறுவார். அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 5,000 ரூபாய் வழங்கி தமிழக மக்களை ஆச்சரியப்படுத்துவார் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. 

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக