Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

பாலுகந்த நாதர் திருக்கோயில் - திருவாய்ப்பாடி

 பாலுகந்தநாதர் திருக்கோயில் - திருவாய்ப்பாடிக்கான பட முடிவுகள்


இறைவர் திருப்பெயர் : பாலுகந்த ஈஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி
தல மரம் : ஆத்தி
தீர்த்தம் : மண்ணியாறு
வழிபட்டோர் : சண்டேச நாயனார் (சண்டீகேஸ்வரர்)
தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர்

தல வரலாறு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 40 வது தேவாரத்தலம் ஆகும்.

சண்டேசுவர நாயனார்: அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும், திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது.

 

ஆப்பாடிக்கு அருகிலுள்ள சேய்ஞலூரில் எச்சதத்தன், பவித்திரை என்ற அந்தண தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விசாரசர்மர். சிறு வயதிலேயே வேதாகமங்களையும், கலை ஞானங்களையும் ஓதி உணர்ந்தவரானார். ஒரு நாள் வேதம் ஓதும் சிறுவர்களுடன் பசுக்கள் மேய்க்கச் சென்ற இடத்தில் விசாரசர்மர் விளையாடிக்கெண்டு இருந்தார்.அப்போது ஒருபசு தன்னை மேய்க்கும் இடையனைக் கொம்பினால் முட்டப் போயிற்று. இடையன் தன் கையிலுள்ள அப்பசுவை அடித்தான். விசாரசர்மரை அவனைக் கண்டித்து, அவ்வூர் வேதியர்களின் இசைவுடன் ஆநிரைகளை மேய்த்தலை மேற்கொண்டார். விசாரசர்மரால் அன்பாக மேய்க்கப்பட்ட ஆநிரைகள் அதிகமான பாலைச் சொரிந்தன. அவ்வூர் வேதியர்களும் மிகவும் மகிழ்ச்சியுற்றனர்.

பசுக்களின் பால் வளமுடன் பெருகி வருவதைக் கண்ட விசாரசர்மர், அதிகப்படியான பாலைக் கொண்டு சிவனுக்கு திருமஞ்சனம் செய்யும் ஆசை கொண்டார். மண்ணியாற்றின் கரையில்ஓர் மணல் மேட்டில் ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை அவ்வாற்று மணலால் அமைத்தார். பசுவின் பாலால் அபிஷேகம் செய்தார். ஒருவன் அவ்வூருக்குள் சென்று, பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசர்மர் பாலை வீணாக்கி தரையில் கொட்டுகிறான் என்று பழி கூறினான். விசாசரசர்மரின் தந்தையிடம் பசுவின் சொந்தக்காரர்கள் இதனை முறையிட்டனர். எச்சதத்தரும் இதனை விசாரித்து மகனை தண்டிப்பதாகக் கூறினார். மறுநாள் விசாரசர்மர் பசுக்களை மேய்க்கச் செல்லும் போது எச்சதத்தரும் அவனறியாமல் பின் தொடர்ந்தார். ஊர் மக்கள் கூறியபடியே மணல் லிங்கத்திற்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்வதைப் பார்த்தார். விசாரசர்மரை தன் கையிலிருந்த கோலால் அடித்தார். விசாரசர்மரின் மனதும், சிந்தனையும் சிவபூஜையிலேயே லயித்திருந்ததால் அப்பா கோலால் அடித்த அடி உரைக்கவில்லை. சிவபூஜையை தொடர்ந்து செய்வாரானார். அதைக் கணட எச்சதத்தர் கடுஞ்சினம் கொண்டு பாற்குடங்களை தன் காலால் எட்டி உதைத்தார். பூஜைக்கு இடையூறு செய்பவர் தன் தந்தை என்று தெரிந்தும் அது சிவ அபராதமாகையால் தன்முன் இருந்த கோலை எடுத்து தன் தந்தையின் கால்களை நோக்கி வீசினார். கோல் மழுவாக மாறி அவரது தந்தையின் கால்களை வெட்டியது.

எச்சதத்தர் உயிர் நீத்தார். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் விசாரசர்மர் தன் பூஜையைத் தொடர்ந்தார். விசாரசர்மரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் காட்சி கொடுத்து நாமே உனக்கு இனி தந்தையானோம் என்று கூறி அருள் புரிந்து விசாரசர்மரை தன் மார்போடு அணைத்துக் கொண்டார். விசாரசர்மரை தன் தொண்டர்களுக்கெல்லாம் தலைவனாக்கினார். தான் உண்ட அமுதும், பரிவட்டம் மற்றும் மாலைகள் யாவும் உனக்கே ஆகுக என்று உரிமையாக்கி சண்டீசர் என்ற பதவியும் தந்து தன் சடைமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்து விசாரசர்மருக்கு சூட்டினார். விசாரசர்மர் சண்டேச நாயனார் ஆனார். சண்டீசப் பதமும் பெற்றார்.

இறைவன் விசாரசருமன் அபிஷேகம் செய்த பாலை விரும்பி ஏற்றதால் "பாலுகந்தநாதர்' ஆனார். விசாரசருமன் "ஆ'(பசு) மேய்த்த தலமாதலால், "ஆப்பாடி' ஆனது.

இத்தலத்தைக் குறித்த மற்றொரு வரலாறும் உண்டு. ஆப்பாடியில் இருந்த இடையர்குலத் தோன்றல் ஒருவன் பாலைக் கறந்து குடத்தைத் தன் வீட்டிற்கு எடுத்துச்செல்லும்போது வழியில் நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் தடுக்கிப் பாற்குடம் கவிழ்ந்து கொண்டு வருதலை அறிந்து அவ்விடத்தைச் சினங்கொண்டு கையிலிருந்த அரிவாளால் வெட்டினான். அவ்விடத்திலிருந்து இரத்தம் பெருகியது. குருதிபடிந்த திருமேனியுடன் சிவலிங்கத் திருவுருவில் இறைவன் வெளிப்பட்டு அருளினார். இவ்வதிசயத்தைக் கண்ட இடையன் தன் அறியாமையால் ஏற்பட்ட செயலை எண்ணி மனம் வருந்தினான். அவனது வருத்தந்தணித்து இறைவன் இன்னருள் புரிந்தார் என்பது வரலாறு.


கோவில் அமைப்பு:

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலன் மேற்புறத்தில் ரிஷப வாகனத்தில் அம்மையும், அப்பனும் உள்ளனர். அவர்களுக்கு இருபுறமும் விநாயகரும், முருகரும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வாயில் வழி உள்ளே நுழைந்து முதல் பிரகாரத்தை அடையலாம். இங்கு நந்தவனமும், வடகிழக்கு மூலையில் பஞ்சமூர்த்தி மண்டபமும் உள்ளது. பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் கடந்து முன் மண்டபத்தை அடையலாம். இம்மண்டபம் வெவ்வால் நெற்றி அமைப்புடையது. மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.

உட்பிரகாரம் நுழைந்து வலம் வரும்போது தென்மேற்கு மூலையில் தலமரமான ஆத்திமரம் உள்ளது. ஆத்திமரத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இந்த ஆத்திமர நிழலில் தான் அன்று சண்டேசர் இத்தல இறைவனை ஸ்தாபித்து வழிபட்டார் என்ற நினைப்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கருவறை மேற்குப் பிரகாரத்தில் நால்வர், முருகர், மகாலட்சுமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபைரவர் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.

எல்ல சிவாலயங்களிலும் இருப்பதைப் போல வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இதைத் தவிர கர்ப்பகிரகத்தின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேசுவரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் இறைவனை இருத்தி வழிபடும் முறையில் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் மட்டும் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருப்பது சிறப்பம்சம்.

சண்டிகேஸ்வரருக்கு ரிஷபாரூடராக, உமையவளுடன் தரிசனம் தந்து சிவபெருமான் ஆட்கொண்டது மகாசிவராத்திரி அமாவாசை நன்னாளில் என்பார்கள். எனவே மாசி மாதத்தில் வருகிற மகாசிவராத்திரி நன்னாள் மற்றும் அமாவாசையில் இங்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. மகா சிவராத்திரி நாளில் கும்பகோணம், ஆடுதுறை, பாபநாசம், அணைக்கரை, அரியலூர், ஜெயங் கொண்டம் எனச் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீபாலுகந்தீஸ்வரரைத் தரிசிக்க இங்கு வருகின்றனர்.

மகா சிவராத்திரி நாளில் இங்கே உள்ள தீர்த்தத்தில் நீராடி அல்லது தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்டு, ஸ்ரீபெரியநாயகிக்கு அரளிமாலையும் ஸ்ரீபாலுகந்தீஸ்வரருக்கு வில்வமாலையும் சார்த்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் பிறவிப் பயனை அடையலாம்; சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து நிம்மதியுடன் வாழலாம்; முன் ஜன்மப் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிறப்புக்கள் :

சண்டேசுவர நாயனார் முக்தி பெற்ற தலம் .

பதவி உயர்வு, பணி இடமாற்றம் விரும்புவோர் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருப்பது சிறப்பம்சம்.

 

போன்: 

94421 67104

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு கும்பகோணம் - அணைக்கரை மர்க்கத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருப்பனந்தாள் அருகில் தென்மேற்கே சுமார் 2 கி.மி. தொலைவில் மண்ணியாற்றின் தென்கரையில் திருஆப்பாடி சிவஸ்தலம் இருக்கிறது.

சண்டேசுவர நாயனார் அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும், திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது.

இறைவன் காட்சி கொடுத்து தன் தொண்டர்களுக்கெல்லாம் தலைவனாக்கினார். தான் உண்ட அமுதும், பரிவட்டம் மற்றும் மாலைகள் யாவும் உனக்கே ஆகுக என்று உரிமையாக்கி சண்டீசர் என்ற பதவியும் தந்து தன் சடைமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்து விசாரசர்மருக்கு சூட்டினார். விசாரசர்மர் சண்டேச நாயனார் ஆனார். சண்டீசப் பதமும் பெற்றார்.

இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருப்பது சிறப்பம்சம்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக