உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம் மற்றும் தக்காளி தான் உள்ளதா? இந்த இரண்டை வைத்தே ஒரு எளிமையான மற்றும் சுவையான ஒரு சாம்பார் ரெசிபியை செய்யலாம். இது மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இந்த சாம்பார் பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் மிகவும் சிம்பிளாக இருக்கும். உங்களுக்கு தக்காளி வெங்காய சாம்பார் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே தக்காளி வெங்காய சாம்பார் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப்
* சின்ன வெங்காயம் - 1 கப் (தோலுரித்தது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* புளி நீர் - 1 கப்
* சாம்பார் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
அலங்கரிக்க...
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கரண்டியால் பருப்பை மசித்து விட வேண்டும்.
* பின் அதே குக்கரில் வெங்காயம், தக்காளி மற்றும் புளி நீர், சாம்பார் பவுடர், உப்பு மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்கவும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கொள்ளவும். பின்பு ஒரு சிறு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சாம்பாரில் ஊற்றி, சாம்பார் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லியைத் தூவினால், வெங்காய தக்காளி சாம்பார் தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக