உலக நாடுகளைப் போலவே இந்தியாவும் ஹைட்ரஜன் வாயுவை முக்கிய வர்த்தகப் பொருளாக மாற்ற வேண்டும் என்ற இலக்கில், பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் நேஷனல் ஹைட்ரஜன் மிஷன் திட்டத்தை அறிவித்தார்.
ஹைட்ரஜன் வாயுவுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகரித்துள்ள நிலையில், இவ்வர்த்தகத்தில் இந்தியாவும் பங்கு பெற வேண்டும் என்பதை இத்திட்ட அறிவிப்பின் மூலம் மத்திய அரசு உணர்த்தியுள்ளது.
அபுதாபி திட்டம்
சமீபத்தில் அபுதாபி நாட்டின் அரசு நிறுவனமான அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனம் முபாதலா முதலீட்டு நிறுவனம் மற்றும் ADQ நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து இயற்கை எரிவாயு மற்றும் புதுப்பிக்கப்பட்ட எனர்ஜி பிரிவில் இருந்து ஹைட்ரஜன் வாயுவைத் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.
ஹைட்ரஜன் ஏற்றுமதி
இத்திட்டத்தின் படி அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனம் உற்பத்தி செய்யும் ப்ளூ மற்றும் க்ரீன் ஹைட்ரஜன் வாயுவை முதற்கட்டமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கும், பின்பு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகள் தற்போது ஹைட்ரஜன் வாயு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் இறங்க முடிவு செய்துள்ளது.
நேஷனல் ஹைட்ரஜன் மிஷன்
இந்நிலையில் மத்திய அரசு 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிவித்துள்ள நேஷனல் ஹைட்ரஜன் மிஷன் திட்டத்திற்காக இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்களான ரிலையன்ஸ், டாடா, மஹிந்திரா, இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள் இணையும் எனக் கேட்வே ஹவுஸ் என்னும் திங்க் டேக் அமைப்பு வெளியிட்டுள்ள மீதேன் எகானமி அறிக்கையில் சைதன்யா கிரி தெரிவித்துள்ளார்.
டாடா, மஹிந்திரா, அம்பானி
இந்தியாவின் இப்புதிய திட்டத்திற்கு ஹைட்ரஜன் கவுன்சில் அல்லது ஐரோப்பிய ஹைட்ரஜன் கோலேஷன் ஆகிய அமைப்பை போல இந்தியாவிற்கு ஒரு அமைப்புக் கட்டாயம் தேவை என்றும், நாட்டின் முன்னணி நிறுவனங்களான இந்தியன் ஆயில், டாடா, மஹிந்திரா, எய்ச்சர் ஆகிய நிறுவனங்களுடன் சிறப்புக் கெமிக்கல் தயாரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஆகிய நிறுவனத்தின் கூட்டணி இந்தக் கவுன்சில்-ஐ வலிமையானதாக ஆக்கும் எனக் கிரி தெரிவித்துள்ளார்.
கூட்டணி அவசியம்
இந்தத் திட்டம் கூட்டணி இல்லாமல் இயங்க முடியாது, குறிப்பாக ஆட்டோமொபைல், எரிபொருள் நிறுவனங்கள், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் மற்றும் அட்வான்ஸ் மெட்டிரியல் நிறுவனங்கள் ஒன்றிணைந்தால் தான் இந்தியாவில் நேஷனல் ஹைட்ரஜன் மிஷன் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும்.
புதிய எரிபொருள்
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட நாடுகளுக்குப் புதிய எரிபொருள் கட்டாயம் சேவை, இந்நிலையில் ஹைட்ரஜன் வாயுவை மட்டும் உருவாக்கினால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்த கார்கள், எரிபொருள் நிரப்ப பங்குகள், தொழில்நுட்பம் எனப் பல காரணிகள் முக்கியமானதாக விளங்குகிறது. இதைக் கூட்டணி அமைப்பால் மட்டுமே செய்ய முடியும்.
ஜெர்மனியில் வெற்றி
ஜெர்மனியில் ஹைட்ரஜன் வாயுவை இயல்பான எரிவாயுவாக மாற்றும் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் 2023ஆம் ஆண்டுக்குள் 400 ஹைட்ரஜன் பங்குகளை நிறுவி முக்கிய எரிபொருளாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இதேபோன்ற திட்டத்தைத் தான் இந்தியாவும் செய்ய உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக