ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகள் திடீரென மாயமானதால், பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கான காரணம் மற்றும் அரசு அறிவித்துள்ள தகவல்களை பார்க்கலாம்
பிரதானமாக இருக்கும் சமூகவலைதளம்
உலகம் முழுவதும் அனைத்து துறையினரும், தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்க சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு செய்தி ஊடகங்களும் விதிவிலக்கு இல்லை.
சமூக வலைதளங்களை சார்ந்து இருக்கும் செய்தி ஊடகங்கள்
தங்களது பார்வையாளர்கள், வாசிப்பாளர்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கவும், அவர்களின் எண்ணிக்கையை பெருக்கவும் செய்தி ஊடகங்கள் சமூக வலைதளங்களை சார்ந்து இருக்கின்றன.
பேஸ்புக் நிறுவனம் தடை செய்த செய்திகள்
இந்தநிலையில், பேஸ்புக், கூகுள் போன்றவற்றில் வரும் செய்திகளுக்காக, செய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் செய்தி ஊடக பேர மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எந்தவித முன் அறிவிப்புமின்றி ஆஸ்திரேலியாவில் செய்திகளை பேஸ்புக் நிறுவனம் தடை செய்து விட்டது.
அது மட்டுமின்றி, ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரம், வானிலை மற்றும் அவசர கால பக்கங்களில் வெளியாகும் செய்திகளுக்கும் பேஸ்புக் தடை விதித்துள்ளது. முன் அறிவிப்பின்றி பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட இந்நடவடிக்கை ஆஸ்திரேலிய மக்களையும், அரசையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா
ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா, எங்கள் தளத்திற்கும் செய்தி நிறுவனங்களுக்கும் இடையிலான உறவின் அடிப்படைகளை அங்கீகரிக்கத் தவறிவிட்டது. இதனால், தற்போது மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளோம் என்று பேஸ்புக்கின் உலக செய்தி பார்ட்னர்ஷிப் துணைத் தலைவர் காம்ப்பெல் கூறினார்.
இதைத்தொடர்ந்து, பேஸ்புக்கின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம் தெரிவித்தார். செய்தி ஊடக பேர மசோதாவை நிறைவேற்றுவதில் ஆஸ்திரேலிய அரசு உறுதியாக உள்ளது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக