டெல்லியில் உள்ள இந்தியன் தொழிற்நுட்ப நிறுவனத்தின் (IIT) கீழ் இயங்கும் ஜெலியோஸ் மொபைலிட்டி நிறுவனம் 'ஹோப்' என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
‘ஹோப்', டெலிவிரி பணிகளுக்கும் அன்றாட பயன்பாட்டிற்கும் மிகவும் ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக மணிக்கு 25கிமீ வேகத்தில் மட்டுமே செல்லக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு எந்தவொரு ஒட்டுனர் உரிமமும் தேவை இல்லை.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள லித்தியம்-இரும்பு பேட்டரியை வீட்டின் மின்சாரத்தின் மூலமாகவே சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதன் பேட்டரியை முழுவதும் சார்ஜ் நிரப்ப 4 மணிநேரங்கள் தேவைப்படுமாம். ஹோப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 50கிமீ மற்றும் 75கிமீ என இரு விதமான பேட்டரி ரேஞ்ச் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம், தரவுகளை கண்காணிக்கும் சிஸ்டம் மற்றும் பெடல்-உதவி யூனிட் போன்ற மாடர்ன் தொழிற்நுட்பங்கள் பலவற்றை வழங்கியுள்ளதாக டெல்லி ஐஐடி தெரிவித்துள்ளது.
அதேநேரம் பெடல் அல்லது த்ரோட்டல் என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றினையும் வாடிக்கையாளர் தனது சவுகரியத்திற்கு ஏற்ப பெறலாம். இவற்றுடன் சிறப்பம்சமாக கடினமான சூழலிலும் பார்க்கிங் செய்ய உதவும் வகையில் சிறப்பு ரிவர்ஸ் மோட்-ஐயும் ஹோப் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.
மேலும் ஸ்கூட்டரை பற்றி தரவு பகுப்பாய்வின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் IoT (இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்)-ஐயும் பெற்றுள்ளதால் ஹோப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்காலத்தின் ஸ்மார்ட் & இணைப்பு ஸ்கூட்டர்களின் பிரிவில் இடம் வகிக்கவுள்ளது.
அல்ட்ரா-மாடர்ன் பயன்பாட்டிற்காக ஹோப் ஸ்கூட்டர் வலிமையான மற்றும் எடைகுறைவான ஃப்ரேமில் தயாரிக்கப்பட்டுள்ளது. மெல்லியதான அகலத்தினால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படிப்பட்ட போக்குவரத்து நெரிசலிலும் இயக்கி செல்லலாம்.
மேலும் வாடிக்கையாளர்கள் பின் இருக்கை பகுதியில் வெவ்வேறு விதமான பொருட்களை வைக்கும் ஆக்ஸஸரீகளையும் பெறலாம். அதாவது பின் இருக்கை உபயோகத்தில் இல்லை என்றால், அந்த பகுதியில் ஆக்ஸஸரீகள் உதவியுடன் பொருட்களை வைத்து ஹோப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கமர்ஷியல் ஸ்கூட்டராகவும் மாற்றி கொள்ளலாம்.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் குறித்து ஜெலியோஸ் மொபைலிட்டி நிறுவனத்தின் சிஇஒ ஆதித்யா திவாரி கூறுகையில், "ஒவ்வொரு நாளும் அதிகரித்தும் வரும் மாசு மற்றும் காலநிலை மாற்றத்தினை நாம் கடந்து வருகிறோம். இதற்கு தீர்வுகளாக அனைத்து துறைகளிலும், குறிப்பாக வாகன துறையில் முயற்சிகள் தேவை.
நாங்கள் ஜெலியோஸ் மொபைலிட்டியை மூன்று வருடங்களுக்கு முன்னர் துவங்கினோம். ‘ஹோப்', வாகன சுற்றுச்சூழல் அமைப்பை சீர்ப்படுத்தும் எங்களது முதல் படியாகும். ஹோப்பின் ஆரம்ப விலை ரூ.46,999 ஆகும். இதன் மூலம் மிகவும் மலிவான இணைய இணைப்பை பெற்ற ஸ்கூட்டராக இது அமைகிறது" என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக