
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஓடிடி பயன்பாடு என்பது சீரிஸ் உள்ளிட்டவற்றில் பிரபலமாக இருந்தது. Money Heist, Locked Up போன்ற தொடர்கள் பலரால் பேசப்பட்டு நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற தளங்களில் சிலர் மட்டுமே கட்டண வாடிக்கையாளர்களாக இருந்தனர். கொரோனா பரவல் தொடங்கியபோது தியேட்டர்கள் மூடப்பட்டது இதையடுத்து திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியானது.
உலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தங்களது கிளைகளை நிலைநிறுத்த பல்வேறு நாட்டு நிறுவனங்களும் முணைப்பு காட்டி வருகிறது. இதில் ஓடிடி தளங்களுக்கு மட்டும் விதிவிலக்கு இல்லை. கொரோனா பூட்டுதலின்போது மக்களின் பொழுதுபோக்கை பூர்த்தி செய்ய ஓடிடி தளங்கள் போட்டிப்போட்டு நடவடிக்கை எடுத்தது.
சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன், திரையில் வெளியாகி சிறிது நாட்களில் மாஸ்டர் என பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதுமட்டுமின்று ஏணைய ஆந்தாலஜி திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானது. இதனால் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற தளங்களின் கட்டண வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
குறிப்பாக குறுகிய காலத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் கட்டண வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. காரணம், ஐபிஎல் 2021 நேரலையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தொகுத்து வழங்குகிறது. அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் தமிழகத்தில் பிரபலமாக இருக்கிறது இது தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு முன்பாகவே அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகள் அன்று காலையே இந்த தளங்களில் வெளியிடப்பட்டு விடுகிறது.
சமீபத்திய இந்தியா பிராண்ட் ஈக்விட்டி அறக்கட்டளை கூற்றுப்படி, இந்தியாவில் ஓடிடி தளத்தின் கட்டண வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 30% உயர்ந்துள்ளதாக தெரிவித்தது. குறிப்பாக மார்ச்- ஜூலை 2021 காலக்கட்டத்தில் 22.2 மில்லியன் பயனர்களில் இருந்து 29 மில்லியன் பயனர்களாக அதிகரித்தது.
ஓடிடி தளங்கள் 2020 ஆம் ஆண்டின் கடைசி ஒன்பது மாதங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முந்தைய Omdia தகவலின்படி 2019 ஆம் ஆண்டில் 5.36 மில்லியனாக இருந்த டிஸ்னி ப்ளஸ் சந்தாதாரர்கள் 18.6 மில்லியனாக அதிகரித்தனர் என தெரிவித்தது. மேலும் தற்போது 28 மில்லியனாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர், ஒரே ஆண்டில் 21.2 மில்லியன் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனர்.
மேலும் தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் 2019 ஆம் ஆண்டில் 4.34 மில்லியனாக இருந்த பயனர்கள் 5.83 மில்லியனாக அதிகரித்துள்ளனர். நெட்பிளிக்ஸ் 2020 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் சந்தாதாரர்களை அதிகரித்து 3.08 மில்லியன் சந்தாதாரர்களை அடைந்தது.
கொரோனா பரவலின்போது தியேட்டர்கள் முந்தைய நிலை போல் செயல்படாது என்று அறிந்த தயாரிப்பாளர்கள் தங்களது படைப்புகளை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட முன்வந்தனர். பூட்டுதல் காலங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி பொழுதுபோக்கு அம்சத்தை நாடத்தொடங்கினர், புதிய வெளியீடுகள் இல்லாத காரணத்தால் மக்கள் ஓடிடி தளங்களை ஆராயத் தொடங்கினர்.
கட்டண பயனர்கள் எண்ணிக்கை 30% உயர்ந்துள்ளதாக இந்திய பிராண்ட் ஈக்விட்டி அறக்கட்டளை தெரிவித்தது. பூட்டுதல் காலத்தின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட வூட் ப்ரீமியம் சேவை மதிப்பீடுகளை விட முன்னேறியுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வூட் செலக்ட் 5.6 லட்சம் கட்டண சந்தாதாரர்களை கொண்டுள்ளது என ஓம்டியா மதிப்பிட்டுள்ளது. அதேபோல் ஜீ5 கட்டண சந்தாதாரர்கள் 2020 ஆம் ஆண்டில் 45% அதிகரித்துள்ளதாகவும் ஒட்டுமொத்த சந்தாதாரர்கள் 80% அதிகரித்துள்ளதாகவும் அந்த நிறுவன செய்தித் தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஓடிடி தளங்கள் தங்களை வளர்க்கவும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் ரீசார்ஜ் திட்டங்களுடன் ஓடிடி அணுகலை வழங்கி வருகின்றனர். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், அதிகரிக்கவும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக ஓடிடி அணுகல் வழங்கப்படுகிறது. வருகிற காலக்கட்டத்தில் சலுகைகளின் ஒரு பகுதி ஓடிடி அணுகல் என்பதைவிட பிரதான பகுதியாக இது மாறி வருகிறது.
காரணம் அமேசான் பிரைம் வீடியோ, சந்தாதாரர்களை சேர்க்கும் முயற்சியில் ஏர்டெல் உடன் கூட்டு சேர்ந்து அணுகலை வழங்குகிறது. சமீபத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் விஐ நிறுவனமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் கூட்டு சேர்ந்து அதன் அணுகலை வழங்கும் திட்டங்களை அறிவித்தது. ஜியோ பல்வேறு ஓடிடி அணுகலை திட்டங்களின் விலைக்கேற்ப தொகுத்து வழங்குகிறது.
ஓடிடி அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தீவிர வளர்ச்சி அடையும் என கருதப்படுகிறது. அதேபோல் கேபிள் மற்றும் சேட்டிலைட் பே சேவைக்கு இணையாகவோ அல்லது அதை முந்திக் கொள்ளும் அளவிற்கு அடுத்த சில ஆண்டுகளில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடிக் கணக்கில் முதலீடு செய்யும் ஓடிடி தளங்களின் முக்கிய வருமான ஆதாரமாக இருப்பது சந்தா கட்டணம்தான். மேலும் சில ஓடிடி தளங்கள் விளம்பரங்கள் மற்றும் பதிவிறக்கங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறது.
சமீபத்தில் ஓடிடி தளங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அந்த சந்திப்பில் சுயசார்புடன் தங்களது உள்ளடக்கம் குறித்து தாங்களே முடிவு செய்யலாம் எனவும் உள்ளடக்கம் சார்ந்த வயது வாரியாக ஐந்து பிரிவுகளாக ஓடிடி தள வெளியீடுகள் இருக்கலாம் எனவும் மத்திய அமைச்சர் கூறினார். மேலும் விதிமுறைகள் அவர்கள் தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சகத்துடன் எந்த பதிவும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக