Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 30 மார்ச், 2021

முகம் மற்றும் முடியில் உள்ள ஹோலி கலரைப் போக்கும் சில எளிய வழிகள்!

 Simple Tips To Take Off Holi Colours Safely

ஒவ்வொரு ஆண்டும் ஹோலிப் பண்டிகை அன்று ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகள், வண்ண நீரை தெளித்து விளையாடுவது வழக்கம். அதே சமயம் ஹோலி பண்டிகை நமது சருமத்திற்கும், கூந்தலுக்கும் பெரும் சேதம் ஏற்படுத்தும் காலமாகவும் கூறலாம். வண்ணமயமான பொடிகளைத் தூவி விளையாடுவது சந்தோஷமாக இருந்தாலும், அதனால் பலருக்கு அலர்ஜிகள் ஏற்படக்கூடும். ஏனெனில் இந்த பொடிகளில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் இருக்கின்றன.

நீங்கள் வண்ணப் பொடிகளைத் தூவி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினீர்களா? உங்கள் சருமத்தில் உள்ள ஹோலி கலரைப் போக்க வெறும் சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் மட்டும் போதாது. ஹோலி வண்ண பொடிகளால் சருமத்தில் எவ்வித அழற்சியும், தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளும் வராமல் இருக்க வேறு சில இயற்கை வழிகளையும் பின்பற்ற வேண்டும். கீழே சருமம் மற்றும் முடியில் உள்ள ஹோலி கலர் பொடியைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தலைமுடியில் இருந்து ஹோலி கலரைப் போக்கும் வழிகள்:

விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில்

வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி விளையாடும் முன், தலைமுடியில் விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இந்த எண்ணெய் முடிக்கு ஒரு பாதுகாப்பு லேயராக இருக்கும். ஒருவேளை உங்களிடம் விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் இல்லாவிட்டால், அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம்.

முட்டை மஞ்சள் கரு அல்லது தயிர்

ஹோலி விளையாடி முடித்த உடனேயே தலைக்கு ஷாம்பு போடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக முட்டையின் மஞ்சள் கரு அல்லது தயிரை தலைமுடியில் தடவி குறைந்தது 45 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட வேண்டும். இதனால் தலைமுடியில் உள்ள ஹோலி கலர் நீங்குவதோடு, பாதிப்பும் குறையும்.

கடுகு எண்ணெய்

வண்ண பொடிகளால் ஹோலி விளையாடும் முன் தலையில் கடுகு எண்ணெயைத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். ஹோலி விளையாடிய பின், தலைக்கு ஷாம்பு போட்டு அலச வேண்டும். அதன் பின் தலையை நன்கு உலர்த்தி விட்டு, மீண்டும் கடுகு எண்ணெயை தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் தலையில் உள்ள எஞ்சிய ஹோலி வண்ணங்கள் நீங்குவதோடு, பாதிப்பும் தடுக்கப்படும்.

தேங்காய் பால்

தேங்காய் பால் தலைமுடிக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க உதவும் அற்புதமான பொருள். தேங்காய் பால் முடியில் உள்ள ஹோலி கலரை நீக்க உதவுகிறது. அதற்கு தேங்காய் பாலை தலையில் தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

வெந்தயம் மற்றும் தயிர் மாஸ்க்

வெந்தய பொடியை தயிருடன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் தடவி நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு தலைமுடியை நன்கு அலச வேண்டும். இதனால் ஹோலி பொடியால் முடி பாதிப்படைவது தடுக்கப்பட்டு, தலைமுடியும் நன்கு ஊட்டத்துடன் இருக்கும்.

சருமத்தில் இருந்து ஹோலி கலரை நீக்கும் வழிகள்:

மாய்ஸ்சுரைசர் தடவவும்

கலர் பொடிகளைத் தூவி ஹோலி விளையாடுவதற்கு முன் மறக்காமல் கை, முகம் மற்றும் பிற பகுதிகளில் மாய்ஸ்சுரைசரை நன்கு தடவிக் கொள்ள வேண்டும். இதனால் கலர் பொடியால் சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம்.

அடர் நிற நெயில் பாலிஷ்

விரல் நகங்களுக்கு அடர் நிற நெயில் பாலிஷ் அடித்துக் கொள்ள வேண்டும். இதனால் வண்ணப் பொடிகளால் விரல் நகங்களில் படியும் கறைகள் தடுக்கப்படும். வேண்டுமானால் ஹோலி விளையாடிய பின் அந்த நெயில் பாலிஷை நீக்கிக் கொள்ளலாம்.

ஃபவுண்டேஷன் பயன்படுத்தவும்

ஹோலி விளையாடுவதற்கு முன் ஃபவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும். இதனால் ஃபவுண்டேஷனானது ஹோலி வண்ண பொடியால் சருமத்தில் ஏற்படும் வறட்சி தடுக்கப்பட்டு, சருமத்திற்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

வேஸ்லின்

ஹோலி விளையாடும் முன் வேஸ்லின் தடவிக் கொள்ளுங்கள். இது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கும். குறிப்பாக உதடுகளில் வேஸ்லின் தடவுவதால், உதடுகள் வறட்சியடைவது தடுக்கப்படுவதோடு, உதடுகளில் வெடிப்புகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்

கோதுமை மாவு

கோதுமை மாவில் சிறிது எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்க்க வேண்டும். அதன் பின் முகத்தை மற்றும் சருமத்தை நீரால் தேய்த்துக் கழுவ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக