Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 5 மார்ச், 2021

ஆச்சரியப்படுத்தும் டெல்லி... பசுமை மண்டலங்களாக மாறும் காலி இடங்கள்... என்ன செய்ய போறாங்க தெரியுமா?

ஆச்சரியப்படுத்தும் டெல்லி... பசுமை மண்டலங்களாக மாறும் காலி இடங்கள்... என்ன செய்ய போறாங்க தெரியுமா?

டெல்லியில் காலி இடங்களை பசுமை மண்டலங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுற்றுச்சூழலுக்கு நட்பான வாகனங்கள் மற்றும் சுத்தமான எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, தேர்வு செய்யப்பட்ட கைவிடப்பட்ட அல்லது காலி இடங்களில் பசுமை மண்டலங்களை அமைப்பதற்கு, தெற்கு டெல்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஐஜிஎல் நிறுவனத்தின் உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு சிஎன்ஜி எரிபொருளை வினியோகம் செய்யும் இயந்திரங்கள், பேட்டரி மாற்றும் இயந்திரங்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும். இந்த திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை தெற்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''வழக்கமான சிஎன்ஜி நிரப்பும் இயந்திரங்களை போல் அல்லாமல், ஒருங்கிணைந்த சிஎன்ஜி வினியோகம் செய்யும் இயந்திரங்கள் அளவில் சிறியதாக இருக்கும். ஆனால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு ஒரே நேரம்தான் ஆகும். அத்துடன் இந்த பசுமை மண்டலங்களில் பேட்டரி மாற்றும் இயந்திரங்கள், சார்ஜிங் பாயிண்ட்களும் இருக்கும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வாகனங்கள் மற்றும் எரிபொருட்களின் பயன்பாட்டை இந்த திட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னை குறையும். இந்த பசுமை மண்டலங்களில் விளம்பரங்களை வைத்து கொள்வதை அனுமதிப்பது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். இதன் மூலம் வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்றனர்.

சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வுகளை நடத்துவதற்காக சமீபத்தில் 93 இடங்களை ஐஜிஎல் நிறுவனத்திற்கு தெற்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், 40 இடங்களில் பசுமை மண்டலங்களை அமைப்பதற்கு ஐஜிஎல் நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தெற்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''ஒரு பசுமை மண்டலத்தில் 2 சிஎன்ஜி நிலையங்களும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான 2 சார்ஜிங் ஸ்டேஷன்களும், ஒரு பேட்டரி மாற்றும் இயந்திரமும் இருக்கும்'' என்றனர். தெற்கு டெல்லி மாநகராட்சியின் இந்த புதிய திட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் டெல்லிதான் முதன்மையான மாநிலமாக திகழ்ந்து கொண்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் தொடர்பாக மக்களுக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக டெல்லியில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தெற்கு டெல்லி மாநகராட்சியின் புதிய திட்டமும் அதன் ஒரு பகுதியாக இருக்கும். சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் நபர்களுக்கு, எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு மானியமும் வழங்கி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக