
பழைய வாகன அழிப்பு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பழைய வாகன அழிப்பு கொள்கை (Vehicle Scrappage Policy), இறுதியாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கையின் கீழ், தங்களது பழைய கார்களை ஸ்கிராப் செய்யும் நபர்கள், புதிய கார்களை வாங்கும்போது சாலை வரியில் தள்ளுபடி பெற முடியும்.
பயணிகள் வாகனங்கள் என்றால் 25 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதுவே வர்த்தக வாகனங்கள் என்றால் 15 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். அத்துடன் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ததற்கான சான்றிதழ் இருந்தால், புதிய வாகனங்களை வாங்கும்போது பதிவு கட்டணத்தையும் தள்ளுபடி செய்ய முடியும்.
மேலும் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ததற்கான சான்றிதழ் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீத தள்ளுபடியை வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பழைய வாகனங்களின் பதிவு சான்றிதழ் மற்றும் எஃப்சி-யை புதுப்பிப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பழைய வாகனங்களை பயன்படுத்தும் எண்ணம் மக்களிடம் இருந்து விலகும் என அரசு எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் எந்தவொரு தனியார் வாகனம் அல்லது வர்த்தக வாகனம் என்றாலும், ஃபிட்னஸ் சோதனையில் தோல்வியடைந்தாலோ அல்லது உரிமையாளர் சரியான நேரத்தில் பதிவை புதுப்பிக்க தவறினாலோ, அதன் ஆயுள் முடிவடைந்ததாக அறிவிக்கப்படும்.
கூடுதலாக பழைய வாகனங்கள் மீது மாநில அரசுகளால் பசுமை வரி விதிக்கப்படும். அதே நேரத்தில் ஸ்கிராப் செய்யப்படும் வாகனங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் ஸ்கிராப்பிங் மையங்கள் பராமரிக்கும். மேலும் ஸ்கிராப் செய்யப்படுவதற்கு முன்னதாக வாகனங்களின் உரிமையாளர் குறித்த தகவல்கள் வாகன் டேட்டாபேஸ் மூலம் சரிபார்க்கப்படும்.
திருடப்பட்ட வாகனங்கள் ஸ்கிராப் செய்ய அனுமதிக்கப்படாது. அதே சமயம் வாகனம் எங்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதன் உரிமையாளர் இந்தியாவின் எந்த பகுதியில் உள்ள ஸ்கிராப்பிங் மையத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். அதே நேரத்தில் தீ, கலவரம் மற்றும் பேரழிவுகளில் சேதமடைந்த வாகனங்கள் ஸ்கிராப் செய்வதற்கு தகுதி உடையவையாக கருதப்படும்.
பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம் மூலம் காற்று மாசுபாடு பிரச்னை குறையும். அத்துடன் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் இதன் மூலம் குறையும் என அரசு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பழைய வாகனங்களால் எரிபொருள் வீணாக அதிகளவில் செலவு ஆவதும், இந்த புதிய கொள்கையின் மூலம் தவிர்க்கப்படும்.
காற்று மாசுபாடு, சாலை விபத்துக்கள் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு ஆகிய மூன்றுமே இந்தியாவிற்கு பெரும் பிரச்னைகளாக இருந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பழைய வாகன அழிப்பு கொள்கை மூலம் புதிய வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக