
சூயஸ் கால்வாயில் பிரம்மாண்ட சரக்கு கப்பல் தரை தட்டி நிற்பதால், அங்கு போக்குவரத்து முடங்கி இருக்கிறது. இதனால், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்தில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இந்த கப்பலை மிதக்க விடுவதற்கான பணிகள் தொடர்ந்து தடங்கள் ஏற்பட்டு வருவதால், உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார பிரச்னை குறித்து கவலை அடைந்துள்ளன.
உலக கப்பல் போக்குவரத்தில் மிக முக்கிய நீர் வழித்தடமாக சூயஸ் கால்வாய் உள்ளது. உலக கப்பல் போக்குவரத்தில் 12 சதவீதம் அளவுக்கு இந்த சூயஸ் கால்வாய் வழியாகவே நடக்கிறது. இதற்கு காரணம், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவை மிக குறுகிய தூரத்திலும், நேரத்திலும் அடைவதற்கான வாய்ப்பை சூயஸ் கால்வாய் தருகிறது.
மத்திய தரைக்கடல் பகுதியையும், செங்கடலையும் இணைக்கும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்பட்டது. 163 கிமீ நீளமும், 300 மீ அகலமும் கொண்டதாக இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஆப்பிரிக்க கடல் பகுதியை சுற்றிக்கொண்டு செல்வதற்கு 34 நாட்கள் வரை பிடிக்கும். இந்த கால்வாயை கப்பல்கள் கடப்பதற்கு 16 மணிநேரம் பிடிக்கும்.
எனவேதான் சூயஸ் கால்வாய் உலக கப்பல் போக்குவரத்தில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த சூழலில், தைவான் நாட்டை சேர்ந்த எவர் க்ரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பிரம்மாண்ட சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயை கடக்கும்போது, சூறாவளி காற்றில் சிக்கி கட்டுப்பாட்டை இழந்தது. மேலும், திசை மாறி சூயஸ் கால்வாயின் இரு கரையையும் தொட்டு தரை தட்டிவிட்டது.
இந்த பிரம்மாண்ட கப்பல் மாட்டிக் கொண்டதற்கு மிக முக்கிய காரணம், இங்கே நாம் குறிப்பிட்டுள்ள சூயஸ் கால்வாயின் அகலத்தைவிட அதிக நீளம் கொண்ட எவர் க்ரீன் கப்பல் சூறாவளி காற்றில் சிக்கி கட்டுப்பாட்டை இழந்து திசை மாறியதே காரணம். அதாவது, 400 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் 300 மீட்டர் அகலம் கொண்ட சூயஸ் கால்வாயின் இரு கரையையும் தொட்டதால், தரை தட்டி மாட்டிக் கொண்டுவிட்டது. மேலும், கால்வாயின் குறுக்காக நிற்கிறது.
இதனால், இந்த வழித்தடத்தில் கப்பல் குறுக்காக தரை தட்டி நிற்பதால், கப்பல் போக்குவரத்து முடங்கிவிட்டது. கப்பலை மீட்பதற்காக, பொக்லைன் எந்திரங்கள் மூலமாக கரையில் மண்ணை வெட்டி எடுத்து கப்பலை மிதக்கவிடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அதேபோன்று, பார்ஜர் கப்பல்கள் உதவியுடன் கப்பலை திசை மாற்றி மிதக்க விடுவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.
சூயஸ் கால்வாயின் சில இடங்களில் இருவழித்தடம் உள்ளது. ஆனால், கப்பல் மாட்டிக் கொண்ட இடம் ஒரே ஒரு வழித்தடம் கொண்டதாக இருக்கிறது. இதனால்தான் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்து போய்விட்டது.
இந்த பிரச்னையால் சூயஸ் கால்வாய் வழியாக செல்ல வேண்டிய நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மணிக்கு ரூ.3,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கப்பலை மீட்கும் பணிகள் தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வருவதால், பல நாடுகளுக்கு செல்ல வேண்டிய சரக்குககள் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த வழியாகவே கச்சா எண்ணெய் ஏற்றிவரும் டேங்கர் கப்பல்களும் நிற்பதால், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு கார்களை ஏற்றி வரும் கப்பல்களும் இந்த வழியாகவே வர வேண்டி இருக்கிறது. இதனால், வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும். இதுமட்டுமின்றி, பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள், மூலப்பொருட்களை ஏற்றிவரும் சரக்கு கப்பல்களும் வருவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என பல நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன.
இந்த சம்பவத்திற்கு கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த கப்பலை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இரண்டு கப்பல் மீட்பு நிறுவனங்கள் மூலமாக கப்பலை சேதமில்லாமல் மிதக்க விடும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. 8 பார்ஜர் இழுவை கப்பல்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் நடக்கின்றன. கூடுதலாக மீட்பு மற்றும் பார்ஜர்களை கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. எவ்வளவு திறன் கொடுத்தால் கப்பல் நகரும் என்பது குறித்த கணக்கீடுகளை செய்து, அதற்கு தக்கவாறு திறன் கொண்ட பார்ஜர்களை ஈடுபடுத்தும் திட்டம் உள்ளதாக மீட்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில், பழைய சூயஸ் கால்வாயை எகிப்து அரசு திறந்துள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்து வரும் நாட்களில் சீரடைவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், எவர் க்ரீன் கப்பலை மிதக்க விட்டு, அங்கிருந்து கடலுக்கு கொண்டு வந்தால் மட்டுமே சூயஸ் கால்வாய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும்.
உலகின் மிகவும் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் க்ரீன், ஒரே நேரத்தில் 20,000 கன்டெய்னர்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது. 2018ம் ஆண்டு கட்டப்பட்டு இருக்கிறது. இந்த கப்பலை இயக்கியது இந்திய மாலுமிகள் குழு என்பது தெரிய வந்துள்ளது. இந்த கப்பலில் மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் என 25 பேர் கொண்ட குழு இருக்கின்றனர். அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக