
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார்களுக்கான பிரத்யேக கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முதல் காரின் டீசர் வீடியோக்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் மின்சார கார்களை உருவாக்குவதற்காக புதிய கட்டமைப்புக் கொள்கையை பின்பற்ற உள்ளது. ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் Electric Global Modular Platform (E-GMP) என்ற பெயரிலான இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையில்தான் இனி கியா நிறுவனத்தின் புத்தம் புதிய மின்சார கார் மாடல்கள் உருவாக்கப்பட உள்ளன.
இந்த புதிய இ-ஜிஎம்பி என்ற கட்டமைப்புக் கொள்கையில் EV-6 என்ற பெயரில் குறிப்பிடப்படும் முதல் மின்சார கார் மாடலை கியா மோட்டார் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த மாதமே இந்த புதிய மின்சார காரை பொது பார்வைக்கு கொண்டு வருவதற்கும் கியா திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், தனது வாடிக்கையாளர்கள், கார் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், இந்த கார் வருகையை தெரிவிப்பதற்காக இவி-6 காரின் டீசர்களை கியா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதிய கியா இவி-6 எலெக்ட்ரிக் கார் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களிலும் முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், முழுமையான எலெக்ட்ரிக் கார் என்பதை குறிக்கும் வகையில் தனது மின்சார கார்களை EV என்ற வரிசையிலேயே அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
டீசர் படங்களை வைத்து பார்க்கும்போது புதிய கியா எலெக்ட்ரிக் கார் மாடலானது, க்ராஸ்ஓவர் டிசைனில் எஸ்யூவி மாடலாக வர இருப்பது புலனாகிறது. பானட்டில் மிக வலிமையான தோற்றத்தை தரும் வகையில் மடிப்புகளுடன் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.
எல்இடி ஹெட்லைட்டுகள், கவர்ச்சிகரமான எல்இடி பகல்நேர விளக்குகள், கூபே கார் போன்ற கூரை அமைப்பு ஆகியவை இந்த காரின் முக்கிய அம்சங்களாக உள்ளன. ரியர் ஸ்பாய்லர், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெறும் என்று தெரிகிறது.
இன்டீரியர் டிசைன் குறித்து படங்கள் மற்றும் விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், மிகவும் நவீனத்துவம் நிறைந்த டிசைன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் எதிர்பார்க்கலாம்.
ஹூண்டாய் நிறுவனம் அண்மையில் இ-ஜிஎம்பி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட ஐயோனிக்-5 என்ற முதல் கார் மாடலை அண்மையில் வெளியிட்டது. இதே தொழில்நுட்ப அம்சங்கள், கியா இவி6 எலெக்ட்ரிக் காரிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, 300 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் இடம்பெறும். இந்த கார் மிக விரைவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளதால், அப்போது பேட்டரி, ரேஞ்ச், செயல்திறன் உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை தெரிந்து கொள்ள இயலும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக