நாம் அனைவருமே மூட்டு வலிகளை அனுபவித்திருப்போம். மூட்டு வலி ஒருவருக்கு வேதனையை வழங்குவதோடு, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் கஷ்டப்படுத்த வைக்கும். பொதுவாக வயதாகும் போது எலும்புகள் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் பலவீனமாகும். அதில் வயதான காலத்தில் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நிலை, எலும்புகளை மிகவும் பலவீனமாக அல்லது உடையக்கூடியதாக்கும்.
பொதுவாக நம் உடல் தொடர்ந்து பழைய எலும்பு திசுக்களை புதிதாக மாற்றுகிறது. ஆனால் ஆஸ்டியோபோரோசிஸில், புதிய எலும்பு திசுக்களின் உருவாக்கம் தாமதமாகும். இந்த நிலை பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பிறகு வயதானவர்களையோ அல்லது பெண்களையோ பாதிக்கிறது. ஆனால் தற்போது இந்த நிலை இளைஞர்களிடையே பொதுவானதாகி வருகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். ஏனெனில் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே எளிதில் காயப்படுத்திக் கொள்ளக்கூடும் மற்றும் அந்த காயம் குணமாவதற்கு அதிக நேரமும் எடுக்கும்.
நீங்கள் ஆஸ்டியோபோரோசிஸ் அறிகுறிகளை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கூடுதலாக, எலும்புகளை இயற்கையாக வலுப்படுத்த உணவுகளின் மூலம் முடியும். குறிப்பாக பழங்களைக் கொண்டு எலும்புகளைப் பலப்படுத்தலாம். கீழே எலும்புகளை வலுப்படுத்த உதவும் கோடைக்கால பழங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அன்னாசிப்பழம்
புளிப்பான மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் அன்னாசியில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. ஆய்வுகளின் படி, பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உடலில் உள்ள அமிலத்தை நடுநிலையாக்க உதவுகிறது. இதனால் கால்சியம் அதிகமாக இழக்கப்படுவது குறையும். இது தரவி, அன்னாசியில் வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் போன்ற எலும்புகளின் வலிமைக்குத் தேவையான இரண்டு முக்கிய சத்துக்கள் உள்ளன.
ஸ்ட்ராபெர்ரி
இந்த அடர் சிவப்பு நிற புளிப்பான ஸ்ட்ராபெர்ரி பழம் புத்துணர்ச்சி அளிப்பதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது எலும்புகளில் சிதைவை ஏற்படுத்தக்கூடிய ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும், இதில் கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற புதிய எலும்புகளின் உருவாக்கத்திற்கு உதவும் சத்துக்களும் நிறைந்துள்ளன.
ஆப்பிள்
தற்போது ஆப்பிளை ஆண்டு முழுவதும் காணலாம். நீங்கள் இதுவரை போதுமான ஆப்பிள்களை சாப்பிடாமல் இருப்பவராயின், இனிமேல் சாப்பிட ஆரம்பியுங்கள். ஏனெனில் ஆப்பிள்களில் கால்சியம் அதிகம் இருப்பதுடன், கொலாஜென் உற்பத்திக்கு அத்தியாவசியமான மற்றும் புதிய எலும்புகளின் செயல்பாட்டைத் தூண்டும் வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளன.
பப்பாளி
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய இனிப்புச் சுவையுடைய பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளி கோடைக்காலத்தில் நம் வயிற்றிற்கு இதமான உணர்வைத் தருகிறது. அதோடு இது பழங்களிலேயே மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது எலும்புகள், சருமம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியில் அதிசயங்களை ஏற்படுத்தக்கூடும்.
தக்காளி
தக்காளியில் வைட்டமின் கே, கால்சியம் மற்றும் லைகோபைன் போன்றவை அதிகம் உள்ளன. இவை எலும்புகளில் உள்ள பிரச்சனையை சரிசெய்து வலிமைப்படுத்தவும், எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தவும் செய்கின்றன. எனவே அன்றாட உணவில் தக்காளியை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
முடிவு
எலும்புகளை வலிமையாக்க உதவும் கோடைக்கால உணவுகள் ஏராளமாக உள்ளன. ஆனால் கோடையில் பழங்களை அதிகம் சாப்பிட பலரும் விரும்புவோம். எனவே இந்த கோடையில் உங்களின் எலும்புகளை வலுப்படுத்த மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக